தீராத காதல் தொல்லையோ?!... FINAL 1

 


அதிகாலை முதலே வேதாந்தின் பிரம்மாண்டமான வீட்டில் வரமஹாலக்ஷ்மி பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்தன.

வாசலில் மா தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. வெள்ளைக் கோலத்தின் நடுவே செந்நிறக் காவி இழுக்கப்பட்டு, அதன் மத்தியில் லட்சுமி பாதங்கள் வரையப்பட்டிருந்தது.

வீட்டின் ஹாலில் வெள்ளி கலசத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த வரமஹாலக்ஷ்மி அம்மன், மல்லிகை, ரோஜா, செவ்வரளி மற்றும் செந்தாமரை  மலர்களால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தாள்.

வீட்டின் பெண்கள் அனைவரும் தங்கள் வேலையில் மூழ்கியிருந்தனர். 

வாகீஸ்வரி சமையலறையில் மும்முரமாக விரதத்திற்கு தேவையான பிரசாதங்களை தயாரித்துக் கொண்டிருக்க உத்ரா மற்றும் மஹிமா தாம்பூலத் தட்டுகளை அலங்கரிப்பதில் பிஸியாக இருந்தனர்.

“அத்தை இந்த புடவை சரியா இருக்குமா பாருங்க?..” என்று கிரிஜாவிடம் கொடுத்தாள் தன்ஷிகா. 

“இது சரியா இருக்கும்..” என்றவர் “மூணு மாசம் ஆக போகுது தன்ஷி.. இனி குழந்தை கவிழ முயற்சி பண்ணுவான்.. எந்நேரமும் பெட்ல தொட்டில்லையே  படுக்க வைக்க கூடாது..” என்று அர்ஜூன் தன்ஷிகாவின் மகன் வினோதனை விரித்து வைத்திருந்த பாய், பெட்ஷீட் மீது புடவையை மடித்து போட்டு படுக்க வைத்தார். 

இவர்கள் அனைவருக்கும் நடுவில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த க்ருதி மெரூன் நிறத்தில் தங்க நிற பார்டர் கொண்ட காஞ்சிப்புரம் மென்பட்டு புடவையில் தாய்மையின் பூரிப்போடு தரையில் அமர்ந்து மல்லிகைப் பூக்களை தொடுத்துக் கொண்டிருந்தாள்.

க்ருதி இன்று கட்டியிருந்தது சென்ற வருட வரலட்சுமி பூஜைக்கு வேதாந்த் அவளுக்கு பரிசளித்த பட்டுப் புடவையை தான்!!

அன்று புடவையை மறுத்தவள் திருமணத்திற்கு பிறகான ஒரு நாளில் கணவனிடமிருந்து கேட்டுப் பெற்று இருந்தாள். 

‘மனைவி உடனே தனக்கு கட்டி காண்பிப்பாள்’ என்று அவன் காத்திருக்க அவளோ ‘இப்போ இல்லை.. இன்னொரு நாள் சர்ப்ரைஸா..’ என்று சொல்லி இன்று ஆசையாக வேதாந்திற்கு காண்பிக்க காத்துக் கொண்டிருக்கிறாள்.

அப்பப்போது புடவையை நீவி விட்டவள் மனதில் அன்றைய வேதாந்தின் முகம் மின்னியது..

அவள் புடவையை மறுத்த போதும் ஏமாற்றம் என்பது சிறிதும் இல்லாமல் அவன் முகத்தில் ‘என்று இருந்தாலும் ஒரு நாள் இதை நீ கட்ட தான் போகிறாய்’ எனும் அசாதாரணமான நம்பிக்கை கண்டவளுக்கு அப்போதே ஆச்சர்யமாக இருந்தது. 

இப்போதும் அதை நினைவு கூர்ந்தவளுக்கு அவன் உறுதியில் தன்னை அறியாமல் முகத்தில் புன்னகை படர்ந்தது. 

தன்ஷிகாவிற்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவள் தாய் வீட்டில் சுகமாய் சீராடி கொண்டிருக்க சென்ற வாரம் வளைகாப்பு செய்யப்பட்டு தாய் வீட்டிற்கு சென்ற க்ருதி மிருதுளா இன்று வரமஹாலக்ஷ்மி பூஜைக்காக இங்கே வந்திருக்கிறாள். 

“மித்து இந்த புடவையை நான் எங்கேயோ பார்த்திருக்கேனே..” என்று வாகீஸ்வரி மருமகளை கேட்க, “மறந்துட்டீங்களா த்தை?! போன வருஷ வரலட்சுமி பூஜைக்கு நீங்க எங்களுக்கெல்லாம் புடவை எடுத்த போது அவங்க எனக்காக எடுத்தது..” 

“ஓ அப்படியா?!” என்றார் புன்னகையோடு.

“ஆமா த்தை..”

“ச்சோ, நான் தான் மறந்துட்டேன் போல.. உனக்கு இந்த நிறம் ரொம்ப அழகா இருக்கு..” என்றிட “அப்போ இது அண்ணனோடு காதல் பரிசுன்னு சொல்லுங்க அண்ணி..” என்றாள் தன்ஷிகா.

“வெறும் காதல் பரிசு இல்லை தன்ஷி... இது ஏசிபி ஸாரோட முதல் காதல் பரிசு!! மேடம் இதை கட்டுறதுக்காக ஒரு வருஷமா காத்திருக்கான்னா பார்த்துக்கோ..” என்ற உத்ரா க்ருதியின் தோளில் மெல்ல இடித்தாள்.

“ஆமா அண்ணி.. எனக்கு இந்த புடவை ரொம்பவே ஸ்பெஷல்!!” என்று புன்னகையோடு சொன்னவள் கைகள் மீண்டும் கைபேசியை எடுத்து பார்த்தது. 

மித்து, ஃபோன்ல என்னடா இருக்கு? புதுசா ஸ்கிரீன் சேவர் ஏதாவது போட்டிருக்கியா?”

“இல்லையே அண்ணி.. ஏன் கேட்கறீங்க?” 

அப்புறம் ஏன் இரண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை அதை சும்மா திறந்து பார்க்கற?” என்று கேட்க புன்னகையோடு அவளை பார்த்தாள். 

“அக்கா, அண்ணி அண்ணனோட கால் வருமான்னு தான் ஃபோன் எடுத்து பாத்துட்டு இருக்காங்க..” என்றாள் சிரிப்போடு. 

அதேநேரம், “ஒருமுறையாவது இப்படி என்னை எதிர்பார்த்து இருப்பியா தாரா?” என்று கேட்டபடி அங்கே வந்தான் நிலவன். 

“அப்போ உங்க தங்கச்சி கிட்ட இருந்து நாங்க கத்துக்கணும்னு சொல்ல வரீங்களா?!” என்று இடையில் கரம் வைத்து கணவனை பார்த்தவள், “அதை விடுங்க ஆனா நான் எதிர்பார்க்கலைன்னு உங்களுக்கு யார் சொன்னா?” என்று கணவனை பிடித்து கொண்டாள்.

இருவரின் வாக்குவாதத்தை மிருதுளா சிரிப்போடு பார்த்திருக்க, “எனக்கும் என் புருஷனுக்கும் சண்டை மூட்டி விட்டுட்டு சிரிப்பு வேறையா உனக்கு?! ஒழுங்கா ஓடி போயிடு..” என்று சொல்ல ‘இது தான் சாக்கு’ என்று தங்கையை அழைத்து கொண்டு மாமியார் அருகில் சென்று அமர்ந்தான் நிலவன். 

“சாப்பிடுவீங்க வாங்க மாப்பிள்ளை…” என்று வாகீஸ்வரி அழைக்க, “இருக்கட்டும் அத்தை பூஜை முடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம்..” என்றான். 

“குழந்தை இப்போ தான் தூங்க ஆரம்பிச்சுருக்கான் நீ போய் சாப்ட்டுட்டு வா தன்ஷி..” என்றார் கிரிஜா. 

“சரி த்தை..” என்றவள் கிளம்ப, “நீயும் போய் சாப்பிடு மித்து..” என்றார் மகளிடம்.

“இல்லை வேண்டாம் பெரிம்மா அப்புறம் சாப்பிடுறேன்…”

“காலையில இருந்து சாப்பிடாம இருந்தா எப்படி நீ பூஜையில நல்லபடியா கலந்துக்க முடியும்?! எப்போவும் நீ தானே பாட்டு பாடுவ அதுக்க்காகவாவது சாப்பிடு..” என்றார். 

“இல்லை பரவால்ல பெரிம்மா இருக்கட்டும்.. அவங்க சீக்கிரம் வந்துடுவேன்னு சொல்லி இருக்காங்க.. கொஞ்ச நேரம் காத்திருக்கேனே?! அதுவும் இது கல்யாணத்துக்கு பிறகு வரக்கூடிய என்னோட முதல் விரதம்…” 

“அவர் வந்த பிறகு, அம்மா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு.. அவரோட கையால ஒரு வாய் பிரசாதம் சாப்பிட்ட பிறகு தான் விரதம் முடிக்கனும்னு இருக்கேன்..” என்றவள் குரலில் அத்தனை காதல் கொட்டி கிடந்தது. 

“மித்து நீ உன் புருஷனுக்காக காத்திருக்கலாம் ஆனா குழந்தையால காத்திருக்க முடியுமா?” என்றார் வாகீஸ்வரி.

“அத்தை…”

“ஆமா, நீ தனியா இருந்தா உன் இஷ்டப்படி இருன்னு சொல்லிடுவேன் ஆனா உன்னை நம்பி ஒரு உயிர் உனக்குள்ள இருக்கும் போது  இனி எது யோசிப்பதாக இருந்தாலும், செய்யறதாக இருந்தாலும் உங்க இரண்டு பேருக்கும் சேர்த்து தான் நீ முடிவு எடுக்கணும்..” என்று சொல்லவும் மறுத்து பேசாமல் “சரி அத்தை..” என்று ஒப்புக்கொண்டாள்.

இது தான் மருமகளிடம் வாகீஸ்வரிக்கு மிகவும் பிடித்த விஷயம். பெரியவர்களின் எந்த அறிவுரையையும் எதிர்க்காமல், அனாவசியமான வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அப்படியே ஏற்று கொள்வாள். 

இதை பற்றி ஒருமுறை உத்ரா கேட்ட போது, “என் அண்ணி, அத்தை, பெரிம்மா, பெரிப்பா, அக்கா எனக்கு கெட்டது நினைக்க போறாங்களா? இல்லை தப்பான விஷயத்தை சொல்ல போறாங்களா?! என்னோட நலனில் அக்கறையாக இருக்கிற உங்களோட வார்த்தையை விட வேறு எது பெருசா இருந்திட போகுது?!” என்றாள். 

அப்போது அங்கே வந்த உத்ரா, “அம்மாடி... ஆனாலும் உங்க காதல் இப்படி ஓவர்ஃப்ளோ ஆச்சுதுன்னா நாடு தாங்காது.. கொஞ்சம் அணை போடுடியம்மா..” என்று தன் நெஞ்சில் கை வைத்து சொல்ல சட்டென சிரித்து விட்டாள் மிருதுளா. 

அவள் மட்டுமல்ல அனைவர் முகத்திலும் புன்னகை. 

“அண்ணி... ஒருவேளை அண்ணா லேட்டா வந்தா என்ன பண்ணுவீங்க?” என்று தன்ஷி கேட்க, “அதெல்லாம் வருவாங்க…” என்றாள் நம்பிக்கையோடு.

“அது சரி... ஆனா உள்ள இருக்கிற குழந்தை ‘எனக்கு பசிக்குது ம்மா’ ன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என்றாள் சிரிப்போடு. 

“முதல்ல இந்த பால் குடி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுவ..” என்ற மாமியார் சொன்ன படி செய்தவள், அங்கே வந்த வாசுதேவனை அத்தனை சீக்கிரம் அவள் எதிர்பார்க்கவில்லை.

“வாங்க பா, இவ்ளோ சீக்கிரம் வந்திருக்கீங்க?!” என்று மகிழ்ச்சியோடு வரவேற்றவள், “பெரிப்பா வரலையா?” என்றாள். 

“இல்லைடா. எனக்கு உன்னை பார்க்கணும் போல இருந்தது அதுதான் வந்தேன்..” என்றவர் தயிர் வடையை அவளிடம் கொடுக்க க்ருதிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 

“வாங்க ண்ணா..” என்று தண்ணீர் கொண்டு வந்த வாகீஸ்வரியிடம் “அத்தை இப்போ தான் பால் குடிச்சேன் தயிர் வடை சாப்பிடலாமா?” என்றாள். 

“உடனே வேண்டாம் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடு..” என்றார். 

“சரி த்தை..” என்றவள் “அப்பா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..” என்றாள். 

“என்னடா?”

“இல்லை, நம்ம பாட்டி வீட்டுல இல்லை அங்க ஊருல எதாவது பிரச்சனையா? அதை பற்றி அவங்க கிட்ட சொல்லி இருந்தீங்களா?” என்று கேட்டாள்.

“எந்த பாட்டியை பற்றி சொல்ற?” என்றார் புரியாமல். 

“அம்மாவோட அம்மாவை பற்றி சொல்றேன் ப்பா..” என்றிட வாசுதேவன் உடலில் சட்டென ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

Comments