தீராத காதல் தொல்லையோ?!... PREFINAL 1



வேதாந்த் மாமனாரை பார்த்திருக்க கைகூப்பி முருகனை வணங்கி விட்டு மெல்ல தன் பேச்சை ஆரம்பித்தார் வாசுதேவன்.


“அன்னைக்கு என் சித்தப்பா பையனுக்கு மட்டுமில்லை ரியாவோட அத்தை பொண்ணுக்கும் கல்யாணம். இரண்டு விசேஷத்தையும் தவிர்க்க முடியாது என்பதால ரெண்டு நாளைக்கு முன்னாடியே ரியாவை அவளோட கிராமத்துல கொண்டு போய் விட்டுட்டு ஒரு நாள் அங்கே தங்கியிருந்து அடுத்த நாள் நான் சென்னை வந்துட்டேன்..”


“அண்ணன் அண்ணி நான் மூணு பேரும் சித்தப்பா பையனோட கல்யாணத்தை முடிச்சுட்டு ஊருக்கு வந்து மணமக்களை வாழ்த்திட்டு ரியாவை அழைச்சிட்டு போறதா முடிவு பண்ணி இருந்தோம்…”


“அப்படி முகூர்த்தம் முடிஞ்சு அன்னைக்கு சாயந்திரம் நாங்க ஊருக்கு வந்த போது ரியா அவளோட வீட்டுல இல்லை. குழந்தை மட்டும் அத்தை கிட்ட இருந்தா…”


“ரியா எங்கேன்னு கேட்கவும், தன்னோட ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருக்கிறதா சொன்னவங்க ஆறு மணிக்கே வர வேண்டியது ஆனா இன்னும் வரலைன்னு சொன்னாங்க…”


“நாங்க போனப்போவே மணி எழரை கிட்ட ஆகிடுச்சு. கார்த்திகா கிட்ட பேச உட்கார்ந்துட்டா நேரம் போறதே தெரியாம பேசிட்டு இருப்பா எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்னு சொல்லவும் காத்திருந்தோம். கால் மணி நேரமாகியும் அவ வரல...”


“அப்போ லேண்ட்லைன் எல்லார் வீட்டுலயும் இல்லாத காலகட்டம். கார்த்திகாவோட பெரிப்பா வீட்டு நம்பர் தான் இருந்தது. அவங்களுக்கு சொல்லி அழைச்சுட்டு வரும் வரைக்கும் காத்திருந்து பேசுறதுக்கு நேரிலேயே போயிடலாம்னு நானே கிளம்பினேன்...”


அங்க போய்க் கேட்டப்போ, ‘ரியா இங்கிருந்து கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு..என்று சொன்னாங்க...”


“அவங்க வீட்டிலிருந்து எங்க வீட்டுக்கு வர இரண்டு வழி இருக்கு. ஒண்ணு ஊருக்குள்ள போகும் சுற்றுப் பாதை. எங்க கல்யானத்துக்கு பிறகு நான் ரியாவை அந்த வழியா தான் அழைச்சுட்டு போவேன்..”


“இன்னொன்னு ஏரிக்கரை வழி... அது கொஞ்சம் ஆள்நடமாட்டம் குறைவு, ஆனா சீக்கிரம் போயிடலாம்.. சின்ன வயசுல இருந்தே ரியா ஏரிக்கரை மேல தான் போவேன்னு சொல்லி இருக்கா எனக்கு அப்போ அது நினைவில்லாததால திரும்பி வரும் போது அந்த வழியில அவளை தேடிட்டு வந்தேன்..”


“ரியா ரொம்ப அமைதின்னும் சொல்ல முடியாது ரொம்பவே கலகலப்பான ஆள் என்றும் சொல்ல முடியாது. அவளுக்கான ஆட்கள் கிட்ட ரொம்ப நல்லா பழகுவா.. அப்படி ஏரிக்கரை வழியில ஒரு சிலர் அவளுக்கு பழக்கம்..”


“அது கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத இடம். வீடுகளும் அங்கொன்னும் இங்கொன்னும் அதான் இருக்கும்.. அங்கே அவ பேச கூடிய ஆட்கள் கிட்ட விசாரிச்ச போது அப்போவே பேசிட்டு நேரமாச்சுன்னு கிளம்பினதா சொன்னாங்க..”


“என்னாச்சுன்னு கேட்கவும், ‘நான் நேரே இங்க வந்துட்டேன், வீட்டுக்கு போயிருப்பான்னு’ சொல்லி அவளை தேடி கிளம்பினேன்.. அப்போ தான்…” என்றவரின் குரலில் சட்டென ஒரு நடுக்கம்.


“மாமா ரிலாக்ஸ்..” என்றவன் தண்ணீர் கொடுக்க வாசுதேவனுக்கு தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர பல நிமிடங்கள் பிடித்தது. 


“அப்.. போ அங்கே தான் என் ரியாவை பார்த்தேன்.. இதுவரை நான் பார்க்காத கோலம் மாப்பிள்ளை அது!” என்றவரின் கண்ணீர் கரகரவென வேகமாக இறங்கியது. 


“முட்புதர் பக்கத்துல பார்த்தேன்..  இதுவரைக்கும் நான் பார்க்காத கோலத்தில்… உடம்பு முழுக்க ரத்தம். சேலை கிழிஞ்சு, கைகள் முழுக்க காயங்கள், முகமெல்லாம் மண்ணும் ரத்தமும் ஒட்டிக்கிடந்தது. உயிரே இல்லாத மாதிரி அசையாம படுத்திருந்தா…”

“ரியா…!”ன்னு கதறிக்கிட்டே அவ கிட்ட ஓடிப் போனேன். அங்.. அங்கே என் ரியா அரை உயிரா கிடந்தா மாப்பிள்ளை..”

“பார்த்ததுமே எனக்கு அவளோட நிலை புரிஞ்சது. உதவிக்காக அவ எவ்வளவோ போராடியிருக்கா ஆனா அது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி இருள் சூழந்து இருந்ததால அவளோட குரல் கூட யாருக்கும் பெருசா கேட்கலை..”

“என்னை உணர்ந்ததும் கஷ்டப்பட்டு கண்களைத் திறக்க முயற்சி பண்ணா… உதடு நடுங்கிச்சு… ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருந்துச்சு. ஆனா வார்த்தை எதுவும் வரலை…”

“ஒண்ணும் ஆகாது… நான் வந்துட்டேன்… கண்ணை மூடாத..” என்று அழுதுகிட்டே சொல்லிக்கிட்டிருந்தேன்.

“எனக்காகவே உயிரை கைல புடிச்சு வச்சுருந்திருக்கா மாப்பிள்ளை. என்னை பார்த்ததுமே அவ பேசாத பேச்சை எல்லாம் அவளோட கண்ணு என்கிட்டே பேசுச்சு..”

“யார் காரணம்னு கேட்கவும் போலீஸ்னு ஈனஸ்வரத்தில் சொன்னவள் தன்னோட விரல்களை காண்பிச்சு அழுத நொடி நான் உள்ளுக்குள் செத்துட்டேன் மாப்பிள்ளை…” என்றிட கேட்டுக் கொண்டிருந்த வேதாந்தின் உடல் இறுக கண்களில் அப்படி ஒரு வலி.

“என் ரியா பூ மாதிரி! ஆனா அவளை அத்தனை பேரும் கொடூரமா சிதைச்சிருந்தாங்க... எப்படியாவது அவளை காப்பாத்திடனும்னு ரியாவை என் கையில தூக்கினேன் ஆனா அடுத்த நிமிஷமே ‘வலிக்குதுங்க’ என்று அவ கதறின கதறல்ல நொறுங்கி போயிட்டேன்…” என்றவர் இன்றுமே அன்றைய நாளை எண்ணி கதறி விட்டார்.

“நான் அவ கூட இருக்கிறதே அவளுக்கு தனி தைரியம் கொடுத்துச்சா என்னன்னு தெரியலை, இல்லை அணைய போற விளக்கு பிரகாசமா எறியும்ன்னு சொல்லுவாங்களே அப்படி என்கிட்டே பேசினாளா தெரியலை.. ஆனா பேசினா மாப்பிள்ளை...


பேச கூடாத பேச்சை பேசினா, நான் கேட்க விரும்பாத பேச்சை என்னை கேட்க வச்சா.. என்றவர் கண்கள் சிவந்து போக கண்ணீரும் கன்னத்தில் வழிந்தபடி இருந்தது.


“இனி எந்த போலீசையும் நம்பவே கூடாது. என் பொண்ணுக்கு எந்த அவப்பெயரும் வரக்கூடாது. தயவு செஞ்சு என்னை இப்படியே விட்டுடுங்க. நான் செத்துப் போறேன்னு சொன்னா...


“ஆனா என்னால எப்படி விட முடியும் மாப்பிள்ளை? விடாப்பிடியா அவளைத் தூக்கிக்கிட்டு, உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு ஓடினேன்.. என்னைத் தடுத்துக்கிட்டு, ‘என்னை காப்பாத்த முயற்சி பண்ணாதீங்க... எனக்கு வாழவே பிடிக்கலை...’ன்னு கதறிக்கிட்டே இருந்தா…”

“என் பொண்ணுக்கு எந்த அவப்பெயரும் வரக்கூடாது… தயவு செஞ்சு... என்னை இப்படியே விட்டுடுங்க...’ அப்படின்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தா…”

“எவ்வளவோ சமாதானப்படுத்தினேன். ஆனா ஒரு பக்கம் ரத்தம் போயிட்டே இருந்துச்சு. அவளால சரியா பேசக்கூட முடியல…” 

“அதுவரைக்கும் கண்ணீரோட பேசிக்கிட்டிருந்த அவளோட குரல்… கொஞ்சம் கொஞ்சமா அடங்க ஆரம்பிச்சது. ‘ரியா... முழிச்சுக்கோ... என்னைப் பாரு...’ என்று அவ கன்னத்தைத் தட்டிக்கிட்டே ஓடினேன்…”


“அப்போதான் மெல்ல கண் விழிச்சவ அங்க இருந்த  ரயில் தண்டவாளத்துல அவளை போட சொன்னா…”


“என்ன மாமா சொல்றீங்க?” என்றான் உச்சபட்ச அதிர்வோடு.


“ஆமா மாப்பிள்ளை... அவ வாழத் தயாராக இல்லை… கடைசியா என் சட்டையைப் பிடிச்சுக்கிட்டு, ‘தயவு செஞ்சு என்னை தண்டவாளத்தில் போட்டுடு. இதுதான் என் கடைசி ஆசை..’ என்று சொன்னா…”


“அதுக்கப்புறம் அவளோட பேச்சு நின்னு போச்சு, மாப்பிள்ளை. பேச்சு மட்டும் இல்ல, மூச்சும் தான்!! அடுத்து எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அப்படியே மடங்கி உட்கார்ந்துட்டேன்…”


“எவ்வளவு நேரம் அவளை என் கையில வச்சுட்டு அவ முகத்தையே பார்த்துட்டு இருந்தேன்னு எனக்கே தெரியல. கண்ணுல தண்ணி கூட வத்திப்போச்சு. ஆனா காதுல அவளோட “கடைசி ஆசை மட்டும் ஒலிச்சுக்கிட்டே இருந்தது…”


“அதை மீறி என்னால அங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல. மனசைக் கல்லாக்கிக்கிட்டு அவளைத் தூக்கிட்டு அந்த தண்டவாளத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்..” என்று சொல்ல தாங்க முடியாமல் கண்களை இறுக்கமாக மூடினான் வேதாந்த்.


அன்றைய அவரின் வலியை உணர்ந்தவன் உடல் இறுகிப்போனது.


“உயிர் போகும் முன்னாடி இருக்க கூடிய மரண வலி பற்றி  அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும்ன்னு சொல்லுவாங்க. ஆனா உயிரோடவே அன்.. அன்னைக்கு  மட்டுமல்ல, இன்னைக்கு வரைக்கும் நான் அனுபவிச்சிட்டு இருக்கேன் மாப்பிள்ளை..” என்று சிறு குழந்தையாக வாசுதேவன் தேம்பி அழ அவரை அணைத்து கொண்டான் வேதாந்த். 


“ஒன்னு ரெண்டு இல்லை மாப்பிள்ளை ரியாவுக்கு ஏகப்பட்ட ஆசை, ஏராளமான கனவுகள்… எல்லாத்தையும் செய்து கொடுப்பேன்னு வாக்கு கொடுத்தேன். ஆனா கடைசியா இப்படி ஒரு ஆசையை சொல்லி என்னை நெருப்புல தள்ளிட்டா..” என்றவர் வெடித்து அழ தொடங்கி விட்டார்.


“மாமா... ப்ளீஸ் அழாதீங்க…” என்று அவர் முதுகை வருடி தேற்றியவன் தண்ணீரை குடிக்க வைத்து, “இதுக்கு மேல பேச வேண்டாம் மாமா.. உங்களோட ஹெல்த் முக்கியம்..” என்று சொல்ல அவரோ மடை திறந்த வெள்ளமாக அன்றைய பேச்சை தொடர்ந்தார்.


“இப்ப இருக்குற மாதிரி அப்போ சமூகம் இல்ல மாப்பிள்ளை. எந்தத் தவறு நடந்தாலும் பெண்ணைத்தான் குறை சொல்லுற காலம் அது. ஒரு பெண்ணுக்கு இப்படிப்பட்ட கொடுமை நடந்தா, அவளையே குற்றவாளி மாதிரி பார்க்கிற மனநிலை நிறைய பேருக்கு இருந்துச்சு…”


“பாதிக்கப்பட்டவங்களா பார்க்க வேண்டிய பெண்களை, பாவப்பட்டவங்களா பார்க்க கூடிய காலகட்டம். அவங்க வாழணும்னு யாரும் நினைக்கல... வாழக்கூடாதுன்னு நினைக்கிற மனநிலையே அதிகமா இருந்துச்சு…”


“அதனாலதான் ரியா... தன்னைவிட தன் மகளை நினைச்சு அதிகமா துடிச்சா. ‘இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா... என் பொண்ணு வாழ்நாள் முழுக்க தலை நிமிர்ந்து வாழ முடியாதோ…’ என்று பயந்தா…”


‘யாருக்கும் தெரியாது... நான் இருக்கேன்... நாம இதைக் கடந்து போயிடலாம்...’ ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனா... ‘உங்களால மறக்க முடியும்... மறைக்கவும் முடியும்... ஆனா என்னால முடியாது...’ன்னு கதறினா.


“என் ரியா... முதல் முறையா இப்படி உடைந்து அழுததை நான் பார்த்ததே அன்னைக்குத்தான். இத்தனைக்கும் மித்துவைப் பிரசவிக்கும் போது கூட அவ்வளவு அழல. ஆனா மொத்த ஜென்மத்துக்கும் சேர்த்து அப்படி ஒரு அழுகை. வலி ஒரு பக்கம்... வேதனை ஒரு பக்கம்…” என்று கண்ணீரை உள் இழுத்தபடி சொன்னவர்,


“அவ நினைப்பு முழுக்க என் பொண்ணு மேலதான்... ‘தனியா விட்டுட்டு போறேன்னு..’ அதுக்கும் சேர்த்து கதறினா. இப்ப வரைக்கும் என்னால அந்தக் காட்சியை மறக்க முடியாது…”


“அவ ரொம்ப சுலபமா சொல்லிட்டு போயிட்டா.. ஆனா அவளோட கடைசி ஆசையை நிறைவேற்ற நான் என்ன பாடுபட்டேன்னு எனக்குத்தான் தெரியும். பாவி... இப்படி ஒரு ஆசை! அதையும் என்னை செய்ய வைக்கறாளேன்னு நான் பட்ட பாடு இப்போ வரைக்கும் என்னால மறக்க முடியாது...”


“நான் இறந்த பிறகு நீங்க தானே எனக்கு எல்லா சம்பிரதாயமும் செய்யணும்? அப்படி நினைச்சுட்டு செய்ங்க.. காலம் முழுக்க இந்த அவமானம் என் மகளை தொடர கூடாது.. எனக்காக செய்ய மாட்டீங்களான்னு கேட்டவ கண்ணுல உயிர் ஊசலாடிக்கிட்டு இருந்தது மாப்பிள்ளை..” என்றவரின் கண்கள் குளமாகி போனது. 


“அவ ரொம்ப பிடிவாதக்காரி. அத்தனை பேர் தொட்டு உடம்பு கறைப்பட்ட பிறகு வாழக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா…”


“அப்படி எதுவும் இல்லடி நான் இருக்கேன் கூட வந்துடு ரியான்னு அவ காலை பிடிச்சு கெஞ்சினேன் கதறினேன் ஆனா நான் அவ்வளவு போராடியும் என் கையிலேயே உயிரை விட்டுட்டா…” என்றவர் தாள முடியாமல் தன் கைகளில் முகம் புதைக்க, அவரை சமாதானப்படுத்தும் நிலையில் வேதாந்தும் இல்லை.  


காதல் மனைவியின் இழப்பே ஈடுகட்ட முடியாதது என்றால் அவரை தன் கையாலேயே துண்டாக்குவது எத்தகைய மரண வலி என்று அவனுக்கு  நன்கு புரிந்தது. 


“இப்படி ஒரு கொடுமை எந்த புருஷனுக்கும் வரக்கூடாது. அவளைப் படுக்க வச்சுட்டு நானும் அவ பக்கத்துல அப்படியே படுத்துட்டேன்…” என்று சொல்ல,  “மாமா…” என்று அதிர்வோடு கண்களைத் திறந்தான்.


அந்த நொடி, வாசுதேவனின் முன் அமர்ந்திருந்தது ஒரு போலீஸ் அதிகாரி அல்ல... ஒரு கணவனின் வலியை முழுமையாக உணர்ந்த இன்னொரு கணவன்.



Comments