- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
மேலும் சில வாரங்கள் கழிந்த நிலையில்.
நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் உறக்கத்தில் இருந்த வாசுதேவனின் கைப்பேசி ஒலித்தது.
எடுத்ததுமே, “மாமா கதவை திறங்க..” என்ற வேதாந்தின் குரல்.
“வரேன் மாப்பிள்ளை..” என்றவர் சற்று முன் தான் பேத்தியை உறங்க வைத்து தானும் உறங்க சென்றார்.
ஆம் வேதாந்த் - க்ருதிக்கு சுகப்ரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது.
அதனால் தினமும் மனைவி குழந்தையை பார்க்க மாமனார் வீட்டிற்கு வந்துவிடுபவன் சில நாட்கள் அங்கேயே தங்குவதும் உண்டு, அதிலும் கடந்த மூன்று நாட்களாகவே வெளியூர் சென்றிருந்தவன் இன்று ஊர் திரும்பியதும் நள்ளிரவு என்றும் பாராமல் இங்கே வந்துவிட்டான்.
வாசுதேவன் கதவை திறந்திட, “க்ருதி தூங்கியாச்சா மாமா? பாப்பா என்ன பண்றா?” என்றான்.
“குழந்தைங்க இப்போ தான் மாப்பிள்ளை தூங்கினாங்க..” என்றிட குளித்து விட்டு மனைவியின் அறைக்கு சென்றான்.
அங்கே உத்ராவின் மடியில் தலை வைத்து அவளோடு பேசிக்கொண்டு இருந்தவள் இன்னும் உறங்கவில்லை.
“வந்துட்டியா ஆரி..” என்ற உத்ரா, “இவ்ளோ நேரம் நீ கால் எடுக்கலைன்னு என்னை போட்டு படுத்தி எடுத்துட்டா, பார்த்துக்கோ..” என்று சொல்ல கதவை சாற்றி விட்டு திரும்பியவனை மெல்லிய விசும்பலோடு அணைத்துக்கொண்டாள் க்ருதி மிருதுளா.
“என்னாச்சுடா?” என்று மனைவி முகத்தை நிமிர்த்திட, “ஒண்ணுமில்லை, நாளைக்கு பங்க்ஷனுக்கு நீங்க வர மாட்டீங்களோன்னு நினைச்சேன்..”
“நம்ம பொண்ணோட பெயர் சூட்டும் விசேஷத்துக்கு எப்படி வராமல் போவேன்?!” என்று சிரித்தவன் டிஷர்ட்டை கழற்றி விட்டு தொட்டிலில் இருந்த மகளிடம் சென்றான்.
“பூக்குவியலை உறங்கி கொண்டிருந்த மகளை கண் எடுக்காமல் பார்த்திருந்தான். குழந்தையை அள்ளிக்கொள்ள கைகள் பரபரத்தாலும் அமைதியாக ரசித்திருந்தான்.
எப்போதும் குழந்தை உறங்கும் போது தொந்தரவு செய்ய மாட்டான்.. “க்ருதி தூங்கிட்டதா மாமா சொன்னாங்களே?!” என்றான்.
“தூங்கினேன் ஆனா உங்க நியாபகமா இருந்ததுல கொஞ்சம் முந்தி தான் எந்திரிச்சுட்டேன்.. குழந்தையை பார்க்க வந்த அண்ணி நான் இப்படி இருக்கிறதை பார்த்து பேச்சு கொடுத்து தூங்க வைக்க முயற்சி பண்ணினாங்க..”
“நீங்க சாப்டீங்களா? தோசை வார்க்கட்டுமா?” என்ற மனைவியை கையை பிடித்து நிறுத்தியவன், “அதெல்லாம் எப்போவோ ஆச்சு க்ருதி..” என்று அவளோடு படுக்கையில் அமர்ந்தான்.
“நாளைக்கு முழுக்க இருப்பீங்களா? இல்லை அவசர வேலை எதாவஹ்டு இருக்கா? கிளம்பிடுவீங்களா?!” என்று கேட்கவும் அவன் இளநகையோடு மனைவியை பார்த்தவன்,
“ஏன் க்ருதிக்கு வேற ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா?” என்றான்.
“ஆமாங்க, எனக்கு சுகப்பிரசவம் நடக்கனும்னு அத்தை குலதெய்வம் கோவிலுக்கு பொங்கல் வைப்பதா வேண்டிகிட்டு இருக்காங்கலாம்..”
“அதுக்கென்ன பங்க்ஷன் முடிச்சுட்டு கிளம்பலாம் க்ருதி..” என்றவன், “மறந்துட்டேன் பாரு..” என்று எழுந்து கொண்டவன், தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து தயிர் வடையை எடுத்தான்.
“வாவ்! ஆனா இந்நேரத்துக்கு எப்படிங்க?” என்றாள் புன்னகையோடு.
“நைட் டின்னர் முடிச்சுட்டு கிளம்பும் போது தான் கவனிச்சேன்.. அங்கே இது ரொம்ப ஸ்பெஷலாம்.. எப்படி இருக்கு டேஸ்ட் பண்ணி சொல்லு க்ருதி..” என்றான்.
“இந்நேரத்துக்கு சாப்பிடலாமா தெரியலையே.. குழந்தைக்கு ஒத்துக்காம போச்சுதுன்னா…” என்று க்ருதி சொல்ல, “குட்டி பைட் எதுவும் ஆகாது, மீதி நாளைக்கு சாப்பிட்டுக்கோ..” என்றவன் மனைவிக்கு ஊட்டி விட்டான்.
“நல்லா இருக்குங்க. பட் டேஸ்ட் டிஃபரண்டா இருக்கு, உங்களுக்கு எப்படி இருந்தது?”
“நான் இன்னும் சாப்பிடலையே..”
“என்ன நீங்க?!” என்று புன்னகைத்தவள் கணவனுக்கு ஊட்டி விட “எஸ், ஏதோ எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்காங்க போல..” என்றவன் அருகில் இருந்த ஃப்ளாஸிலிருந்து மனைவிக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.
அதேநேரம் அவர்களின் மகள் சிணுங்க, “குட்டி அப்பாவை கண்டு பிடிச்சுட்டாங்க போல..” என்றபடி குழந்தையை எடுத்து வந்து கணவனிடம் கொடுத்தாள்.
“அடடா என் செல்லக்குட்டிக்கு தூக்கம் சரியா வரலையா? வாங்க அப்பா தூங்க வைக்கிறேன்..” என்று மகளை மார்போடு அணைத்து கொண்டு உறங்க வைக்க தொடங்கினான்.
************
அடுத்த நாள் அதிகாலை முதலே வாசுதேவனின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது.
இருக்காதா பின்னே! குழந்தையின் முதல் வைபவம் அன்று.
ஆம் வேதாந்த் க்ருதியின் தேவதைக்கு பெயர் சூட்டும் விழா என்பதால், வாசல் முழுவதும் வண்ண வண்ணக் கோலங்கள் விரிந்திருக்க, மலர்களின் நறுமணம் வீடு முழுவதும் பரவியிருக்க.. வீடு முழுவதும் உறவினர்களின் சிரிப்பும், குழந்தைகளின் ஓட்டமும் நிறைந்து இருந்தது
பூஜை அறையில் விளக்கேற்றி வைத்திருந்த கிரிஜா, இறைவனை மனமார வேண்டிக் கொண்டார்.
சைலேந்தர் குடும்பம் ஹாலில் குழுமியிருக்க மகளோடு இரவு தாமதமாக உறங்கிய வேதாந்த் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அங்கே வந்தான்.
அவன் கரங்களில் பட்டு துணியில் சுற்றப்பட்டிருந்தாள் அவனது குட்டி தேவதை. குழந்தைகள் அவனை சூழ்ந்து கொண்டு குழந்தையை கொஞ்ச தொடங்கினர்.
“மித்து எங்கே ஆரி?” என்றாள் உத்ரா.
“வந்துட்டேன் அண்ணி, என்ன விஷயம் சொல்லுங்க..” என்ற க்ருதி மிருதுளா, இளஞ்சிவப்பு நிற பட்டுப் புடவையில் தேவதையைப் போல ஜொலித்தாள்.
பிரசவத்தின் சோர்வு இன்னும் முகத்தில் இருந்தாலும்.. தாய்மையின் ஒளி அவளை மேலும் அழகாக காட்டியது.
“எப்போ இருந்து உனக்காக காத்திருக்கேன், ஏன் இவ்ளோ லேட்? உட்கார்ந்து முதல்ல பால் குடி..” என்றபடி பாலை கையில் கொடுத்தாள்.
“மாமா இன்னைக்கு ஏஞ்சலுக்கு தான் நேம் வைக்க போறோம் ஆனா அவ இன்னும் குளிக்காமலே இருக்காளே.. ஏன்?” என்றான் யுவராஜ்.
“குட்டிமா ரொம்ப ஸாப்ட், சென்ஸிடிவ் ஸோ இவ்ளோ சீக்கிரம் குளிக்க வச்சா அவங்களுக்கு சளி ஜுரம் வர வாய்ப்பு இருக்கு யுவி..இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு பாட்டி குளிக்க வைப்பாங்க…” என்றவள் மகன்களுக்கும் பாலை கொடுத்து குடிக்க வைத்தாள்.
“பாப்பாவுக்கு நான் சூப்பரான பேர் செலெக்ட் பண்ணி இருக்கேன் சித்தப்பா..” என்று ரியா சொல்ல, மற்ற குழந்தைகளும் ஆளாளுக்கு அவளுக்கு ஒரு பெயர் சொன்னார்கள்.
“எல்லாரும் சூப்பரா செலெக்ட் பண்ணி இருக்கீங்க ஆனா குட்டிக்கு பைனல் பேர் வைக்க போறது வாசுப்பா தான்!! என்று மாமனாரை பார்க்க இனிய அதிர்வோடு மாப்பிள்ளையை பார்த்தார்.
இருக்காதா பின்னே! குழந்தை பிறந்தது முதலே க்ருதி அவளுக்கு பெயர் தேடுவதை கண்ட வேதாந்த், “க்ருதி கஷ்டபட்டுக்க வேண்டாம், மாமா தான் நம்ம பாப்பாவுக்கு பேர் வைக்க போறாங்க..” என்று சொல்ல அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு.
“நிஜமாவா சொல்றீங்க?”
“ஏன் க்ருதிக்கு, அத்தை நேம் செலெக்ட் பண்ணும் போது குட்டி க்ருதிக்கு மாமா செலெக்ட் பண்ண கூடாதா?” என்று கேட்டு அவளை அசரடித்தான்.
க்ருதிக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று கிரிஜா சொல்ல வேதாந்தோ பெண் குழந்தை தான் என்று அடித்து சொல்லி இருந்தான்.
அதுமட்டுமில்லாமல் வாசுதேவனிடம், ‘மாமா... அத்தை இழந்த சந்தோஷத்தை கடவுள் திருப்பி கொடுக்க முடியாது. ஆனா, அவங்களோட அன்பும் ஆசீர்வாதமும் நிச்சயம் எங்களுக்கு குழந்தையா திரும்பி வரும்… இந்த முறை உங்களோடும் க்ருதியோடும் அவங்க இழந்த வாழ்க்கையை சந்தோஷமா வாழ்வாங்க...’ என்று நம்பிக்கையோடு சொல்லியிருந்தான்.
அவன் சொன்னது போலவே பெண் குழந்தை பிறந்திருக்க, அன்று வாசுதேவனின் மனம் அளவிட முடியாத மகிழ்ச்சியில் திளைத்தது.
மருமகன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இறைவனின் வாக்காய் பலித்ததை நினைத்தவர், பேத்தியை கைகளில் ஏந்திய நொடி மனம் சிலிர்த்தது.
நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்த பல வருட வேதனைகள், பேத்தியின் ஸ்பரிசத்தை உணர்ந்த அந்தக் கணமே அடித்துச் செல்லப்பட்டதைப் போல, மகிழ்ச்சிக் கண்ணீர் அவரது விழிகளை நிறைத்தது.
“நான் தான் சொன்னேனே நிச்சயம் சௌந்தர்யாவே உனக்கு மகளாக வந்து பிறப்பான்னு.. இதோ பாரு இப்போ முக ஜாடை இன்னும் நல்லா திரும்பி இருக்கு..” என்றிட க்ருதி முகம் பூரித்து போனது.
“எல்லா சந்தோஷமும் உனக்கே கிடைக்கணும்… எப்பவும் இந்த மகிழ்ச்சி நிறைந்திருக்கணும் மித்து..” என்று ஆசீர்வதிக்க, க்ருதி அவரை கட்டிக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் வாசுதேவன், சைலேந்தர், வாகீஸ்வரி, நிலவன், அர்ஜூன் என அனைவரும் பூஜை அறையில் ஒன்று கூடினர்.
ஐயர் மந்திரங்களை ஓத ஆரம்பித்தார்.
மந்திர ஓசை வீடு முழுவதும் ஒரு தெய்வீக மணம் கமழ செய்தது.
“குழந்தையை தாத்தா மடியில் அமர வையுங்கள்…” என்றார் ஐயர்.
வேதாந்த் தன் மகளை வாசுதேவனின் கரங்களில் கொடுத்தான். அவரோ நெஞ்சம் நிறைந்த மகிழ்வோடு பேத்தியை ஏந்தினார். அந்த நொடி அவரது கண்கள் தம் போக்கில் தானாகவே கலங்கின.
“என்ன வாசு?” என்றார் சைலேந்தர்.
“என் பொண்ண இப்படி குழந்தையா கையில வாங்கினது நேத்த நடந்த மாதிரி இருக்கு... இன்னைக்கு அவளோட பொண்ணை என் கையில தூக்கி இருக்கேன்... இதைவிட பெரிய சந்தோஷம் வேற என்ன வேணும்?” என்றார்.
அவர் வார்த்தைகளில் க்ருதியின் கண்களிலும் நீர் திரண்டு விட்டது… வேதாந்த் மெல்ல மனைவியை அணைத்துக் கொண்டான்.
“குழந்தையோட பேரை காதுல மூணு முறை சொல்லுங்கோ…” என்றதும் வாசுதேவன் குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவள் காதருகே குனிந்தார்.
அனைவருமே அவர் என்ன பெயர் சொல்ல போகிறார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாய் காத்திருந்தனர்.
பேத்தியின் காதில் மிக மென்மையான குரலில்… “விஹானிகா வேதாந்த்…” என்றிட குழந்தை கண்களை மெதுவாகத் திறந்து அவரை பார்த்தது.
அங்கிருந்த அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
இன்னும் இரண்டு முறை குழந்தையின் பெயரைச் சொல்லி, பேத்தியின் உச்சந்தலையில் முத்தமிட்டார்.
“வாவ்! வாசுப்பா ஏஞ்சளோட நேம் சூப்பரா இருக்கு..” என்று ரியா சொல்ல, “இனிமேல் இந்த வீட்டோட குட்டி தேவதை... நம்ம விஹானிகா…” என்றான் யுவராஜ்.
“அப்போ பெரிய தேவதை யாருடா?” என்று அர்ஜுன் கேட்க, “நம்ம ரியா அக்கா தான்!! அப்படி தானே வாசுப்பா சொல்லுவாங்க..” என்று சிரித்தான்.
அடுத்து “விஹானிகா…” என்று வேதாந்த் மெதுவாக மகளை அழைத்தான். தந்தை குரலில் மகளின் இதழ்கள் மென்மையாய் விரிந்தன.
“அடடே... அப்பா குரல் கேட்டதும் சிரிக்கிறாளே…” என்று நிலவன் சொல்ல, குழந்தை தன் பொக்கை வாயை திறந்து இன்னும் அழகாய் சிரித்தது.
“பாப்பாவோட பேர் ரொம்ப அழகா இருக்கு… எப்படி செலெக்ட் பண்ணீங்க வாசுப்பா?” என்றான் அர்ஜூன்.
“அதுவும் சித்தி தான் மித்துவுக்கு பிறக்க போறதா அம்மா சொன்னதை வச்சு நீங்க சௌந்தர்யான்னு பேர் வைப்பீங்கன்னு நினைச்சேன் ஆனா ரொம்ப ட்ரென்டிங்கா இருக்கு.. விஹானிகா அர்த்தம் என்ன வாசுப்பா?...” என்றாள் மஹிமா.
“விஹானிகா என்றால் விடியலைப் போல வாழ்க்கையில் ஒளி கொண்டு வந்தவள் என்று பொருள் அதனால்தான் இந்த பெயர்…” என்று வாசுதேவன் சொல்ல அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
சௌந்தர்யாவின் இழப்பால் இருண்டு போயிருந்த அவர் வாழ்க்கையில் மீண்டும் விடியலாக வந்து அவர் இழந்த மகிழ்ச்சியை மீட்டுத் தந்தவள்... என்பதால் தன் பேத்திக்கு “விஹானிகா..” என்று பெயர் வைத்திருந்தார்.
சில இழப்புகளை காலம் ஒரு போதும் ஈடு செய்யாது. ஆனால், அந்த இழப்பின் வலியை தாங்கும் அளவுக்கு புதிய மகிழ்ச்சியை மட்டும் பரிசளிக்கும்.
அந்த மகிழ்ச்சியின் வடிவமாகவே அவர்கள் வாழ்வில் வந்திருந்த விஹானிகா வாசுதேவனின் வாழ்வில் மீண்டும் விடியலை விதைத்தாள்.
அவரது ஒவ்வொரு நொடியையும் அழகானதாகவும், மகிழ்வானதாகவும், இன்றியமையாததாகவும் மாற்றி, நீண்ட நாட்களாக நிறமிழந்திருந்து போயிருந்த அவர் வாழ்க்கையை மீண்டும் வண்ணமயமாக்கினாள்.
Comments
Post a Comment