- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
உள்ளே வந்த மனைவியின் முகம் தெளிவில்லாமல் இருப்பதை கண்ட வேதாந்த், “தப்பு என்னோடது தான். ஆனா, க்ருதி இவ்வளவு கில்ட்டோட இருக்குறதை பார்க்குறப்போ எனக்கு கஷ்டம் அதிகமாகுது. ஐ’ம் ஸாரி..”
“நீங்க எதுக்கு ஸாரி சொல்றீங்க?” என்று இதழ்களைக் கடித்தபடி சொன்னாள்.
“இப்போ எதுக்கு க்ருதிக்கு இந்த அழுகை?..”
“நான் ஒன்னும் வேணும்னு அழலை... ஆனா என்னன்னே தெரியல, என் கண்ணுல இருந்து தண்ணி வந்துட்டே இருக்கு... ஸாரி, இனிமே இப்படி செய்ய மாட்டேன்…” என்று அவனுக்கு மாத்திரை மருந்துகளை கொடுத்தாள்.
தன்ஷி வெண்ணீர் கொடுக்கவும் மருந்தை கலந்து கொடுத்தவள் அவன் குடித்து முடிக்கவும், “தூங்குங்க..” என்றாள்.
“க்ருதி இப்படி அழுதுட்டு இருந்தா நான் எப்படி தூங்க முடியும்?”
“நான் அழ மாட்டேன்” என்றவளை தன் அருகே அமர்த்தியவன், “ஏன் க்ருதி இவ்வளவு இமோஷனல்? என்னையும் மீறி ஏதோ ஒரு விஷயம் டிஸ்டர்ப் பண்ணுது.. என்னடா? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க..” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“அது... அம்மா…” என்றவளின் வார்த்தைகள் தழுதழுக்க, மீண்டும் கண்ணீர் வழிந்தது.
“க்ருதிமா..” என்று அவள் கண்ணீரை துடைத்தவன், சற்று தள்ளி படுத்து மனைவியை தன் அருகே படுக்க வைத்து இறுக்கமாக கட்டிக்கொண்டான்.
அவளும் அவன் நெஞ்சில் பாந்தமாக முகம் புதைத்தவள் விசும்பல் அப்போதும் அடங்காமல் போக, அப்படியே அவள் முதுகை வருடியபடி இருந்தான்.
பல நிமிடங்களுக்கு அங்கே கனத்த அமைதி நிலவியது.
“க்ருதி, மனசை ஏதோ கஷ்டப்படுத்துறது எனக்கு புரியுது... ஆனா என்னன்னு தெரிஞ்சா என்னால ஹெல்ப் பண்ண முடியும்... ப்ளீஸ் ஓபன் அப்…” என்றான்.
“எனக்கு ‘க்ருதி’ன்னு பேர் வெச்சது அம்மா... அந்தப் பேர் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதைவிட, எனக்கு அம்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும்…”
“வீட்டில் அவங்க மட்டும் தான் என்னை ‘க்ருதி’ என்று கூப்பிடுவாங்கன்னு பெரியம்மா அடிக்கடி சொல்லுவாங்க… அம்மாவுக்கு அப்புறம் யாருமே என்னை அப்படி கூப்பிட்டது இல்லை..”
“ஏன் யாருமே அப்படி கூப்பிடலன்னு எனக்கு தெரியாது... ஒருவேளை எனக்கு அம்மாவோட ஏக்கம் அதிகமாகிடும்னு நினைச்சாங்களோ... இல்ல அவர்களுக்கே அம்மா ஞாபகம் வந்துடும்னு தவிர்த்தாங்களோ... ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து யாருமே என்னை 'க்ருதி'ன்னு கூப்பிட்டதே இல்லை...”
“நீங்க மட்டும் தான் என்னை அப்படி கூப்பிடுவீங்க. ஒவ்வொருமுறை நீங்க ‘க்ருதி’ என்று கூப்பிடும் போதெல்லாம் எனக்கு அம்மாவோட நியாபகம் வந்துடும்…”
“முன்னாடியெல்லாம் நீங்க கூப்பிடும் போது ‘வேண்டாம், கூப்பிடாதீங்க’ என்று சொல்ல தோணும்... ஆனா அப்புறம் உங்க மூலமா அம்மா என்னோடு இருக்கிற மாதிரி தோனுச்சு.. சொல்லப்போனா அம்மா எனக்கு திரும்ப கிடைச்ச ஃபீல்..” என்று கண்களை அழுத்தமாக துடைத்தவள்,
“நேத்து நீங்க வீட்டில் இல்லாமல் போனது, இப்போ உங்களுக்கு இப்படி ஆனது, எல்லாமே எனக்கு ரொம்ப பயம் கொடுத்துடுச்சு.. எங்கே அம்மா மாதிரி நீங்களும் எனக்கு இல்லாம போயிடுவீங்களோ…” என்றவளால் வார்த்தையை நிறைவு செய்ய முடியாது போனது.
‘மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது?’ என்று வேதாந்திற்கு புரியவில்லை.
அதைவிட, தன் மீது மனைவிக்கு இருக்கும் நேசம். தன்னை அவள் அன்னையின் ஸ்தானத்தில் வைத்து பார்க்கும் அவளின் ஏக்கம்... அவனை ஏதோ செய்தது.
“எனக்கு நீங்க ரொம்ப முக்கியம்... என் வாழ்க்கைல இன்னொரு இழப்பை தாங்குற அளவுக்கு எனக்கு வலிமை இல்லை.....” என்று கணவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு முகமெங்கும் முத்தம் பதித்தாள்.
நெகிழ்ந்து போயிருந்தவனின் அணைப்பு இன்னும் இறுகியது.
நெற்றியில் இதழ் பதித்து அவளை மெதுவாக வருடிக் கொண்டே இருந்தவன், சில நிமிடங்களில் க்ருதி உறங்கி விட்டதை உணர்ந்தான்.
உறக்கத்திலும் அவன் சட்டையை இறுகப் பற்றியிருந்த மனைவியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் அவளோடு சேர்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினான்.
அடுத்த நாள் காலை உணவை முடித்து மாத்திரை எடுத்து கொண்ட வேதாந்த் மனைவியின் விழிகளில் நிறைந்திருந்த கண்ணீரை கண்டு, “இப்போ நான் சரியா தானே இருக்கேன்? அப்புறமும் ஏன் க்ருதி முகம் இப்படி இருக்கு?” என்றான்.
“இல்லை, எதுவும் சரியில்லை.. எதுவுமே சரியில்லை… போலீஸா இருந்தும் இவ்ளோ நாள் உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இருந்ததில்லை ஆனா நான் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டதுல இருந்து எதுவுமே சரியில்லை..” என்று கண்ணீரை துடைத்தபடி கலங்கிய குரலில் சொன்னாள்.
“ஹே க்ருதிமா! போலீஸா இருந்தா என்னடா? நானும் மனுஷன் தானே? காய்ச்சலும் வரும், உடம்பும் முடியாம போகும்… அதெல்லாம் ரொம்ப சாதாரணம்...” என்றவன் விரல்கள் அவள் கன்னத்தை மெதுவாக வருடியது.
“இல்லைங்க... நான் உங்களுக்கு இறால் சமைச்சு கொடுத்திருக்கக் கூடாது. உங்களுக்கு அலர்ஜின்னு எனக்கு தெரியாது... ஆனா இப்போ நீங்க இப்படி கஷ்டப்படுறதுக்கு காரணம் நான் தானே...” என்று தவிப்போடு கணவனை பார்த்தவள்,
“ஐ’ம் ஸாரி! இனி உங்களுக்கு பிடிக்காததையோ, அலெர்ஜி இருக்கிறதையோ கண்டிப்பா சமைக்க மாட்டேன்.. சாப்பிடவும் மாட்டேன்..”
“சமைக்காதது ஓகே ஆனா க்ருதி ஏன் பிரான் சாப்பிட மாட்ட?”
“உங்களுக்கு அலர்ஜி ஆகுமே..”
“நீங்க சாப்பிட்டா எனக்கு எப்படி அலர்ஜி ஆகும்?”
“நீங்க தானே, நான் வேற, நீங்க வேற இல்லன்னு சொன்னீங்க…” என்று சொல்லவும், தன் நிலையை மீறி சிரித்திருந்தான் வேதாந்த்.
“அப்போ அது நிஜம் இல்லையா? ஏன் சிரிக்கிறீங்க?”
“நிஜம்தான். ஆனா எனக்காக க்ருதிக்கு பிடிச்சதை ஏன் விடணும்? வேண்டாம்..”
“இல்ல, இது உங்களுக்காக நான் விட்டுக்கொடுக்குறதா தெரிஞ்சாலும், எனக்காகத்தான் நான் நிறுத்துறேன்…”
“ஏன்?”
“நான் சாப்பிடறதால உங்களுக்கு ஏதாவது ஆகிடும்னு பயந்துக்கிட்டு இருக்கிறதற்கு பதில் சாப்பிடாம இருக்கலாமே…” என்று செம்மை பூசிய முகத்தை அவன் தோளில் பதித்தபடி உறுதியாக சொன்னாள்.
அவள் கண்களில் தெரிந்த அந்த உறுதியையும், தன் மீதான அக்கறையையும் உணர்ந்த வேதாந்தின் மனம் நெகிழ்ந்து போனது.
மனைவியை மேலும் வற்புறுத்தாமல் அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டு, அவள் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டான்.
அவன் அருகாமையிலும் அணைப்பிலும் ஓரளவு தன்னை தேற்ற முற்பட்டாலும் அவ்வப்போது தென்படும் மனைவியின் வாடிய முகமும் ஓய்ந்த தோற்றமும் வேதாந்த் நெஞ்சை பிசைந்தது.
“க்ருதிமா... நமக்கு கல்யாணமாகி இரண்டு நாள் தான்டா ஆகுது. அதுக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் முழுசா புரிஞ்சுக்கணும், எல்லா விருப்பமும், ரசனையும், பழக்கமும், அலர்ஜியும் தெரிஞ்சிருக்கணும்னு நினைச்சா அது எப்படி சாத்தியமாகும்?”
“இப்போ எனக்கு பிரான் அலர்ஜின்னு க்ருதிக்கு தெரியாதது தான் பிரச்சனையா?” என்று கேட்க அவள் தலை லேசாக அசைந்தது.
“அப்படி பார்த்தா, எனக்கும் தான் க்ருதியைப் பற்றி நிறைய விஷயம் தெரியாது. க்ருதிக்கு தயிர் வடை பிடிக்கும்னு தெரியுமே தவிர்த்து உனக்கு என்னென்ன சாப்பாடு பிடிக்கும், என்ன பிடிக்காது, எந்த நிறம் பிடிக்கும், எந்தப் பாடல் கேட்ப... இதெல்லாம் கூட எனக்கு தெரியாது. இதெல்லாம் ஒரே நாள்ல தெரிஞ்சுக்க முடியாது க்ருதி”
“இதெல்லாம் வாழ்க்கையோட போக்குல, கூடவே வாழ்ந்துகிட்டே புரிஞ்சுக்கிற விஷயம் க்ருதி. அதுக்காக நான் நல்ல கணவன் இல்லன்னு அர்த்தமா?!” என்று கேட்க அவள் தலை ‘இல்லை’ எனும் விதம் வேகமாக அசைந்தது.
“ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்ட பிறகு தான் வாழ்க்கை நடத்தணும்னா அதுக்கு ஒரு ஜென்மம் போதாது..”
“சின்ன சின்ன குறைகள், சின்ன சின்ன அட்ஜெஸ்மென்ட்ஸ், சின்ன சின்ன புரிதலின்மை, அதை தொடரும் குட்டி குட்டி வாக்குவாதம், ஊடல், அதன் பிறகான கூடல்னு வாழ்ந்துகிட்டே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது தான் கல்யாண வாழ்க்கை…”
“அதனால் இதெல்லாம் ரொம்ப சகஜம்.. இதுக்கு போய் க்ருதி இவ்ளோ கில்ட் ஃபீல் பண்ணனுமா? ஏன்டா? என்ன பயம்?” என்று அவள் மேவாயை நிமிர்த்தி கேட்டான்.
“இருங்க, உங்களுக்கு டேப்லட் கொடுக்கணும், மறந்தே போயிட்டேன்... எடுத்துட்டு வரேன்…” என்று அவசரமாக எழுந்து சென்றவள் வெந்நீரோடு திரும்பி வந்தாள்.
“இப்போ வலி எப்படி இருக்கு? பரவால்லையா?”
வேதாந்த் எழுந்து அமர முயல, “இருங்க, நான் தான் இருக்கேன் இல்ல, நீங்க ஏன்…” என்றவள் கணவனை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு மாத்திரையை குடிக்க செய்தாள்.
“நான் பெண் கேட்டு வந்த பிறகும் க்ருதிக்கு எனக்கு ஓகே சொல்லவே ஒரு வருஷம் ஆகி இருக்கு. அப்போ என்னை பற்றி புரிஞ்சுக்கவும் நேரம் எடுக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியாதா என்ன?” என்று புன்னகையோடு கேட்டவனை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை பெண்ணாள்.
“என்னமோ... என்னை இரண்டு நாள் உன் மடியில படுக்க வைக்கணும்னு சீக்ரெட்டா பிளான் பண்ணி, பிரான் சமைச்ச மாதிரி கில்ட்டா ஃபீல் பண்ணிட்டு இருக்க...” என்றவன் கண் சிமிட்ட, தன்னை மீறி சட்டென சிரித்து விட்டாள் க்ருதி மிருதுளா.
க்ருதி கணவனை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளவும் அடுத்த இரண்டு நாட்களில் வேதாந்த் முழுமையாக குணமடைந்திருந்தான்.
அதைத் தொடர்ந்து மறு வீட்டழைப்பு, குலதெய்வ வழிபாடு என அனைத்து சம்பிரதாயங்களும் இனிதே நிறைவடைந்தன.
அடுத்த பத்து நாட்கள் உறவினர்களின் விருந்து, அழைப்புகள் என்று புதுமண வாழ்க்கை உற்சாகமாக நகர்ந்தது. அனைத்தும் முடிந்த பிறகு, இருவரும் மீண்டும் தங்களது அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பினர்.
காலை வேதாந்த் தன் அலுவலகத்திற்கு புறப்படும் போது, க்ருதி அவனோடு டப்பிங் ஸ்டுடியோவிற்குக் கிளம்பி விடுவாள். அங்கிருந்து வாசுதேவன் அவளை கல்லூரிக்கோ, ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்கோ அழைத்துச் செல்வார்.
இப்போதெல்லாம் பாடல் பதிவு இருக்கும் நாட்களில், மகளைத் தனியாக அனுப்ப மனமில்லாமல், வாசுதேவன் ஸ்டூடியோவிலேயே காத்திருந்து அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
Comments
Post a Comment