- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
“என்ன விஷயம் டா?” என்றார் வாசுதேவன் மகளிடம்..
“எங்களுக்கு கல்யாணமான புதுசுல பாட்டி வீட்டை பற்றி ஊரை பற்றி அவங்க விசாரிச்சாங்க.. ‘அத்தை இல்லாததால நீங்க யாரும் அங்க போறதை நிறுத்திட்டீங்களானு கேட்டாங்க’ அப்புறம் ஒரு நாள் ‘நாம உன் பாட்டி வீட்டுக்கு போய் வரலாமான்னு கேட்டாங்க..’ அப்போ கூட எனக்கு எதுவும் தோணலை..”
“என்ன சொல்ற மித்து? மாப்பிள்ளை.. ப்ச் நீங்க அங்க போயிருந்தீங்களா?” என்றார் அதிர்வோடு.
“ஆமா ப்பா, அங்க பாட்டி ஊருக்கு பக்கத்து ஊருல அவரோட சீனியர் ஆஃபிசர் யாரோ இருக்காங்களாம், அவங்களை பார்க்கணும்னு சொல்லி கூட்டிட்டு போனவர் அப்படியே பாட்டி வீட்டுக்கும் அழைச்சுட்டு போனார், அங்கேயே இரண்டு நாள் தங்கினோம்..”
“இதை ஏன் நீ என் கிட்ட சொல்லலை?”
“ப்பா இந்த சந்திப்பு ரொம்ப கான்பிடென்ஷியலா இருக்கணும் சின்னதா விஷயம் வெளியே கசிந்தாலும் அவருக்கு ப்ராப்ளம்னு சொன்னாங்க.. அதுதான் யாருக்கும் சொல்லலை…”
“ஆனா போன வாரத்துல ஒருமுறை அவங்க ஃபோன் பேசிட்டு இருந்தப்போ நாராயணன் தாத்தா, அப்புறம் மாணிக்கம்னு ஒருத்தர் இன்னும் சிலரை பற்றி ஏதோ சொல்லிட்டு இருந்தாங்க. அதுதான் ஏதாவது பிரச்சனையா? உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்…” என்று கேட்க வாசுதேவனுக்கு ‘என்ன நடக்கிறது’ என்று புரிந்து போனது.
“இதை பற்றி மாப்பிள்ளை கிட்ட கேட்கலையாடா?”
“இல்லை ப்பா, ஏற்கனவே அவங்களுக்கு டென்ஷன் ஜாஸ்தி. கிடைக்கிற கொஞ்ச நேரத்தை நிம்மதியா ஃபேமிலி கூட ஸ்பென்ட் பண்ண தான் நினைப்பாங்க அதனால அதிகமாக அவங்களோட வேலை பற்றி நான் கேட்டுக்க மாட்டேன்..”
“சரி, நான் மாப்பிள்ளை கிட்ட பேசிக்கிறேன். நீ இதை பற்றி எதையும் யோசிக்க வேண்டாம்.. டெலிவரிக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்குன்னு சொல்லி இருக்காங்க பேக்கிங் முடிச்சாச்சா?” என்று மகளை திசை திருப்பினார்.
“ஓரளவு முடிச்சுட்டேன் ப்பா.. இன்னும் கொஞ்சம் இருக்கு நாளைக்கு வீட்டுக்கு வந்த பிறகு முடிச்சுடுவேன்..”
“சரிடா, மறக்காமல் மெடிக்கல் ரிபோர்ட்ஸ் எடுத்து வச்சுடு..” என்றிட அவர்களுக்கான சுண்டல் பொங்கலோடு அங்கே வந்தனர் உத்ராவும் மஹிமாவும்.
மெல்ல ஒவ்வொருவராக சுமங்கலிகள் வந்து சேர மாலை ஆறு மணிக்கு க்ருதியின் பாடலோடு பூஜையை ஆரம்பித்தனர்.
“மாப்பிள்ளை இன்னும் வரலையே சம்பந்தி?!” என்று வாசு சைலேந்தரிடம் கேட்க, “வரேன்னு தான் சொல்லி இருந்தான் வாசு ஆனா ஏதாவது முக்கியமான வேலை வந்திருக்கும் அதுதான் இன்னும் காணோம்..” என்றிட அங்கே வந்து சேர்ந்தார் சேதுபதி.
பூஜை நல்லபடியாக முடிய வாகீஸ்வரியை தொடர்ந்து உத்ரா, கிரிஜா, தன்ஷி, மஹிமா அனைவரும் விரதம் முடித்தனர். ஆனால் க்ருதி மட்டும் அவ்வப்போது போனை எடுத்து பார்ப்பது, வாசலுக்கும் வீட்டுக்குமாக நடப்பது என்று இனிய அவஸ்த்தையோடு கணவனின் வரவிற்காக காத்திருக்க தொடங்கினாள்.
மற்றவர்களை போல நினைத்த நேரம் கணவன் அவள் எதிரில் வந்து நிற்க முடியாது. சில நேரம் சொன்ன நேரம் மட்டுமல்ல கொடுத்த வாக்கை கூட அவனால் காப்பாற்ற முடியாது போகும்.
முதலில் அதை ஏற்க அவளுக்கும் கடினமாக இருந்தாலும் காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆவல் அதிகரித்து கணவன் மீதான தேடலும் நேசமும் அதிகரிப்பதை உணர்ந்தாள். அவளை விடவும் இரண்டு மடங்கு வேகத்தோடும் நேசத்தோடும் மனைவியை தேடி வருவான் வேதாந்த்.
காரில் ஏறியதுமே வீடியோ காலில் அவளை இணைத்து விட்டு எதுவும் பேசாமல் அவள் முகத்தை மட்டும் பார்த்திருப்பான். க்ருதிக்கு அந்த நொடிகளில் வெட்கம், புன்னகை, சிரிப்பு, கோபம் என்று அத்தனை உணர்வுகளும் பிரவாகிக்கும்.
“இப்படியே இருந்தா எப்படி? ஏதாவது பேசுங்க..” என்று க்ருதி கேட்டாலும் அவனிடம் இருந்து ஒரு வார்த்தை வராது. அவளையும் ‘எதுவும் பேச வேண்டாம்’ என்று சொல்லி விடுவான்.
நொடிக்கு நொடி அவன் பார்வை ஆழம் பெற க்ருதி தான் அவஸ்த்தைக்கு உள்ளாகி போவாள். அறையில் இருக்கும் போது மட்டுமல்ல வேலை செய்யும் போதும் அழைப்பை துண்டிக்க விடமாட்டான்.
‘க்ருதியை வேலை செய்ய வேண்டான்னு நான் சொல்லலையே?! க்ருதியை டிஸ்டர்ப் பண்ணாம அமைதியா பார்த்துட்டு இருக்கேன்..” என்று சொல்லி விட அவன் பார்க்கும் வகையில் மொபைலை வைத்து விட்டு உடைகளை மடிப்பது தொடங்கி மற்ற வேலைகளை செய்வாள்.
இன்றும் கணவன் எந்நேரமும் அழைப்பான் என்பதால் ஆசையோடு கைபேசியை எடுத்து பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் இன்று அவன் அவளுக்கு அழைக்கவில்லை.
இரவு ஒன்பது மணி போல தான் வேதாந்த் வீட்டிற்கு வந்திருந்தான். திருமணத்திற்கு பிறகான முதல் வரலக்ஷ்மி பூஜை என்பதால் ‘நிச்சயம் மனைவி தனக்காக காத்திருப்பாள்’ என்று அவனுக்கு தெரியும் ஆனால் சூழலுக்கு தெரியவில்லையே?!
காலை கல்லூரிக்கு பரீட்சை எழுதுவதற்காக சென்ற மாணவி ஒருத்தி மாலை வீடு திரும்பாததில் கிடைத்த புகாரின் பேரில் தீவிரமான தேடுதல் நடவடிக்கையில் ஈடு பட்டிருந்தான் வேதாந்த் ஆர்யன்.
‘கடத்தப்பட்டிருக்கலாமா?! கொலை செய்யப்பட்டிருக்கலாமா?! காதலனுடன் சென்றிருக்கலாமா?!’ என்று எல்லா கோணங்களிலும் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இறுதியில், அவள் விரும்பிய படிப்பை பெற்றோர் படிக்க வைக்க மறுத்ததால், பெங்களூரில் வசிக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்றிருப்பது தெரிய வந்தது. அதன் பிறகே வேதாந்த் நிம்மதியாக அங்கிருந்து கிளம்ப முடிந்தது.
அவனை கண்டதுமே க்ருதி அவசரமாக எழுந்து கொள்ள, “பார்த்து மித்து, மெதுவா… வாசலுக்கு வந்த ஆரி வீட்டுக்குள்ள வராம எங்கயாவது ஓடியா போக போறான் எதுக்கு இவ்ளோ அவசரப்படற?” என்று சிரித்தாள் உத்ரா.
“அண்ணி..” என்று புன்னகையோடு அவளருகே அமர, “குழந்தை இருக்கிற வீடு! நாலு இடம் சுத்தறவன் முதல்ல பிரெஷ்ஷப் ஆகிட்டு வரட்டும்..” என்று சொல்ல வேதாந்த் பக்கவாட்டில் இருந்த குளியலறைக்கு சென்றான்.
இப்போது என்றல்ல, மனைவி கர்ப்பமாகியதில் இருந்தே வெளியில் குளித்து விட்டு வீட்டிற்குள் வருவதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறான்.
அதோடு தன்ஷி கடந்த மூன்று மாதமாக குழந்தையோடு இங்கே இருப்பதால் குற்றம் நடைபெற்ற இடங்களுக்கு செல்லாது போனாலும் குளிக்காமல் வீட்டினுள் நுழைய மாட்டான்.
வேஷ்டி சட்டையில் தயாராகி வந்த வேதாந்திடம் கற்பூரம் ஏற்றி வாகீஸ்வரி கொடுக்க மனைவியோடு அம்மாவிற்கு ஆரத்தி காண்பித்தவன் விழுந்து வணங்கிட “ஆசிர்வாதம் பண்ணுங்க..” என்று க்ருதி அவன் பாதம் பணிய முயன்றாள்.
“க்ருதி, என்ன இதெல்லாம்? பார்த்து, கேர்ஃபுல்” என்று அவளை தடுத்து தன் தோளோடு அணைத்து கொண்டவன் பூக்கள் தூவி அவள் தாலியிலும் நெற்றியிலும் குங்குமம் வைத்தான்.
“அண்ணா அண்ணிக்கு ஸ்வீட் கொடுங்க..”
“க்ருதி, இன்னும் சாப்பிடலையா தன்ஷி?..”
“சாப்பிட்டாங்க ஆனா குழந்தைக்காக.. இப்போ அவங்களுக்காக ஸ்வீட் கொடுக்க சொல்றேன்..” என்றிட புன்னகையோடு மனைவிக்கு ஊட்டி விட்டான்.
“சரி முதல்ல இரண்டு பேரும் சாப்பிடுவீங்க வாங்க…” என்று அழைத்தார் வாகீஸ்வரி.
“நீங்க எல்லாரும் சாப்ட்டீங்களா ம்மா? மாமா நீங்க?” என்று வாசுவிடம் கேட்க, “நாங்க எல்லாரும் சாப்பிட்டாச்சு மாப்பிள்ளை நீங்க முதல்ல சாப்பிடுங்க..” என்றார்.
“ஆரி, மேடம் உனக்காக சர்ப்ரைஸ் வச்சு காத்திருக்கா நீ என்னடான்னா வந்து இவ்வளவு நேரமாகியும் அமைதியா இருக்க?! ஒரு சின்ன காம்ப்ளிமென்ட் கூட கிடையாதா?” என்றாள் உத்ரா சிரிப்போடு.
“என்ன சர்ப்ரைஸ் க்கா?” என்று புரியாமல் பார்த்தான்.
“அதை நீ மித்துவை தான் கேட்கணும்.. என்ன அப்படி தானே?!..” என்று மிருதுளாவை வம்பிழுக்க, “கேட்க கூடாது ஆரி மித்துவை பார்க்கணும்.. அப்போ தான் என்ன சர்ப்ரைஸ்னு புரியும்…” என்று தங்கையை அவன் முன் நிறுத்தினாள் மஹிமா.
அடுத்த நொடியே வேதாந்தின் பார்வை வேகமாக மனைவி மீது படிந்தது. மறுநொடியே இனிய அதிர்ச்சியோடு க்ருதியை பார்த்தவனின் பார்வை அவளில் நிலை கொண்டது.
“சரி சரி இரண்டு பேரும் காதல் பயிரை வளர்க்க ஆரம்பிச்சுட்டாங்க, இனியும் நாம இங்க இருந்தா வனத்துறைக்கு கால் பண்ணினாலும் பண்ணிடுவாங்க, வாங்க போகலாம்..” என்றாள் உத்ரா சிரிப்போடு..
“வனத்துறைக்கு எதுக்கு க்கா?”
“லவ் பேர்ட்ஸ்க்கு இடையில கரடியா இருக்கிற நம்மளை பிடிச்சுட்டு போக சொல்லி தான்!!” என்று உத்ரா சிரிக்க அவள் சிரிப்பு மற்றவர்களையும் தொற்றிக்கொண்டது.
“எப்படி இருக்குனு நீங்க சொல்லவே இல்லையே?!” என்ற மிருதுளா ஆவலோடு கணவனை பார்த்தாள்.
வேதாந்தோ மனைவியின் எழில் கோலத்தில் இமைக்கவே மறந்திருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
சென்ற ஆண்டு அவன் வாங்கிக் கொடுத்த பட்டுப்புடவை... இன்று நிறைமாத கர்ப்பிணியாக தன் குழந்தையை சுமந்தபடி அணிந்து நின்ற மனைவியை பார்த்தவனின் மனம் உணர்வு குவியலாகி போயிருந்தது.
கருவிழிகள் அசைந்தாட க்ருதி அவனை பார்க்கவும், “நான் வார்த்தையா சொன்னா தான் க்ருதிக்கு புரியுமா?!” என்று புருவம் உயர்த்தி உதடுகளை குவித்து கண் சிமிட்டினான்.
கணவனின் ஒற்றை பார்வையிலும், குறும்பிலும் க்ருதியின் முகம் செங்கொழுந்தாகி போக, பல மணி நேரம் காத்திருந்த ஏக்கம் முழுவதும் கரைந்து, க்ருதியின் இதழ்களில் வெட்கப் புன்னகை மலர்ந்தது.
இத்தனை நேரம் உத்ராவும் தன்ஷியும் அவளை ஓட்டிக்கொண்டு இருந்ததில் அவர்கள் தன்னை பார்த்தால் மீண்டும் ஆரம்பித்து விடுவார்களே என்று கைபேசியை பார்த்தபடி, “சரி, சரி.. சாப்பிட வாங்க, நேரமாச்சு…” என்று டைனிங் டேபிளை நோக்கி சென்றாள்.
புன்னகையோடு மனைவியை தொடர்ந்தவன் முதலில் அவளை அமர்த்தி பரிமாறி சாப்பிட வைத்தான்.
“சோழியும் குடுமியும் சும்மா ஆடாதேன்னு நினைச்சேன்.. சரியா இருக்கு..” என்று சிரிப்போடு அங்கே வந்த உத்ரா மீண்டும் மிருதுளாவை கிண்டல் செய்தபடி தம்பிக்கு பரிமாறினாள்.
மகளும் மருமகனும் சாப்பிட்டு முடிக்க, “மாப்பிள்ளை உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றார் வாசுதேவன்.
அவர் முகம் கண்ட வேதாந்தின் கண்கள் இடுங்க, “சரி மாமா வாங்க..” என்று அவரை தோட்டத்திற்கு அழைத்து சென்றான்.
“உட்காருங்க மாமா.. சொல்லுங்க, என்ன விஷயம்?” என்றவன் ‘தன் மனைவி மூலமாக எப்போது வேண்டுமானாலும் மாமனாருக்கு விஷயம் தெரிய வந்து.. தன்னை கேட்க வாய்ப்பு உண்டு’ என்று அறிந்திருந்ததால் அதற்கு தயாராக இருந்தான்.
Comments
Post a Comment