தீராத காதல் தொல்லையோ?!... FINAL 3

 


“சொல்லுங்க மாமா..” என்று வேதாந்த் கேட்கவுமே, “நான் அவ்ளோ தூரம் சொல்லியும் நீங்க எதுக்காக ரியாவோட ஊருக்கு போனீங்க மாப்பிள்ளை?” என்று நேராக விஷயத்திற்கு வந்தார் வாசுதேவன். 

“மாமா, அத்தையோட இறுதி ஆசையையும் உங்களோட உணர்வையும் நான் ரொம்பவே மதிக்கிறேன். அதுக்காக குற்றவாளிகளை வெளியே சுதந்திரமா நடமாட விட்டுட்டு  என்னால கையை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது…”

“அத்தையோட வலி, வேதனை, க்ருதியையும் உங்களையும் பிரிந்தவங்க இழந்த வாழ்க்கை, கனவு எதையுமே என்னால திருப்பி கொடுக்க முடியாது அதேநேரம் அவங்களுக்கு நடந்த கொடூரத்துக்கு நீதி வாங்கி கொடுக்க வேண்டியது என்னோட கடமை….”

“உங்களுக்கு ஒரு மகன் இருந்திருந்தா அத்தையோடு முடிவு அவனுக்கு எந்தளவு வலி கொடுக்குமோ அதே அளவு எனக்கு இருக்கு. அதோடு குற்றங்களை தடுக்க வேண்டிய பொறுப்புல இருக்கிறவன் நான்!! இப்படி ஒரு குற்றம் நடந்தது தெரிய வந்த பிறகும் நீங்க சொல்ற மாதிரி என்னால அமைதியா இருக்க முடியாது..”

“அது என்னோட வேலைக்கு நான் செய்யற துரோகம் மாமா.. அந்த அய்யோக்கிய ராஸ்கல்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்து அத்தையோட இழப்புக்கு குறைந்தபட்ச ஈடு செய்ய நினைக்கிறேன்..”

“மாப்பிள்ளை..” என்று வாசுதேவன் நெகிழ்வோடும் தவிப்போடும் இருக்க, “முதல்ல உங்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவு படுத்திடுறேன் மாமா..” என்று சொல்லவும் கண்ணீரை உள்ளிழுத்தபடி அவனை பார்த்தார்.

“அன்னைக்கு குற்றத்துல ஈடுபட்ட ஆறு பேரோட முழு டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன். எந்த ஊர், என்னென்ன குற்ற பின்னணி, சம்பந்தப்பட்ட வழக்குகள், நிலுவையில் இருப்பவை, சாட்சிகளை விலைக்கு வாங்கி, ஆதாரங்களை அழிச்சு சுதந்திரமா உலாவிட்டு இருக்கிற எல்லாரும் ரொம்ப பெரிய பொசிஷன்ல இருக்காங்க, ஆனா எதுவுமே நேர்மையான வழியில இல்லை..” என்றதில் வாசு தவிப்போடு பார்த்தார். 

“அவங்க கிட்ட அதை எதிர்பார்க்கிறது முட்டாள்தனம்.. இத்தனை வருஷத்துல பணமும், பதவியும் குற்றங்களை தங்குதடை இல்லாமல் செய்யும் தைரியத்தை கொடுத்திருக்கு..”

“அதுக்காக தான் மாப்பிள்ளை சொல்றேன், உங்களுக்கு இது வேண்டாமே…”

“மாமா நீங்க என்னை உங்க மாப்பிள்ளையா மட்டுமே பார்க்கிறது தான் பிரச்சனை.. ஒரு உயிர் போராடிகிட்டு இருக்கும் போது டாக்டர் அதை கை காட்டி பார்க்கிறது எவ்ளோ பெரிய அநீதியோ அதுபோல தான் நீங்க என்னை விலகி இருக்க சொல்றதும்..”

“நிச்சயம் என்னால முடியாது மாமா.. அதுக்காக அத்தையோட விஷயம் பற்றி நீங்க கவலை பட வேண்டாம், அது எப்பவும் வெளியே வராது. அதேநேரம் குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கபடுவார்கள்…” என்று உறுதியான குரலில் சொல்ல புரியாமல் பார்த்தார் வாசுதேவன்.

“எப்படி முடியும்னு தானே நினைக்கறீங்க?!” என்றதற்கு அவர் தலையசைக்க, “என்மேல நம்பிக்கை வைங்க! எதை பத்தியும் யோசிச்சு உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்காதீங்க.. இத்தனைக்கும் என்னோட விசாரணையில் அத்தையோட பேரை கூட நான் உபயோகிக்களை…”

“அப்புறம் எப்படி மாப்பிள்ளை அவங்களை கண்டு பிடிச்சீங்க?”

“அது, அன்னைக்கு அத்தை அவங்களில் ஒருத்தனை ‘டைகர் துரை’ என்று கூப்பிட்டாதா சொன்னீங்களே?!…” என்று கேட்கவும் அவர் தலை அன்னிச்சையாக அசைந்தது. 

அதேநேரம் அவர்கள் இருவருக்குமான டீயோடு க்ருதி அங்கே வர அவர்களின் பேச்சு தடைப்பட்டது.

“டீ எடுத்துக்கோங்க ப்பா..” என்றவள் கணவனுக்கும் கொடுக்க, “க்ருதி இன்னும் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணலையா?” என்றான். 

“பேசிட்டு இருந்ததுல மறந்துட்டேங்க, நீங்க எடுத்துக்கோங்க..”

“தேங்க்ஸ்..” என்று வேதாந்த் சொல்ல, “நான் எவ்ளோ பயந்திருந்தேன் தெரியுமா?! ஆனா இப்போ உங்க இரண்டு பேரையும் இப்படி பார்க்க அவ்ளோ சந்தோஷமா இருக்கு ப்பா” என்றதில் அவர்களிடம் புன்னகை. 

“சரி, நேரமாச்சு சேன்ஜ் பண்ணிட்டு டேப்லெட் போடு க்ருதி, நான் வந்துடுறேன்..” என்று மனைவியை அனுப்பிவிட்டு மாமனாரிடம் திரும்பியவன்,

“அந்த ஒரு க்ளூ வச்சு இப்போ குற்றவாளிகள் அனைவரையும் கண்டு பிடிச்சு இருக்கேன்..” என்றவன் தன் கைபேசியை எடுத்து ஒரு புகைப்படத்தை காண்பித்தான்.

அதை கண்ட வாசுதேவனின் கண்கள் இடுங்கியது. “இது.. இது.. இந்த ஃபோட்டோவில் ஏழு பேர் இருக்கங்களே மாப்பிள்ளை.. இதுல யார்?”

“இதுல இருக்கிற ஆறு பேர் தான் குற்றவாளிகள். வலது ஓரத்துல இருக்கிற மாணிக்கம் அத்தையோட ஊர்காரர். ஆறு பேரில் ஒருத்தர் இவருக்கு தூரத்து சொந்தம்…”

“எலெக்ஷன் டியூட்டிக்கு வந்தவங்க நேரம் கிடைக்கும் போது அங்கிருந்த ஏரியில குளிச்சிருக்காங்க.. அவங்களுக்கு தேவையான சாப்பாடு வாங்கி கொடுத்து ஆற்று மீனை வறுத்து கொடுத்தது இந்த மாணிக்கம் தான்..”

“அப்படி ஒருமுறை மாணிக்கத்தோடு இவங்க எடுத்துகிட்ட ஃபோட்டோ தான் இது…” என்றவன் அவர்களின் தற்போதைய புகைப்படங்களையும் அவருக்கு காண்பித்தான். 

“மாப்பிள்ளை, இந்த ஆளு குழந்தை கடத்தல் கேஸ்ல ஈடுபட்டதா நியூஸ்ல வந்ததே…” என்று ஒருவனை பற்றி கேட்க, “ஆமா மாமா, ஆனா அது ஆதாரம் இல்லாத குற்றசாட்டுன்னு இப்போவரை பதவியில இருக்கான்..” என்றிட வாசு அவர்களின் புகைப்படங்களை பார்த்திருந்தார். 

“க்ருதி பாட்டி வீட்டுல தங்கி இருந்த இரண்டு நாளும் ஏரிக்கரை ஓரமா குடி இருந்த எல்லாரையும் விசாரிச்ச போது மாணிக்கம் கிட்ட இருந்து கிடைச்ச தகவலும் ஃபோட்டோவையும் வச்சு தான் இவங்களை அடையாளம் காண முடிஞ்சது..”

“மாப்பிள்ளை, அப்போ ரியாவோட விஷயம்?” என்று வாசு பதற்றத்தோடு கேட்டார். 

“இல்லை மாமா மாணிக்கத்துக்கு அதை பற்றி எதுவும் தெரியலை. அன்னைக்கு அந்த சம்பவம் நடந்த போது அவர் ஊருலயே இல்லையாம் தன் பொண்ணோட வீட்டுக்கு போயிருந்தாராம்… அதேநேரம் அன்னைக்கு ரயில்ல மாட்டி அத்தை இறந்ததை பற்றியும் சொன்னார், அவரும் அது விபத்துன்னு தான் நினைச்சுட்டு இருக்கார்..”

“இந்த ஆறு பேருல ஒருத்தன் ஐந்து வருடத்துக்கு முன்னாடியே ஆக்சிடென்ட்லயும் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இன்னொருத்தன் ஹார்ட் அட்டாக்கிலும் இறந்துட்டாங்க..”

“மீதி இருக்கிறது இந்த நாலு பேர் தான்..” என்று சுட்டி காண்பித்தவன் அவர்கள் நான்கு பேரும் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன பொறுப்புகள் வகிக்கிறார்கள் என்று எடுத்து சொன்னான்.

“எல்லாம் சரி மாப்பிள்ளை ஆனா..” என்ற வாசுவிற்கு வேதாந்தின் பாதுகாப்பே பிரதானமாக இருந்தது. 

ஒவ்வொரு அடியையும் ரொம்ப கவனமாக தான் எடுத்து வைக்கிறேன் மாமா. க்ருதியையும், என் குழந்தையையும் பாதுகாக்க வேண்டியது என் முதல் பொறுப்பு! அதே நேரம், நீதியை நிலைநாட்ட வேண்டியது என் கடமை!

“அந்த இரண்டுக்கும் எந்த ஆபத்தும் வராத மாதிரி நான் பார்த்துக்கிறேன். இதுவரைக்கும் நான் செய்த எந்த விஷயத்தையும் அவசரப்பட்டு செய்யலை இதுக்கு மேலயும் ரொம்ப கவனமா இருப்பேன்..”

“குழந்தை கடத்தல் மட்டுமல்ல இன்னும் ரெண்டு பேரு பொண்ணுங்க விஷயத்துல ஒருமுறை ஆதாரப்பூர்வமா மாட்டியதில் சஸ்பெண்டாகி இருக்காங்க...” என்றவனை இடையிட்டு, 

“ஆனா அவங்க எல்லாம் வேற வேற இடத்துல இருக்காங்கன்னு சொல்றீங்களே மாப்பிள்ளை... எப்படி அவங்களுக்கு நீங்க தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்?”

“அதைப் பற்றின கவலை உங்களுக்கு வேண்டாம் மாமா. இவர்கள் சம்பந்தபட்டிருக்கும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக என்னை நியமிக்க சொல்லி கேட்பேன்.. அதோடு இன்னும் சில வருடங்கள்ல எனக்கு பதவி உயர்வு வர வாய்ப்பு இருக்கு. சூழ்நிலை சரியா அமைஞ்சா, அவங்க இருக்குற பகுதியில வேலை செய்யுற வாய்ப்புக்கும் நான் முயற்சி பண்ணுவேன்..”

“அதெல்லாம் அவ்வளவு சுலபமா முடியுமா மாப்பிள்ளை? அவங்க அசைக்க முடியாத இடத்துல இருக்காங்களே?!...” என்றதில் வேதாந்த் லேசாகப் புன்னகைத்தான்.

“அரசியல்வாதிங்கள் கூட அவங்களுக்கு இருக்கிற தொடர்பை தானே சொல்றீங்க?” என்று கேட்டவன், “மாமா, சட்டப்படி செய்ய வேண்டிய முயற்சிகளை எல்லாம் செய்வேன். தேவைப்பட்டா நிர்வாக ரீதியில உதவி கேட்க வேண்டிய இடத்துல கேட்டு வாங்கிப்பேன்.. எக்காரணம் கொண்டும் இதுல இருந்து பின்வாங்க மாட்டேன்...” என்றான் உறுதியான குரலில்.

“ஆனா மாப்பிள்ளை, எனக்கு நீங்க தான் முக்கியம்!! நீங்களும் க்ருதியும் சந்தோஷமா இருக்கணும். அதுக்கு மேல எனக்கு வேற எதுவும் வேண்டாம்…” என்றார் மீண்டும்.

“மாமா... உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னே தெரியல. ‘ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்... பாடுற மாட்டைப் பாடித்தான் கறக்கணும்’ன்னு சொல்வாங்களே... யாரை எப்படி டீல் பண்ணினா காரியம் நடக்கும் என்று எனக்குத் தெரியும். அதுக்காக என்னோட உயிரை ஆபத்துல நிறுத்தி நான் எதுவும் செய்ய மாட்டேன்..”

“இன்னொரு விஷயம் இதெல்லாம் சினிமாவுல காட்டுற மாதிரி சொடக்கு போடும் நேரத்துல நடந்துடாது.. சட்டத்துக்கு உட்பட்டு இவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது அவ்ளோ சுலபமில்லை. ஒவ்வொருத்தரும் செய்திருக்க கூடிய தவறு, சம்பந்தபட்டிருக்கும் வழக்குக்கான ஆதாரம் சேர்த்து வழக்கு தொடுத்து குற்றத்தை நிருபிச்சு தண்டிக்க வருஷ கணக்காகும்..” 

“அதோடு இதெல்லாம் அத்தைக்கு செய்த கொடூரம் தான் அவங்களை பின்தொடருது என்று தெரியாத வகையில் காய் நகர்த்தணும். ஆனா அத்தையோட மரியாதைக்கும் எந்த பங்கமும் வராது, குற்றவாளிகளும் தப்பிக்க மாட்டாங்க… என்கிட்ட நம்பிக்கை மட்டும் வைங்க!!” என்றான்.

வேதாந்தின் வார்த்தைகளில் இருந்த உறுதியையும், கண்களில் தெரிந்த நேர்மையையும் பார்த்த வாசுதேவன் சில நொடிகள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். 

‘மருமகன் பேச்சில் இருந்த உறுதியும் நிச்சயம் குற்றவாளிகளை தண்டிப்பான் என்ற நம்பிக்கையும் அவர் மனதை மயிலிறகாக வருடி கொடுத்தது..’ 

ஒரு பக்கம் மருமகனின் நேர்மை பெருமையாக இருந்தது, இன்னொரு பக்கம் அவன் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவரை விடவில்லை

அதை சரியாக கண்டு கொண்டவன், “உங்க பயம் நியாயமானது மாமா, ஆனா என் மேல வச்சுருக்க நம்பிக்கையை மட்டும் விட்டுடாதீங்க.. அத்தைக்கு நீதி கிடைக்குற நாள் தூரமில்லை மாமா... ஆனா அந்த நாள்வரை யாருக்கும் என்னோட அடுத்த நகர்வு தெரியாது..” என்றான். 

மருமகனின் வார்த்தையில் தன்னை மீறி வாசுதேவன் மனதில் நிம்மதி பரவி எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொடுத்தது.


Comments