- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
“இதுக்கு அப்புறம் எனக்கு வாழ்க்கையில் என்ன இருக்கு? கிட்டத்தட்ட இது என்னை நானே உயிரோட கொல்றதுக்கு சமம். என்னதான் அவ இறந்து போயிட்டாலும் என்னால அதை ஏத்துக்க முடியல, அதுதான் நானும் அவகூடவே போக முடிவு பண்ணிட்டேன்” என்று கண்ணீரோடு வேதாந்தை பார்த்தவர்,
“ஆனா கண்ணை மூடினவனுக்கு என் பொண்ணோட முகம் தெரியவும் சட்டுன்னு எழுந்துட்டேன்…”
“எனக்காக இல்லன்னாலும் என் மகளுக்காக நான் வாழ்ந்து தானே ஆகணும்?! ஒருவேளை நான் அவ கூடவே போய் சேர்ந்துட்டா, நிச்சயமா என் ரியா என்னை மன்னிக்க மாட்டா... அதனால ட்ரெயின் வரவும் தனியா ஒதுங்கி வந்துட்டேன்..”
“வந்துட்டேனே தவிர்த்து என்னால நிற்க முடியலை.. திரும்ப போய் அவளை எடுத்துட்டு வந்துடலாம்னு முடிவு பண்ணி பக்கத்துல போன நொடி ட்ரெயின் வேகமா அவ மேல..” என்றவர் தொண்டை அடைக்க தன்னை கட்டுபடுத்த அரும்பாடு பட்டுப் போனார்.
“சத்தியமா அந்தக் காட்சியைப் பார்க்கிற தைரியம் எனக்கு இல்லை.. க... கண் இமைக்கிற நேரத்துல அவளோட ஆசை நிறைவேறிடுச்சு..” என்றவர் உடல் மௌனக் கண்ணீரில் குலுங்கியது.
“அதேநேரம் எங்களை தேடி அண்ணனும் இன்னும் சிலரும் அங்கே வந்தாங்க.. அவங்க கிட்ட ரியா தண்டவாளத்தை தாண்டும் போது எதிர்பாராம ஆக்சிடென்ட் நடந்துருக்குன்னு சொன்னேன்.. எல்லாரும் இருந்த அதிர்ச்சியில வேற எதையும் கவனிக்கலை..” என்றவர் ஒரு ஆழ்ந்த மூச்சோடு கண்களை அழுந்த துடைத்தார்.
“அதுக்கு அப்புறம் என் வாழ்க்கை அங்கே நின்னு போச்சு மாப்பிள்ளை. அன்னைக்கு நான் நடந்துகிட்டது எல்லாம் ஒரு மனுஷனா இல்ல... உயிரில்லாத உடம்பா தான் நடந்துகிட்டேன், அந்த நாளை நினைக்காத ஒரு நாள்கூட என் வாழ்க்கையில இல்லை...” என்றார் வாசுதேவன்.
அவர் வார்த்தைகளைக் கேட்ட வேதாந்திற்கு தொண்டை அடைத்துப் போனது.
வாசுதேவன் அன்றைய கொடூர நிகழ்வை சொல்லி முடிக்க வேதாந்தின் முகத்தில் அப்படி ஒரு வலி.
மாமனாரின் வேதனையைத் தாங்க முடியாமல், அவரது தோள் மீது நடுங்கும் தன் கரத்தை வைத்து அவரை இறுகப் பற்றிக் கொண்டான்.
“அறிவு உங்களை ஏத்துகிட்டாலும் மனசை அத்தனை சுலபமா மாத்திக்க முடியலை… முடிந்தவரை விட்டு விலக தான் பார்த்தது..”
“என் மனைவிக்கு அப்படி ஒரு கொடூரம் நிகழ்த்தினது மட்டுமில்லாமல் சட்டத்தை காக்க வேண்டிய சிலரே மனிதத்தன்மையை மறந்து அவளை குப்பை மாதிரி வீசிட்டு போனதுல எனக்கு போலீஸ்காரர்கள் மீது சுத்தமா நம்பிக்கை இல்லாம போயிடுச்சு…”
“என் பொண்ணு உங்களை விரும்புவான்னு நான் கனவிலும் நினைச்சு பார்க்கலை. நான் சம்மதம் சொன்ன நிமிஷத்துல இருந்து சந்தோஷத்தோட சேர்த்து என் பொண்ணு முகத்துல ஒரு வாட்டம் நிரந்தரமாகிடுச்சு…”
“நானும் எதையும் நினைக்க கூடாது என் மகளுக்கு அவளோட வாழ்க்கையின் முக்கிய தருணத்தை அழகா மாற்ற ரொம்பவே முயற்சித்தேன்… ஆனாலும் அவ கிட்ட ஏதோ ஒரு அலைகழிப்பு! அதை எப்படி தீர்ப்பதுன்னு தான் எனக்கு தெரியலை.. உங்க கிட்ட பேசறது மூலமா அதை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு தான் உங்களை தேடி வந்தேன்..”
“என் பெண்ணை பாதுகாப்பதில் தொடங்கி அவ மேல இருக்கிற காதல் குறையாம அவளை மரியாதையோடு நடத்தும் இப்படி ஒரு மாப்பிள்ளை நான் தேடி பிடிச்சாலும் கிடைக்க மாட்டாங்க. அதுல என் பெண்ணோட தேர்வில் எனக்கு பெருமை தான்!!” என்று புன்னகைக்க முயன்றார் ஆனால் முடியவில்லை.
மீண்டும் அங்கே கனத்த அமைதி நிலவ மெல்ல அதை உடைத்த வேதாந்த், “அத்தையோட நிலைமைக்கு காரணமானவங்களை நீங்க ஏன் மாமா தண்டிக்காம போனீங்க?” என்றான்.
“அவளோட கடைசி ஆசை என்னவோ அதை தான் நான் செய்தேன். தனக்கு நிகழ்ந்த அந்த கொடுமை யாருக்கும் தெரியறதை அவ விரும்பலை..”
“எங்க பொண்ணோட எதிர்காலத்தை பார்த்தவள் தன்னோட மரணத்துக்கு பிறகு எந்த ஒரு களங்கமும் மித்துவை பாதிக்க கூடாதுன்னு தான் நினைச்சா அதனால தான் என் மனசை இரும்பாக்கி கொண்டு அதை நான் செய்து முடித்தேன்..”
“மற்றவங்களுக்கு காரணம் தெரியாமல் போனாலும் போஸ்ட்மார்டம்ல நடந்ததை கண்டு பிடிச்சு இருப்பாங்களே மாமா?!”
“ஆமா, அவளோட நிலையை டாக்டர் ரிப்போர்ட் தெளிவா எடுத்து காமிச்சுடுச்சு.. இன்ஸ்பெக்டர் என்கிட்டே சொல்லி உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமான்னு கேட்டாங்க..”
“நான் எதையும் மறைக்காமல் தெரியும்னு சொன்னேன். அது மட்டுமில்லை அவ இறந்த பிறகு ரியாவோட ஆசையை நிறைவேற்றினேன் என்று சொல்லவும் அதை அவர் நம்ப தயாரா இல்லை.. மனைவி களங்கபட்டுட்டதால நானே அவளை கொன்னுட்டதா அவருக்கு சந்தேகம்…”
“நான் எவ்ளோ சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.. அப்புறம் ரியாவோட ஃப்ரெண்ட், என் மாமியார் வீட்ல என்று விசாரிக்கும் போது ஒருத்தர் விடாமல் எங்களோட இணக்கமான திருமண வாழ்வை பற்றி எடுத்து சொல்லவும் தான் நம்பினார்...”
“ஆனாலும் குற்றவாளிகளை விடக்கூடாது அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும் என்று சொன்னார் ஆனா ரியாவுக்கு நிம்மதியான இறுதி மரியாதை கிடைக்கனும்னு சொல்லி நானும் அண்ணாவும் வெளியே சொல்ல விடாம செய்துட்டோம்…”
“அடுத்த நாள் அங்கே இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பல மாவட்டங்களிலிருந்து போலீசார் வந்திருந்தாங்க. அந்த அளவுக்கு கூட்டம் இருந்தப்போ, அதுல யார் ரியாவோட நிலைக்கு காரணம்னு கண்டுபிடிக்கிறதும் அவ்வளவு சுலபமா இல்ல மாப்பிள்ளை...”
“அதைவிட, முதல்ல அவ்ளோ வீரியமா குற்றவாளிகளை கண்டுபிடிக்கணும்னு சொன்ன இன்ஸ்பெக்டர், குற்றவாளிகள் போலீஸ்காரங்கள்னு தெரிய வந்ததுக்கப்புறம் கொஞ்சம் யோசிச்சு பேச ஆரம்பிச்சாரு…”
“அது விசாரணை சிக்கலாகப் போகுமோ, அழுத்தங்கள் வருமோன்னு அவருக்கே ஒரு தயக்கம் இருந்த மாதிரி தெரிஞ்சது... அந்த நிமிஷத்துலதான் என் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா உடைய ஆரம்பிச்சுச்சு..” என்றவரின் இறுதி வரியே அவரின் வலியை அப்பட்டமாய் எடுத்து காண்பித்தது.
“என்னால என் மனைவியை தான் காப்பாற்ற முடியலை அவளோட பேரையாவது காப்பாற்ற நினைச்சு என் மனசை கல்லாக்கிகிட்டு ஒவ்வொன்னையும் செய்தேன்..” என்றார் வேதனையோடு.
“உங்களோட நிலைமை எனக்கு புரியுது மாமா ஆனா குற்றவாளிகளை இத்தனை வருஷம் தப்பிக்க விட்டதால மேலும் எத்தனை தவறுகள் நடந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க..”“இந்த விஷயத்தை இப்படியே என்னால விட முடியாது மாமா. தப்பு பண்ணினவங்களுக்கு என்னைக்கு இருந்தாலும் தண்டனை கிடைச்சே தீரும். நீங்க எதை பற்றியும் யோசிக்காதீங்க இனி நான் பார்த்துக்கிறேன்..” என்று வேதாந்த் சொல்ல வாசு பலமாக தலையை அசைத்து ஆட்சேபித்தார்.
“இல்ல வேண்டாம் மாப்பிள்ளை. நடந்தது நடந்து போச்சு. இனி யாரைத் தேடி தண்டிச்சாலும் என்னோட ரியா திரும்ப வரப்போறதில்லை…”
“சட்டத்தை காப்பாற்ற கூடிய ஒரு சிலர் செய்த தவறால அன்னையிலிருந்தே போலீஸ்காரர்கள் மேல எனக்கு ஒரு மோசமான அபிப்பிராயம். ஆனா அந்தச் சேற்றுக்கு மத்தியில மலர்ந்த செந்தாமரை மாதிரி என் கண்ணு முன்னாடி நீங்க இருக்கீங்க!!”
“அன்னைக்கு ரியாவோட நிலைமைக்கு காரணமானவங்க எல்லாரும் இன்னைக்கு நிச்சயம் பெரிய பெரிய பதவியில இருப்பாங்க. அவங்க பதவியைக் காப்பாத்திக்க உங்களை ஏதாவது பண்ணிட்டா, அதுக்கப்புறம் என்னால தாங்க முடியாது…”
“என் பொண்ணு இப்போதான் நிம்மதியா வாழ ஆரம்பிச்சிருக்கா. அவளுக்கு நீங்கதான் உலகம்!! உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, அவ உயிரோட இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை மாப்பிள்ளை..” என்றவர் குரல் உடைந்து போனது.
“அன்னைக்கு ரியாவோட கண்ணுல தெரிஞ்ச பரிதவிப்பு, கண்ணீர், ஏக்கம்... அதெல்லாம் இன்னைக்கும் என் மனசை விட்டு போகலை. அந்த நினைவுகளே இந்த வலியையெல்லாம் சுமக்க வைக்குது. ஆனா இப்போ அதே விஷயத்துக்காக உங்களுக்கு ஏதாவது ஆபத்து வர்றதை என்னால ஏத்துக்க முடியாது…”
“எனக்காக இதை இப்படியே விட்டுடுங்க. என் பொண்ணுக்குக்கூட இந்த உண்மை தெரிய வேண்டாம். அவளால நிச்சயமா தாங்க முடியாது. சொல்லணும்னு இருந்தா இத்தனை வருஷத்துல நானே சொல்லியிருப்பேன். நான் சொல்லாம இருந்ததுலயே என்னோட முடிவு என்னன்னு நீங்க புரிஞ்சுக்கணும்…”
வாசுதேவனின் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த வேதாந்த், “மாமா, எல்லாரும் இப்படி நினைக்கிறதால தான் குற்றவாளிகள் தைரியமா சுத்திட்டு இருக்காங்க. பாதிக்கப்பட்டவங்க மட்டும் கடைசி வரைக்கும் வலியோட வாழ்க்கையை நகர்த்திக்கிட்டு இருக்காங்க…”
“என்னைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். என்னோட பாதுகாப்பை எப்படி பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும்...” என்றான் உறுதியுடன்.
“யானைக்கும் அடி சறுக்கும் மாப்பிள்ளை. எந்தக் காரணத்துக்காகவும் உங்க வாழ்க்கையை ஆபத்துல தள்ள நான் தயாரா இல்லை. என் பொண்ணோட சந்தோஷம் தான் என்னோட சந்தோஷம்!!”
“இப்போ கூட இந்த உண்மையை நான் உங்களுக்கு சொல்லியிருக்க மாட்டேன். ஆனா, நான் உங்களை வெறுக்கிறேன் என்றோ... பிடிக்காம ஒதுக்குறேன் என்றோ நீங்க நினைச்சிடக் கூடாதுன்னு தான் எல்லாத்தையும் சொன்னேன்…”
“அதைவிட நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஏதாவது மனக்கசப்பு இருந்தா, அதனால அதிகம் கஷ்டப்படப் போறது என் பொண்ணு தான்…”
“என் பொண்ணோட மனசு பூ மாதிரி மாப்பிள்ளை. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில கண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய திரை இருக்கு. அதனால் கூட அவளோட மனசு நோகறதை நான் விரும்பல…”
“அதனாலதான் இத்தனை வருஷமா ரியாவுக்கு என்ன நடந்ததுன்னு யாருக்குமே சொல்லலை. மித்துவுக்கு மட்டும் இல்ல, எங்க வீட்ல எந்தக் குழந்தைக்கும் தெரியாது. எதிர்பாராத விபத்துல இறந்துட்டான்னு தான் எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருக்கோம்…”
“கல்யாணமான முதல் இரண்டு நாள்ல உங்களுக்காக என் பொண்ணு கண்ணுல இருந்து வந்த கண்ணீர் இதுநாள் வரை நான் பார்க்காதது... இன்னொரு தடவை அவ அப்படி உடைஞ்சு அழறதை நான் பார்க்க விரும்பலை..”
“என் மனைவி மேல உங்களுக்கு இருக்கிற அன்பும் அக்கறையும், ஒரு போலீஸ் அதிகாரியா நியாயத்தை நிலை நாட்ட நினைக்கிற உங்களோட கடமை உணர்வும் எனக்கு நல்லாவே புரியுது...”
“ஆனா, இதுவே போதும் மாப்பிள்ளை! போலீஸ் டிபார்ட்மென்ட்ல உங்களை போன்ற அரிய வைரங்களும் இருக்காங்க என்று நம்புறதுக்கு நீங்க ஒருத்தரே போதும்..” என்று பெருமிதத்தோடு மாப்பிள்ளையை பார்த்தவர்,
“இப்படி ஒரு மருமகனை நான் தேடிப் பிடிச்சிருந்தாலும் என் பொண்ணுக்கு கிடைச்சிருக்க மாட்டான். என் பொண்ணை ரொம்ப பாதுகாப்பான கையில பிடிச்சுக் கொடுத்திருக்கேன்னு நினைக்கிற நிம்மதி எனக்கு காலம் முழுக்க இருக்கும்…”
“ஏற்கனவே உங்க வேலையில இருக்கிற ஆபத்தே போதும். இதையும் சேர்த்து உங்க உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துச்சுன்னா... அதுக்கப்புறம் என்னை நீங்க பார்க்க முடியாது…” என்றார் வேதனையுடன்.
“மாமா... என்ன பேசுறீங்க?” என்று அதிர்ந்தான் வேதாந்த்.
“உண்மையாத்தான் சொல்றேன் மாப்பிள்ளை. அதுக்கு மேல என் பொண்ணோட கண்ணீரைப் பார்க்கிற சக்தி எனக்கு இல்ல. இனி பார்க்கவும் விரும்பல, என்னைப் புரிஞ்சுக்கோங்க.. ஏற்கனவே இருக்கிற வேதனை போதும் அதிகபடுத்த வேண்டாம்..” என்றார் வாசுதேவன்.
அவரின் வேண்டுகோளை மீற மனமில்லாமல், அரை மனதோடு தலையசைத்தான் வேதாந்த்.
Comments
Post a Comment