தீராத காதல் தொல்லையோ?!... EPILOGUE 1



மேலும் ஏழு வருடங்கள் கழிந்த நிலையில்...

அன்று மாலை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வழக்கமான பரபரப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது.

முக்கியமான கூட்டத்தை நடத்தி முடித்து, பத்திரிகையாளர் சந்திப்பையும் நிறைவு செய்து தன் அறையில் வந்து அமர்ந்தான் சென்னை மாநகர காவல் ஆணையர் வேதாந்த் ஆரியன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்றிருந்தவன், ஊழல் ஒழிப்பு துறை, காவலர் பயிற்சிக் கல்லூரி, சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்திருந்தான். 

அந்த அனுபவங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டுதான் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பு ஏற்று சொந்த ஊருக்கு திரும்பியிருந்தான்.

எந்த ஊருக்கு மாறினாலும் அவன் குடும்பத்தை மாற்றவில்லை. க்ருதிக்கு டப்பிங், பாடல் ரெக்கார்டிங் என்று இருப்பதால் அவர்களை அடிக்கடி இடமாற்றம் செய்வதால் க்ருதியின் கலைப்பயணமும் பாதிக்கப்படும், வேதாந்தின் பணியிலும் தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் 

அதோடு வாசுதேவனுக்கு அவனின் மாற்றம் எதனால் என்று தெரியும் என்பதால் மகளையும் பேரக்குழந்தைகளையும் தன் பொறுப்பில் எடுத்து கொண்டிருந்தார். 

அதனால் வேதாந்த் பணியில் முழு கவனம் செலுத்த முடிந்தது, க்ருதிக்கும் கணவன் உடன் இல்லாத ஏக்கம் ஓரளவு குறைந்தது. 

எங்கு பணியாற்றினாலும், மனைவியின் நலம், பிள்ளைகளின் படிப்பு, பெற்றோரின் தேவைகள் என எதிலும் குறை வைக்காதவன் வேதாந்த். வார இறுதி கிடைத்தாலே போதும், தன் குடும்பத்தை தேடி பறந்து வந்து விடுவான். அதனால் அவன் இல்லாத நாட்களை கூட யாராலும் அவன் மீது குறையாகச் சொல்ல முடியாது. 

அதேபோல டேட்ஸ் லிட்டில் பிரின்சஸாக மகளை வளர்த்து விட்டு அவளை மணமுடித்து கொடுத்த பின்னரும் மகள் மீதான உரிமையை விட்டு கொடுக்காமல் அவள் வாழ்க்கைக்கு தானே முட்டுகட்டையாக அமையும் சில தந்தைகளுக்கு மத்தியில் வாசுதேவன் தனித்துவமானவர். 

மகள் மருமகனின் இனிய இல்லறத்தை ரசித்து பேரக்குழந்தைகளை வளர்ப்பது மூலமாக தன் வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டிருக்கிறார். 

விஹா தாத்தாவின் செல்லம். பெரும்பாலும் அவருடன் தான் அவள் நிமிடங்கள். பேத்தியை பள்ளி, டியூஷன், விளையாட்டு இன்னும் பிற இடங்களுக்கு அழைத்து செல்வது முழுக்க முழுக்க அவர் பொறுப்பு. அதேநேரம் பேரனின் பொறுப்பை சைலேந்தர் எடுத்து கொண்டிருந்தார். 

வேதாந்த் மேசை முழுவதும் கோப்புகள். அடுத்த வார பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய கூட்ட குறிப்புகள். சில முக்கிய வழக்குகளின் அறிக்கைகள்.

காலை முதலே ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாமல் இருந்ததில் அறைக்குள் இருந்த ஏசி குளிரையும் மீறி அவன் முகத்தில் சோர்வு தெரிந்தது.

அப்போது கதவுக்கு வெளியே திடீரென்று சலசலப்பு கேட்க தர்ஷன் உள்ளே வந்தார். 

“ஸார்…”

“சொல்லு தர்ஷன்?!..” என்றான் கோப்பில் இருந்து முகத்தை நிமிர்த்தாமல். 

“உங்களை பார்க்க மூணு பேர் வந்திருக்காங்க…”

“யார்? நான் யாரையும் வர சொல்லலையே?!... அப்பாயின்ட்மெண்ட் இருக்கா? இல்லை கேஸ் கொடுக்க வந்திருக்காங்களா?!”

“கேஸ் இல்லை ஸார், பட் அப்பாயின்ட்மென்ட் இல்லை…”

“அப்புறம் ஏன் என் டைம் வேஸ்ட் பண்ற? பிஸியா இருக்கேன்.. என்னன்னு விசாரிச்சு அனுப்பு மேன்…” என்றதில் தர்ஷன் சிரிப்பை அடக்க முயன்றான்.

“ஸார் நீங்க நினைக்கிற மாதிரி இவங்க சாதாரணவங்க கிடையாது.. அவ்ளோ ஈஸியா வெளியே அனுப்ப முடியாது..” என்றதில் கண்கள் இடுங்க தர்ஷனை பார்த்தவன், “அப்படி யாரு மேன் வந்திருக்கா?” என்றான். 

அடுத்த நொடி கதவு வேகமாக திறக்கப்பட்டு, “அப்பா....!” என்று கத்திக்கொண்டு உள்ளே ஓடி வந்தான் பார்த்தீவ்.

மகன் அப்படியே வேதாந்தின் மறு பதிப்பு!! அதில் வாகீஸ்வரியை விடவும் க்ருதிக்கு தான் அதீத மகிழ்ச்சி. அவன் பின்னால் வேக நடையோடு விஹானிகா... அவர்களுக்குப் பின்னால் க்ருதி மிருதுளா.

அவர்களை கண்ட வேதாந்தின் முகத்தில் இருந்த சோர்வு ஒரே நொடியில் மறைந்தது.

உற்சாகமாக எழுந்து கொண்டவன், “அடடா… என்ன எல்லாரும் சேர்ந்து வந்திருக்கீங்க? எனக்கு சொல்லவே இல்லையே க்ருதி..” என்று மனைவியை பார்த்தான்.

“பசங்க தான் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொன்னாங்க..” என்றிட அதற்குள் பார்த்தீவ் நேராக ஓடி வந்து அவன் மடியில் ஏறிக் கொண்டான்.

“கமிஷனர் ஸார் ரொம்ப பிஸியா இருக்கார்னு சொன்னாங்க..” என்று க்ருதி அவன் எதிரில் அமர்ந்தாள்.

“அப்படி யார் சொன்னது?”

“வெளியில இருக்கிற பத்து பேரும் தான் ப்பா..” என்று மகள் சொல்லவும், “கொஞ்சம் பிஸி தான். ஆனா எப்போவும் என்னோட செல்லங்களுக்கு இல்லாத நேரமா?!..” என்றவன்,

“சரி, அப்படி என்ன சர்ப்ரைஸ் இவ்ளோ நேரம் மெயின்டெயின் பண்றீங்க? நீ சொல்லு கண்ணா..” என்று மகனை பார்த்தான். 

உற்சாகமாக எழுந்து கொண்ட பார்த்தீவ், “அம்மா சொல்லுங்க…” என்றான்.

“நீங்க தானே அப்பு முதல்ல நியூஸ் பார்த்தீங்க அப்போ நீங்க தான் சொல்லணும்…” என்றதும் வேதாந்த் முகத்தை தன் புறம் திருப்பியவன், “அப்பா, அம்மாவுக்கு நேஷனல் அவார்ட் கிடைச்சிருக்கு!” என்றான். 

“இந்த வருடத்தின் சிறந்த பாடகி என் அம்மா..” என்ற விஹானிகாவிற்கு அவளின் ஞானம் அப்படியே சேர்ந்திருக்க அவளும் சங்கீதம் கற்று கொண்டிருக்கிறாள். 

அதை கேட்ட வேதாந்தின் புன்னகை இன்னும் பெரிதாகியது. அறை முழுவதும் சில விநாடிகள் அமைதியாக இருந்தது.

“நிஜமா க்ருதி?” என்றான் மனைவியை மென்மையாய் தோளோடு அணைத்தபடி. 

விஹானிகா உடனே, “முதல்ல இதைப் பாருங்க ப்பா..” என்று தாயின் கையிலிருந்த கவரை எடுத்துத் தந்தையிடம் கொடுத்தாள்.

வேதாந்த் கவரைத் திறக்க, அதில்… ‘சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது – மிஸஸ். க்ருதி மிருதுளா வேதாந்த்’ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

“ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்தப்போ கால் வந்தது இப்போதான் கொஞ்ச நேரம் முந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது…” என்றிட அவன் முகத்தில் அளவில்லா பெருமை.

அடுத்த நொடியே மனைவியின் உச்சியில் முத்தமிட்டு, “காங்கிராட்ஸ் க்ருதி..” என்றான். 

பார்த்தீவ் உடனே வேதாந்த் கையை பிடித்திழுத்து, “அப்பா இன்னைக்கு அம்மாவோட சக்சஸ்சை ரொம்ப பெருசா செலிபரேட் பண்ணனும்..”

“சரி கண்ணா..”

“எனக்கு பெரிய பர்கர் வேணும், ஐஸ்க்ரீம் அப்புறம் பிரவுனி..” என்று அவன் சொல்லி கொண்டே போக, “போதும் அப்பு, லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..” என்று க்ருதி சொல்ல அறை முழுவதும் சிரிப்பு.

“அப்பா இன்னொரு முக்கியமான செலிப்ரேஷனும் இருக்கு..” என்றாள் விஹானிகா தம்பியை பார்த்தபடி. 

“என்ன செல்லமா?” என்றதுமே, “இன்னைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங்கும் இருந்தது.. நான் லாஸ்ட் வீக்கே சொன்னேனே..” என்றாள் விஹானிகா.

“அப்போ முக்கியமான விஷயம் இப்போதான் ஆரம்பிக்குது..” என்று சொல்ல பார்த்தீவ் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து போனது. 

“என்ன கண்ணா?” என்று புன்னகையோடு மகனை பார்க்க, “அக்காவை முதல்ல சொல்ல சொல்லுங்க ப்பா…” என்றான். 

விஹானிகா பெருமையாக தன் மர்க் ஷீட்டை நீட்டி, “மேத்ஸ் 98, சயின்ஸ் 99, சோஷியல் 100 என்று தன் மதிப்பெண்களை சொல்ல “வாவ்! செல்லமா வழக்கம் போல கலக்கிடீங்க.. வெரி குட்..” என்று மகள் கன்னத்தில் முத்தமிட்டான். 

அடுத்து மகன் புறம் திரும்பி, “ஓகே, மிஸ்டர் பார்த்தீவ்.. நாம ஆரம்பிக்கலாமா?” என்று கேட்க பார்த்தீவ் தாயை பார்த்தான். 

“அம்மா கிடையாது இதையும் நீங்க தான் சொல்லணும்..” என்றிட மெல்ல தன் மதிப்பெண்களை சொல்ல தொடங்கினான். 

“தமிழ் 95, இங்லிஷ் 92..”

“சரி, அடுத்து..” என்று வேதாந்த் அடக்கப்பட்ட புன்னகையோடு சொல்ல, 

“அடுத்து மேத்ஸ்…” என்றவன் மெல்லிய குரலில் 78..” என்றான்.

“செவேண்டி எயிட் தானா?” என்று கேட்கவும் “ஆனா பாஸ் ஆகிட்டேன் ப்பா..” என்று அவன் சொன்ன விதத்தில் க்ருதி சட்டென சிரித்தாள்.

“நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா நிறைய மார்க்ஸ் எடுக்கிறேன் ப்பா..” என்றிட வேதாந்த் மகனை இழுத்து மார்போடு கட்டிக் கொண்டு அழுத்தமாக முத்தமிட்டான். 

“அப்போ மார்க்ஸ் கம்மியானதுக்கு திட்ட மாட்டீங்களா ப்பா..” என்றான் தானும் தந்தைக்கு முத்தமிட்டு உற்சாக குரலில்.

“மாட்டேன் கண்ணா, சரி அப்பாவுக்கு ஒரு முக்கியமான வீடியோ கான்பிரன்ஸ் இருக்கு… நீங்க இப்போ கிளம்புங்க நைட் அம்மாவோட அவார்ட், உங்களோட மார்க்ஸ் எல்லாமே சேர்ந்து செலிபரேட் பண்ணலாம்..” என்று அனுப்பி வைத்தான்.

மேலும் ஒரு வாரம் கடந்த நிலையில்…

இரவு உணவை முடித்து கொண்டு வேதாந்த் தன் அலுவலக அறையில் இருக்க க்ருதி குழந்தைகளை உறங்க வைத்துக் கொண்டிருந்தாள். 

வேதாந்த் பார்வை மட்டுமல்ல அவனோடு இருந்த வாசுதேவனின் பார்வையில் எதிரே இருந்த தொலைக்காட்சியில் தான் நிலைத்து இருந்தது.

டெல்லி சிறப்பு நீதிமன்றம் அளிக்க போகும் தீர்ப்பு பற்றிய செய்தி தான் இன்று நாடு முழுவதும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அதை அறிந்து கொள்வதற்காக தான் இவர்களும் காத்திருக்கின்றனர். 

வேதாந்த் சொன்னது போலவே கடந்த ஏழு வருடங்களில் மூன்று பேரை சட்டத்தின் முன் நிறுத்தி பல்வேறு பிரிவுகளில் தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறான். 

அதில் ஒருவன் தான் செய்த சட்டத்திற்கு புறம்பான வேலைகள் பெண்களை தவறாக உபயோகித்தது தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கு  தெரிந்தால் அவர்கள் முகம் பார்க்க முடியாது என்று வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.

மற்ற இருவரில் ஒருவருக்கு பதினைந்து வருடமும் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனையும் கிடைத்துள்ளது. 

ஒவ்வொரு குற்றவாளியின் தீர்ப்பையும் இன்று போலவே மாமனாருடன் சேர்ந்து தான் பார்ப்பான். அப்போது அவர் கண்களில் ஒரு திருப்தி, நிம்மதி, அதையும் தாண்டி பிரித்தறிய முடியா ஒரு உணர்வு வந்து போகும்.

“முன்னாள் காவல்துறை தலைமை அதிகாரி ராகவேந்திரனுக்கு எதிரான போலி என்கவுன்ட்டர், லாக்கப் மரணங்கள், சொத்துக் குவிப்பு மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது..” என்று செய்தியாளர் வாசிக்க வாசுதேவனின் விரல்களில் மெல்லிய நடுக்கம்.

திரையில் செய்தியாளர்கள் பரபரப்பாக பேசத் தொடங்கினர்.

பல அப்பாவிகளின் உயிர் போக காரணமாய் அமைந்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்திருந்தனர். 

“இத்தனை குற்றங்களுக்கு காரணமான நபர் இத்தனை வருடம் உயர் பதவியில் இருந்தது குறித்த பல கேள்விகள் மக்களிடையே நிலவி வந்தாலும் பல ஆண்டுகளாக நீடித்த வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு…” என்றார் செய்தியாளர். 

நான்காவது குற்றவாளியின் தீர்ப்பை அமைதியாக பார்த்திருந்த வாசுதேவன் வெகுவாக நெகிழ்ந்து போயிருந்தார். 

எத்தனையோ இரவுகள் ரியா அவர் கைகளை கட்டி போட்டதை நினைத்து நிம்மதி இல்லாமல் தவித்து போனவருக்குஇன்று நீதி நிலை நாட்டப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதில் அத்தனை ஆத்ம திருப்தி கிடைத்திருந்தது.

உணர்வுகளின் குவியலாகி போயிருந்தவர் மௌன கண்ணீரோடு வேதாந்தை அணைத்துக் கொண்டார்.

வார்த்தைகள் இல்லாத மௌனம் அங்கே நிலவ மாமனாரின் உணர்வை சரியாக புரிந்து கொண்டவன் அவர் முதுகை மென்மையாய் வருடி கொடுத்தான்.




Comments