புது டெல்லி
விஞ்ஞான் பவன்...
இந்தியாவின் உயரிய திரைப்பட விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன.
அரங்கம் முழுவதும் ஒளிவெள்ளத்தில் மின்னியது.
நாட்டின் பல மொழிகளில் சாதனை படைத்த கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் என அனைவரும் தங்களுக்குரிய இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
முன் வரிசையில் வெண் பட்டில் தங்க நிற பார்டர் கொண்ட புடவையில் அமர்ந்திருந்தாள் க்ருதி மிருதுளா.
இது அவளுடைய முதல் தேசிய விருது அல்ல.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவள் பாடிய முதல் திரை பாடலுக்கு தேசிய விருது பெற்றிருந்தாள்.
முதல் பாடலிலேயே இப்படி தேசிய விருது பெரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அவர்களில் ஒருவராகி போயிருந்தாள் க்ருதி மிருதுளா.
அப்போது, அவளுடைய தந்தை வாசுதேவன், பெரியம்மா கிரிஜா மற்றும் மாமியார் வாகீஸ்வரி மட்டுமே அவளுடன் வந்திருந்தனர். அன்று வர முடியாமல் போன ஒரே நபர் அவளுடைய கணவன் வேதாந்த்.
அந்த சமயத்தில் அவன் அவசர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததால், விருது விழாவிற்கு வர முடியவில்லை.
ஆனால் இன்று அவள் ஒன்றல்ல இரண்டு தேசிய விருதுகள் பெறுகிறாள்.
ஆம், இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும், சிறந்த பெண் டப்பிங் கலைஞருக்கான தேசிய விருதையும் வென்று இரட்டை தேசிய விருது பெறுகிறாள் க்ருதி மிருதுளா.
முதலில் பாடகிக்கான விருது அறிவிக்கப்படவும் குழந்தைகள் கொண்டாட தொடங்கிவிட்டனர். பிறகு தான் இரண்டு பிரிவிலும் விருது என்பதை அறிந்திருந்தனர்.
சென்ற முறை தவற விட்ட வேதாந்த் இம்முறை மனைவியின் சாதனையை நேரில் பார்க்க வந்துவிட்டான். கருப்பு நிற ப்ளேசரில் ஆணழகனாக அமர்ந்திருந்தவன் அருகில் குழந்தைகள் அமர்ந்து க்ருதி விருது வாங்குவதை பார்க்க ஆவலாக காத்திருந்தனர்.
குடியரசு தலைவர் மேடைக்கு வந்து சேரவும் விழா ஆரம்பமாக அரங்கம் முழுவதும் அமைதியானது.
விருது அறிவிப்புகள் தொடங்கின.
ஒவ்வொரு பிரிவாக பெயர்கள் அறிவிக்கப்பட கலைஞர்கள் விருதுகளை பெற்று கொண்டு திரும்பினர்.
சில நிமிடங்கள் கழித்து, “சிறந்த பாடகியாக இந்த ஆண்டிற்கான தேசிய விருது பெறுபவர்... தமிழ் திரைப்பட பாடகி க்ருதி மிருதுளா..” என்று ஆங்கிலத்தில் அறிவிக்கப்பட அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.
விஹானிகாவும் பார்த்தீவும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று உற்சாகமாக கைகளைத் தட்டினர்.
அடுத்த சில நிமிடங்களில், “சிறந்த டப்பிங் கலைஞருக்கான விருதை பெறுபவர்… திருமதி க்ருதி மிருதுளா..” என்றதில் “செகண்ட் அவார்டு அம்மா!” என்றான் உற்சாகமாக.
மனைவி இரண்டாவது முறையாக மேடையை நோக்கி நடந்த போது, வேதாந்தின் உதடுகளில் பெருமித புன்னகை மலர்ந்தது.
பல வருடங்களாக அவள் உழைப்பை அருகிலிருந்து பார்த்தவனுக்கு, அந்த தருணம் அத்தனை விலைமதிப்பற்றதாக இருக்க பெருமிதத்தோடு மனைவியை கைபேசியில் படம் பிடித்தான்.
குடியரசுத் தலைவரிடமிருந்து க்ருதி விருதையும் சான்றிதழையும் பெற்றுக் கொள்ள புகைப்படக் கலைஞர்களின் ஃபிளாஷ் விளக்குகள் தொடர்ந்து மின்னின.
விருது பெற்ற பின் மேடையிலிருந்து இறங்கியவளை ஓடி வந்து கட்டிக்கொண்ட குழந்தைகள், “அம்மா... நீங்க இன்னும் நிறைய அவார்ட் வாங்கணும்..” என்று பார்த்தீவ் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
பார்த்தீவை ஒரு கையாலும், விஹானிகாவை மறுகையாலும் அணைத்துக் கொண்ட க்ருதி, வேதாந்தை பார்த்தாள்.
அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் கண்களில் இருந்த பெருமிதம் அவள் இதழ்களில் உறைந்திருந்த புன்னகையை மேலும் அதிகபடுத்தியது.
வெளியில் வரவும் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
“க்ருதி மேம், ஒரே ஆண்டில் சிறந்த பெண் பின்னணிப் பாடகி மற்றும் சிறந்த பெண் டப்பிங் கலைஞர் என இரண்டு தேசிய விருதுகளை வென்றிருக்கிறீர்கள். இந்த சாதனையை எப்படி பார்க்கிறீர்கள்?” என்றார் ஒரு பத்திரிக்கையாளர்.
“முதலில் இந்த நிமிடத்தை என் வாழ்வில் அளித்த கடவுளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…” என்றவள், “உண்மையை சொல்லணும்னா இன்னும் இந்த நிமிஷம் கனவு மாதிரி தான் இருக்கு. ஒரே ஆண்டில் இரண்டு தேசிய விருதுகள் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை…”
“உங்களோட முதல் திரைப்படப் பாடலுக்கே தேசிய விருது கிடைச்சது. இப்போ மறுபடியும் இரட்டை தேசிய விருது. இதை எப்படி பார்க்கிறீங்க?”
“பாடலும், டப்பிங்கும்... என் உயிரோடு கலந்த உணர்வு. எந்த கதாபாத்திரத்துக்கும் நான் குரல் கொடுக்கும் போதும், எந்த பாடலை பாடும் போதும், அதில் என்னுடைய முழு மனசையும் கொடுக்கணும்னு மட்டும் தான் நினைப்பேன். அதுக்கான அங்கீகாரமா இந்த விருதுகளை பார்க்கிறேன்…”
“ஒரே ஆண்டில் இரண்டு தேசிய விருது வாங்குறது ரொம்ப அரிதான சாதனை. இதை எதிர்பார்த்தீங்களா?”
“இல்லை, நான் எதிர்பார்க்கலை..”
“உங்க வாழ்க்கையில மிகப்பெரிய தூண் யார்?” என்ற கேள்வியில் அவள் பார்வை தன்னருகே இருந்த வேதாந்த் மீது படிந்தது.
“என்னோட கணவர்…” என்றாள் பெருமிதத்தோடு.
“நான் விழுந்த நேரத்துல கை கொடுத்தவர் இல்லை... நான் விழவே கூடாதுன்னு பின்னால நின்னு என்னை தாங்க கூடியவர் தான் என்னோட கணவர்!... நான் மேடையில நிற்கும் ஒவ்வொரு முறையும், என்னைவிட அதிகமா சந்தோஷப்படுற முதல் ஆள் இவர்தான்!!” என்றாள் புன்னகையோடு.
“இந்த வெற்றியை யாருக்கு சமர்ப்பிக்க விரும்புறீங்க?”
“இந்த விருது என்னுடையது மட்டும் இல்லை. என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், டப்பிங் இயக்குநர்கள், என்னோடு வேலை பார்த்த ஒவ்வொருவருக்கும் இந்த விருதில் பங்கு இருக்கு…”
“முதல்ல என்னை நம்பின இறைவனுக்கும், என் குடும்பத்துக்கும், என்னை இந்த இடம் வரைக்கும் கூட்டிட்டு வந்த ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்…”
வேதாந்த் அமைதியாக புன்னகைக்க, கேமராக்களின் ஃபிளாஷ் ஒளி இருவரையும் சுற்றி மின்னியது
“மேடையில் இருந்து இறங்கியவுடனே உங்க குழந்தைகள் வந்து கட்டிப்பிடிச்சதுல ரொம்ப எமோஷனலாகிட்டீங்க. அந்த தருணம் பற்றி சொல்ல முடியுமா? அப்படியே உங்களோட குடும்பம் உங்க சாதனையில் அவங்களோட பங்கு பற்றியும் சொல்லுங்க...”
“என்னுடைய குடும்பத்தை பற்றி நிச்சயம் சொல்லியாகனும். நான் எவ்வளவு பிஸியா இருந்தாலும், என்னுடைய கனவுகளை ஒருநாளும் விட்டு கொடுக்க கூடாதுன்னு சொல்லி எனக்கு துணையாக இருப்பது என்னோட குடும்பம்…”
“குழந்தைகளை பார்த்து கொள்வதில் தொடங்கி என்னையும் பார்த்துக்கிறவங்க. குழந்தைகளுடனான இந்த தருணம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். என் வாழ்நாள் முழுக்க இந்த நினைவுகளை பாதுகாப்பேன்..”
“இந்த அன்புக்கும், அங்கீகாரத்துக்கும் நான் மனமார்ந்த நன்றி சொல்லிக்கிறேன். இனிமேலும் என்னுடைய குரல் மூலம் நல்ல படைப்புகளை உங்களிடம் கொண்டு வர முயற்சி செய்வேன். நன்றி…”
“இளம் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?”
“கனவு காணுங்க... அந்தக் கனவுக்காக உழையுங்க... வெற்றி கொஞ்சம் தாமதமாகலாம், ஆனால் நிச்சயம் கைகூடும். முக்கியமா உங்களோட வாழ்க்கைத்துணையை ரொம்ப கவனமாக தேர்ந்த்டுங்க அப்போதான் குடும்பத்தையும், கனவையும் சமநிலையோட கொண்டு போக முடியும்…”
இறுதியாக ஒரு நிருபர் “சார்... நீங்க ஏதாவது சொல்லணுமா?” என்றார்.
உடனே மனைவி புறம் திரும்பியவன், “கங்க்ராட்ஸ் க்ருதி. ஐ ஆம் ஸோ ப்ரவுட் ஆப் யூ!!” என்று காதலோடு மனைவியை அணைத்து கொள்ள கேமராக்கள் அவர்களை வளைத்து வளைத்து படம் பிடித்தது.
தேசிய விருது விழாவின் பரபரப்பு அடங்கிய நிலையில் நள்ளிரவு ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தவர்களுக்கு அத்தனை அசதி.
குழந்தைகள் வழியிலேயே உறங்கி இருக்க வாசுதேவன் தன் அறையில் படுக்க வைக்க சொன்னார். டெல்லி பயணத்தில் இவர்கள் மட்டுமல்ல மொத்த குடும்பமும் வந்திருந்தனர்.
அனுமதி மூவருக்கு மட்டுமே என்பதால் மற்றவர்கள் நேரலையில் பார்த்து கொண்டிருந்தனர். நாளை முதல் இன்னும் மூன்று நாட்களுக்கு இங்கே தான் அவர்களின் வாசம்.
குடும்பமே சேர்ந்து மிகப்பெரிய பயண திட்டம் வைத்திருக்கின்றனர்.
குழந்தைகளை மாமனாரிடம் படுக்க வைத்து விட்டு தங்கள் அறைக்கு திரும்பிய வேதாந்த் தாளிட்டு திரும்பிய நொடி “என்னங்க அண்ணா கால் பண்ணி இருந்தாங்க..” என்ற க்ருதி அவன் கரங்களுக்குள் இருந்தாள்.
“என்ன, திடீர்னு?” என்றாள் புன்னகையோடு.
“க்ருதியோட ஸ்பெஷல் டே வை இன்னும் நான் கொண்டாடவே இல்லையே?!” என்றபடி மனைவியை அள்ளிக்கொண்டவனின் முதல் முத்தத்தை அவள் இதழ்கள் அழுத்தமாய் பெற்று கொண்டன.
கணவனின் கழுத்தில் தன் கரங்களை மாலையாக்கிய க்ருதி வாகாக அவனுக்கு ஈடு கொடுக்க மனைவியின் இன்றைய நாளை இரவு முழுக்க கொண்டாடி தீர்த்தான் வேதாந்த் ஆர்யன்.
அதிகாலை காற்று ஹோட்டலின் பதினாறாவது மாடி ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தது.
க்ருதி இன்னும் உறங்கி கொண்டிருக்க வேதாந்த் விழித்து விட்டான்.
முதலில் விழித்து விட்டிருந்தாலும், இன்னும் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளாமல் ஒரு கையால் முகத்தை தாங்கி தன்னருகே இருந்த மனைவியின் முகத்தை பார்த்திருந்தான்.
ஒவ்வொரு அதிகாலையும் மனைவியின் முகத்தில் விழித்தே நாளை தொடங்குவது அவன் வழக்கம்.
க்ருதியின் ஒவ்வொரு பரிமாணத்தையும் ரசிப்பவன், அவள் தன்னிடம் சண்டை பிடிக்கும் போது மும்மடங்கு ரசிப்பான்
“சண்டையா? க்ருதியா?” என்றால், ‘சண்டை போடாத கணவன் மனைவி எங்கே இருக்கிறார்கள்?’ என்பது தான் பதில்.
ஆனால் க்ருதியின் சண்டை சற்று வித்யாசமானது.
மற்ற தம்பதியர் போலவே க்ருதிக்கும் வேதாந்திற்கும் இடையில் சின்ன சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும். அதை ‘சண்டை’ என்ற வரையறைக்குள் கொண்டு வரவே முடியாது.
அந்த அளவு குரல் உயர்த்தாமல், கத்தாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் சண்டையிட இவர்கள் இருவரால் தான் முடியும்.
கருத்து வேறுபாட்டை கூட சிரித்தபடியே கடந்து செல்லும் தம்பதிகள் இவர்கள். அதனால் அந்தச் சின்னச் சின்ன சண்டைகள் கூட நீண்ட நேரம் நீடித்தது கிடையாது.
அதுவும் குழந்தைகளை முன்னிறுத்தி இருவரில் ஒருவர் யார் சண்டையை தொடங்கினாலும் இறுதியாக அவர்களே மற்றவருக்கு வக்காலத்து வாங்கி சமாதானம் செய்வார்கள்.
கமிஷனருக்கான பொறுப்புகளை உணர்ந்து அவனுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டாள்.
மாற்றிக் கொண்டாள் என்பதைக் காட்டிலும், அவளுக்குமே டப்பிங், பாடல், குடும்ப பிசினஸ், குழந்தைகள், சமையல் என்று வாழ்க்கையின் பொறுப்புகளே அவளை இயல்பாக அந்த மாற்றத்திற்கு அழைத்துச் சென்றிருந்தன.
எது எப்படி இருந்தாலும் தன்னுடைய முக்கிய தருணங்களில் கணவனை தேடுவதை மட்டும் இன்று வரை அவள் நிறுத்தவில்லை.
அதேபோல வேதாந்தும் மனைவியை உணர்ந்து தன் சூழலை அவளுக்கு முன்கூட்டியே தெரிய படுத்தி விடுவான்.
அதனால் ‘சண்டை’ என்ற பேச்சுக்கே அங்கு பெரிதாக இடம் இல்லாது போகும். அப்படியே சண்டையிட்டாலும் அரை மணி நேரத்திற்குள் சமாதானமாகி விடுவார்கள்.
உத்ரா நிலவனை வம்பிழுத்து மன்னிப்பு கேட்க வைத்து தன் பின்னே சுற்ற வைப்பதை கண்டு க்ருதிக்கும் ஆசை எழுந்தது.
அப்படி முயன்று பார்த்து இறுதியில் முடியாமல் அதை நினைத்து நாள் முழுக்க சிரித்துக் கொண்டிருந்தாள்.
“வம்பிழுத்து ஆளை ஓட விடுறதுல என் அக்காவை அடிச்சுக்க ஆளே கிடையாது.. க்ருதிக்கு இதெல்லாம் வராது, தேவையில்லாம முயற்சி பண்ணாத..” என்று சிரிப்போடு மனைவியை அணைத்துக் கொள்வான்.
நினைவில் மூழ்கி இருந்தவன் தன்னை மறந்து க்ருதியை கட்டிக்கொண்டு அப்படியே உறங்கி போனான்.
ஆனால் வேதாந்த் கண் விழித்த போது க்ருதி தலைக்கு குளித்து விட்டு அவன் அருகில் அமர்ந்து அவனை விழிகளால் பருகியபடி கூந்தலை உலர்த்தி கொண்டிருந்தாள்.
“காலையிலேயே பார்வை பலமா இருக்கே?!.. க்ருதி ரொம்ப ஹாப்பி போல..” என்றபடி புரண்டு அவள் கால் கொலுசில் முத்தமிட வழக்கம் போல கால் விரல்களை உள்ளிழுத்தாள்.
“இந்த பழக்கத்தை நீங்க விடவே மாட்டீங்களா?” என்று க்ருதி சிணுங்க, “க்ருதிக்கு முன்னாடி என் கைக்கு வந்தது இந்த கொலுசு தானே?! மாமா அவ்ளோ உறுதியா இருந்தப்போ எவ்ளோ தவிச்சு போனேன்னு இந்த கொலுசுக்கு தான் தெரியும்..”
“அதுக்காக?! ஒவ்வொரு நாளும் இப்படியா? உங்க மீசை படுத்துற பாட்டுல எனக்கு எவ்ளோ கூசுது தெரியுமா?” என்றாள் வெட்க புன்னகையோடு.
மென்னகையோடு மனைவியை பார்த்தவன், “க்ருதிக்கு முன்னாடி என் கைக்குள்ள இருந்த கொலுசுக்கு எத்தனை ஆயிரம் முத்தம் கொடுத்திருப்பென்னு கணக்கே கிடையாது...” என்று மீண்டும் முத்தமிட்டான்.
“போதுங்க..” என்று கணவனை தன்னை நோக்கி க்ருதி இழுக்க வாகாக அவள் மடியில் தலை வைத்து இடையில் கரங்களை கோர்த்து கொண்டான் வேதாந்த்.
புன்னகையோடு அவனை பார்த்தவள், “ஒவ்வொரு பாட்டு பாடி முடிக்கும் போதும் கிடைக்கற ஆத்ம திருப்திக்கு நிகரா இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது அது இரட்டிப்பாகுதுங்க, மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு...” என்று குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
“இது ஆரம்பம் தான்! க்ருதி தொட வேண்டிய உயரம் இன்னும் எவ்வளவோ இருக்கு..” என்ற கணவனின் சிகைக்குள் விரல்களை நுழைத்து மெல்ல கோதியபடி.,
“அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா?!...
பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா?!...
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிறேன்...
விதி மாறலாம் உன் பாடலில் சுருதி மாறக்கூடுமா?!...”
காதல் என்பது சில நேரங்களில் பட்டாம்பூச்சியாக மனதில் சிறகடித்து பறக்கும், சில நேரங்களில் மழைத்துளியாய் இதயத்தை நனைக்கும், சில நேரம் கடல் அலையாய் ஆர்பரிக்கும்.
ஆனால் இவர்களின் காதல் மட்டும் ஆர்ப்பாட்டம் இல்லாது, ஆளுமை கொள்ளாது, நாளுக்கு நாள் ஆழம் பெற்று பன்மடங்காக பெருகி அன்பின் ஆலாபனையாய், நேச பெருவெளியாய், பேரன்பின் பிரவாகமாய், பெருங்காதலின் ஊற்றாய் மலர்ந்தது.
வேதாந்த் ஆர்யன் க்ருதி மிருதுளாவின் காதலும் அப்படித்தான்!!
தீராத காதலின் தலைவன் மீது க்ருதி கொண்ட முடிவில்லா நேசம் ஒரு வித அழகு என்றால் அவள் நேசத்தை உயிராய் சுமந்த வேதாந்தின் பேரன்பு பேரழகு!!
அன்பும், நம்பிக்கையும் கலந்த இவர்களின் பெருங்காதல் காலத்தின் எல்லைகளை கடந்து அழியாத காவியமாக என்றும் தொடரட்டும்.
நிறைந்தது...
Comments
Post a Comment