தீராத காதல் தொல்லையோ?!... 27

 




ஹார்பரில் இருந்து ரியாவை மீட்ட பிறகும் பரபரப்பு அடங்கவில்லை.

வேதாந்த் கொடுத்த உத்தரவின் படி காவலர்கள் அந்த கடத்தல் கும்பலிடமிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுமிகளை மீட்கப்பட்டிருந்தனர். 

ரியாவை மட்டுமல்ல அவர்களையும் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லத் திட்டமிட்டிருந்த கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

அவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சட்ட நடைமுறைகளின்படி பாதுகாப்பாக ஒப்படைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றதில் வேதாந்தின் அலுவலகம் பரபரப்பில் மூழ்கியிருந்தது.

முக்கியமான வீடியோ கான்பிரன்ஸில் இருந்தவனிடம், “ஸார், பிரஸ் மீட் டைம் ஆச்சு…” என்று ஒரு காவலர் நினைவூட்டினார்.

“இன்னும் ஐந்து நிமிஷத்தில் வந்துடுறேன்..” என்றவன் கவனம் தனது அறையில் இருந்த சிசிடிவி திரை மீதி படிய அவன் பார்வை ஒரு காட்சியில் நிலைத்தது.

அங்கே இருந்தவர் அவன் மாமனார் வாசுதேவன்.

முதலில் தன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. உடனே குறிப்பிட்ட கேமரா காட்சியை  பெரிதாக்கிப் பார்க்க வந்திருந்தது உண்மையிலேயே வாசுதேவன் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியில் இருந்த காவலருக்கு அழைத்தான்.

“எஸ் ஸார்…”

“வெளியே காத்துட்டு இருக்கிற என் மாமனாரை உள்ளே அழைச்சிட்டு வாங்க…” என்றவன் மீண்டும் கான்பிரன்ஸில் இணைந்தான். 

வாசுதேவன் உள்ளே வரவும் அவரை வரவேற்று அமர்த்தியவன், “என்ன விஷயம் மாமா? இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க. ஏதாவது பிரச்சனையா?” என்றான்.

“அப்படி எதுவும் இல்ல மாப்பிள்ளை. ஆனா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்… வீட்டுல வச்சு பேசுறது சரியா இருக்காதுன்னு தோணிச்சு, அதான் இங்க வந்தேன். தொந்தரவு பண்ணிட்டேனா?” என்று அலுவலகத்தின் பரபரப்பை உணர்ந்தபடி கேட்டார் வாசுதேவன்.

அவரை ஆச்சரியமாகப் பார்த்த வேதாந்த் மெல்லிய புன்னகையுடன், “என்ன மாமா இப்படி கேட்டுட்டீங்க? உங்களால எனக்கு என்ன தொந்தரவு? ஆனா இப்போ கொஞ்சம் பிஸியா இருக்கேன்…” என்று மற்ற குழந்தைகளின் விபரங்களை சொன்னவன், 

“இப்போ பிரஸ் மீட் இருக்கு… அதுக்கு அடுத்து குழந்தைகளை ஒப்படைச்சு முடிக்கிற வரைக்கும் கஷ்டம்.. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க, நான் நாளைக்கு வந்து பேசறேன்..”

“இல்ல மாப்பிள்ளை, பரவாயில்லை. நான் காத்திருக்கேன். நீங்க உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க..” என்றார் வாசுதேவன் உறுதியாக.

அவரை நம்ப முடியாமல் பார்த்தவன், “சரி மாமா. ஏதாவது குடிக்கிறீங்களா?” என்றான்.

“இல்லை எதுவும் வேண்டாம்…”

“ஜூஸ் மட்டுமாவது..” என்றவன் காவலரை அழைத்து, வாசுதேவனுக்குப் பழச்சாறு கொண்டு வரச் சொல்லிவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் அரங்கத்தை நோக்கி நடந்தான்.

தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், இணைய ஊடகங்கள் என ஏராளமான பத்திரிகையாளர்கள் அங்கே காத்திருந்தனர். 

வேதாந்த் மேடையில் வந்து அமர்ந்ததும் சலசலப்பு அடங்கி அரங்கம் அமைதியாக அனைவரின் கவனமும் அவன் மீது குவிந்தது.

“கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த குழந்தைகள் கடத்தல் தொடர்பான விசாரணையில் இன்று மிக முக்கியமான வெற்றியை தமிழக காவல்துறை பெற்றுள்ளது…”

“ஹார்பர் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு சர்வதேச கடத்தல் கும்பலை நாங்கள் முற்றிலுமாகச் சிதறடித்துள்ளோம். அவர்களிடம் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்…”

“எட்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது…”

"மீட்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை எப்படி இருக்கிறது?”

“அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன…”

“ஸார் அவங்க இப்போ உங்களோட கஸ்டடியில் இருக்காங்களா இல்லை பெற்றவர்களிடம் ஒப்படைச்சாச்சா?”

“சட்ட நடைமுறைகள் முடிந்தவுடன் குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படுவார்கள்…” என்று அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு தன் அறைக்கு திரும்பினான்.

மனம் முழுக்க வாசுதேவன் அவனைத் தேடி வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி தான் சுழன்று கொண்டிருந்தது. 

மதியம் மூன்று மணி வரையிலும் வேதாந்திற்கு வேலை மூச்சு விட முடியாத அளவுக்கு இறுகிப் பிடித்திருந்தது. 

இடையில் வாசுதேவனுக்கு உணவு வாங்கி வர ஏற்பாடு செய்ய அவரோ ‘வேண்டாம்’ என்று மறுத்துவிட்டார். ‘நாளை பேசலாம்..’ என்று கிளம்ப சொன்ன போதும் அவர் தயாராக இல்லை. 

அதனால் கிடைத்த நேரத்தில் அவரை அழைத்து கொண்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பியதுமே உயர் தர ஹோட்டலுக்கு மாமனாரை அழைத்து சென்றான். 

“சாப்பிட்டு பேசலாம் தானே மாமா?!” 

“கண்டிப்பா! இன்னைக்கு முழுக்க உங்களுக்கு எவ்வளவு அலைச்சல்?! எப்பவும் இப்படி தான் நேரம் தவறி சாப்பிடுவீங்களா?” என்றவரின் அக்கறையில் வேதாந்த் இனிதாக அதிர்ந்து போனான். 

“இப்படி இருந்தா உடம்பு என்னாகும்? வயசுல நாம உடம்பை கவனிச்சுக்கிட்டா தான் வயாசான காலத்துல உடம்பு நம்மளை கவனிச்சுக்கும்.. முடிஞ்ச வரை நேரத்துக்கு சாப்பிடுங்க மாப்பிள்ளை..” என்றதில் வேதாந்த முகத்தில் இன்னும் ஆச்சரியம் குறையவில்லை. 

“இது தவிர்க்க முடியாதது மாமா, ஆனா நேரம் கிடைக்கும் போது தவறாமல் சாப்பிட்டிடுவேன்.. இப்போ க்ருதி வந்த பிறகு காலையில் ப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிடாம கிளம்ப விடுறதில்லை..” என்று புன்னகையோடு அவரை அழைத்து சென்றான். 

மாமனாருக்கு வேண்டியதை வரவழைக்க, “இங்க மஷ்ரூம் மசாலா ரொம்ப நல்லா இருக்கும். உங்களுக்கு எதுவும் அலர்ஜி கிடையாதே..” என்று அக்கறையோடு கேட்டு ஆர்டர் செய்த மாமனாரை இமைக்காமல் பார்த்திருந்தான் வேதாந்த். 

‘எத்தனை சிறந்த மனிதர்?! இவரை மீறி க்ருதி தன்னை கரம் பிடித்ததை எப்படி இவரால் அத்தனை சுலபமாக ஏற்க முடிந்தது. அதைவிட தன்னிடம் அவர் கொண்டிருக்கும் இணக்கம் எல்லாம் கனவா? நினைவா? என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. 

இருவரும் உணவை முடித்துக் கொள்ள ‘அடுத்த எங்கு செல்வது?’ என்பது போல மாமனாரை பார்த்தான்.

“இங்க பக்கத்துல ஒரு கோவில் இருக்கு... அங்க போகலாமா, மாப்பிள்ளை?” என்றார் வாசுதேவன்.

அடுத்த இருபது நிமிடங்களில் அவர் கூறிய முருகன் கோவிலின் முன் காரை நிறுத்தினான் வேதாந்த்.

மதிய நேரம் என்பதால் கோவிலில் பெரிதாக கூட்டம் இல்லை. காற்றில் மணியோசையும், கற்பூர வாசனையும் கலந்திருந்தது.

“இந்தப் பக்கம் வாங்க, மாப்பிள்ளை...” என்று கோவிலின் ஓரத்தில் அமைந்திருந்த முருகன் சன்னதியின் முன் அழைத்துச் சென்றார்.

இருவரும் முருகனை தரிசித்து அமரவும், “என்ன விஷயம் மாமா?” என்றான். 

ஆழமாக மூச்சை இழுத்து விட்ட வாசுதேவன், “எப்படி ஆரம்பிக்கிறதுன்னே தெரியலை, மாப்பிள்ளை... ஆனா முதல்ல ஒரு விஷயத்தை சொல்லணும்...” என்று தயங்கியவர், 

“எனக்கு உங்க மேல எந்த கோபமும் கிடையாது. அன்னிக்கு நான் உங்களை அவமானப்படுத்துவதற்காக வேலையை விட சொல்லலை.. அதுக்கு ஒரு பலமான காரணம் இருக்கு..” என்று சொல்ல கண்கள் இடுங்க மாமனாரை பார்த்தான். 

“என்னோட மனைவி..” என்று வலியோடு வேதாந்தை பார்க்க அவனிடம் மெல்லிய அதிர்வு.

“என் மனைவி மட்டுமில்லை போலீஸால நாங்க பட்ட காயம் ஆறாத வடுவா இன்னும் இருக்கிறதால தான்!!” என்று வாசுதேவன் தன் மனதை திறக்க வேதாந்த் இடையில் குறுக்கிடாமல் அமைதியாக அவர் பேச்சை கவனிக்க தொடங்கினான்.

“என்னோட ரியாவை நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” என்று சொல்ல வேதாந்திர்க்கு அது புதிய செய்தி!

அதே நேரம் தன் மாமியாரின் பெயர் ‘சௌந்தர்யா’ என்பதும் அவர் செல்லமாக ‘ரியா’ என்று அழைப்பதும் புரிந்த அதே நொடி நேற்று ‘குழந்தை ரியா’ காணாமல் போனதில் அவர் ஏன் தன்னிலை இழக்கும் அளவிற்கு உருகுலைந்து போனார் என்பதும் புரிபட அவன் பார்வை தீர்க்கம் பெற்றது.

“நான் காதலுக்கு எதிரி இல்லை, நீங்க என் பொண்ண விரும்புறேன்னு சொல்லி வந்த போது உங்களுக்கு கட்டிக் கொடுக்க தயாரா இருந்தேன். இந்த காக்கி சட்டையை தவிர்த்து வேறு எந்த தயக்கமும் எனக்கு இருந்தது இல்லை..”

“அதனால தான் அப்படி ஒரு கண்டிஷன் போட்டேன். குழந்தையோட படிப்பு முடியும் வரைக்கும் உங்களுக்கு நேரமும் கொடுத்தேன். ஆனால் அப்போவும் நீங்க உங்களோட முடிவுல தீர்மானமாக இருந்ததால தான் உங்களை மித்துவை விட்டு விலகி போக சொன்னேன்…” 

“அப்போ வரைக்கும் என் பொண்ணுக்கு உங்க மேல எந்த விருப்பமும் கிடையாது. அதனால உங்களால மனச மாத்திகிட்டு வேற வாழ்க்கை அமைச்சுக்க  முடியும்னு நம்பினேன். ஆனா உங்களோட உறுதியை  பார்த்த போது அதை நம்பிக்கை நிறைவேறும்னு எனக்கே நம்பிக்கை இல்லாம போயிடுச்சு…” 

“அதனாலதான் அவசரமா கல்யாணம் ஏற்பாடு பண்ணி அதை தொடர்ந்து என்னென்னமோ நடந்துருச்சு. ஆனா என் குழந்தை உங்கள விரும்பினது தெரிஞ்ச பிறகு மனசார தான் உங்களை ஏத்துக்கிட்டேன்..” 

“எனக்கு தெரியும் மாமா, நீங்க சொல்லணும் என்ற அவசியமே இல்லை. ஆனா அத்தைக்கு என்ன நடந்ததுன்னு நீங்க இன்னும் சொல்லலையே!..” என்று கேட்க அன்றைய நாளை நினைத்து அவர் உடல் நடுக்கம் கொண்டது.

அத்தனை எளிதாக அவரால் சொல்லிவிடக்கூடிய விஷயம் கிடையாது அது!!

அன்றைய நினைவுகளில் இருந்து தன்னை மீட்டெடுக்க எத்தனை வருடம் போராடினார் என்பது அவருக்கு தானே தெரியும்?!...

இதயம் வேகமாக துடிக்க முகத்தில் வியர்வை அரும்பியது. “மாமா தண்ணீர் குடிங்க..” என்ற அவரிடம் வாட்டர் பாட்டிலை நீட்டினான். 

“தேங்க்ஸ் மாப்பிள்ளை..” என்றவர் ஒவ்வொரு மிடறையும் நிதானமாக குடித்து முடித்து மெல்ல அவனை பார்த்தவர், “ரியாவை பற்றி பேச தான் உங்களை கூட்டிட்டு வந்தேன் ஆனா எனக்கு அந்த தைரியம் இன்னும் வரலை போல..” என்று நெஞ்சை நீவி விட்டார்.

“பரவால்ல மாமா இன்னொரு நாள் கூட பேசலாம்..” 

“என்னைக்கு பேசினாலும் வலி தீராதே மாப்பிள்ளை?!.. பரவால்ல இன்னைக்கு முடிவு பண்ணி வந்துட்டேன் என் அப்பன் முருகன் தான் முழுசா சொல்லி முடிக்கிற பலத்தை எனக்கு கொடுக்கணும்..” என்று கையெடுத்து கும்பிட்டு திருநீரை பூசிக்கொண்டவர் மீண்டும் பேச்சை தொடங்கினார்.



Comments