தீராத காதல் தொல்லையோ?!... 26.2

 


கடலலைகள் கரையை மோதிய சத்தத்தைத் தவிர, அங்கே வேறு எந்த சத்தமும் இல்லை.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வெடிக்கப் போகும் அதிரடி நடவடிக்கைக்காக காவல் துறையினர் ஆயத்தமாக நின்றிருந்தனர்.

பழைய கிடங்குகள், அடுக்கி வைக்கப்பட்டிருந்த சரக்குக் கண்டெய்னர்கள், நங்கூரமிட்டிருந்த மீன்பிடிப் படகுகள் என அந்த இடமே கனத்த அமைதியில் மூழ்கியிருந்தது.


“நீங்க இங்கேயே வைட் பண்ணுங்க மாமா, நாங்க ரியாவை கூட்டிட்டு வந்துடுறோம்..”


“நா.. நானும் வரேனே மாப்பிள்ளை, எனக்கு.. எனக்கு குழந்தையை கண்ணுல பார்க்கிற வரை நிம்மதி இருக்காது…” என்றவரின் முகமும் குரலும் ஏகத்திற்கு கலங்கி போயிருந்தது. 


“மாமா உங்களோட பதற்றம் புரிஞ்சதால தான் இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்தேன்.. ஆனா இதுக்கு மேல நீங்க என்னோடு வந்தா நான் உங்களை பாதுகாப்பேனா இல்லை ரியாவை காப்பாற்றுவேனா?!” என்றவன் எத்தனை வேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறான் என்பது அவருக்கு புரியாமல் இல்லை. 


ஆனால்... குழந்தையை ஒரு முறை கண்களால் பார்த்த பிறகே அவரது மனம் அமைதியடையும். அதனால் வேறு வழியின்றி மெளனமாக நின்றார். 


“நீங்களும் என்னை புரிஞ்சுக்கணும். கொஞ்சம் ஒத்துழைக்கனும் அப்போ தான் சீக்கிரமா ரியாவை உங்ககிட்ட கொடுக்க முடியும்...” என்று சொல்ல மெல்ல தலை அசைத்தார். 


“வீட்டிலிருந்து தொடர்ந்து கால் வருது... அர்ஜூன் கிட்ட இங்க நடக்குறதை மட்டும் சொல்லுங்க. நான் ரியாவை கூட்டிட்டு வர்றேன்…” என்றவன் அவர் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் தன் துப்பாக்கியை ஒருமுறை சரிபார்த்து, வேகமாக இருளை நோக்கி நகர்ந்தான்.

 

டிராக் செய்யப்பட்ட கைபேசியின் சிக்னல், பயன்பாட்டில் இல்லாத ஒரு கிடங்கைக் காட்டியது.

மெல்ல முன்னேறிய வேதாந்த் ஆர்யன், உடைந்த ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தான்.


மங்கலான வெளிச்சத்தில் இருந்த அறையை பார்த்தவன் விழிகள் கூர்மையடைந்தன. அதில் மூன்று உருவங்கள் தென்பட அவர்களில் ஒருவன் குழந்தையைத் தன் கையில் பிடித்திருந்தான். 


மற்ற இருவர் பதற்றமாக யாருக்கோ போனில் பேசிக் கொண்டிருந்தனர்.


அழுது அழுது சோர்ந்திருந்த ரியா, பயத்தில் அந்த நபரின் தோளில் சாய்ந்திருந்தாள்.


“குழந்தை சேஃப்…” என்று உதடுகளை மட்டுமே அசைத்துத் தனது குழுவினருக்குச் சைகை காட்டினான்.


அவசரப்பட்டு உள்ளே நுழைந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால் ஒரு தவறான அடி கூட அனுமதிக்க முடியாது.


அடுத்த சில நிமிடங்களில் கிடங்கின் நான்கு திசைகளிலும் போலீசார் நிலை கொண்டனர்.


அப்போது கடத்தல்காரர்களில் ஒருவன் போலீசாரை கண்டு பதறிப்போய், “டேய் போலீஸ்.. சீக்கிரம் கிளம்பு..” என்றபடி குழந்தையை தூக்கிக் கொண்டு பின்வாசல் வழியாக ஓட முயன்றார்.


“மேலும் மேலும் தப்பு பண்ணாமல், குழந்தையை இறக்கி விட்டுட்டு சரணடையுங்க!” என்று எச்சரித்தபடியே வேதாந்த் ஆர்யன் அவர்களைத் துரத்தினான்.


ரியாவை தூக்கிக்கொண்டு கண்டெய்னர்களுக்கு இடையே ஓட, இரும்புக் கம்பி ஒன்று வேதாந்த் தலையை நோக்கி பாய்ந்தது.

மின்னல் வேகத்தில் உடலை விலக்கிய வேதாந்த், அவன் கையைப் பிடித்து முறுக்கி, முழங்கையால் மார்பில் ஓங்கி அடிக்க அடுத்த நொடியே அவன் தரையில் சுருண்டு விழுந்தான்.

தூரத்தில் நின்றிருந்த வாசுதேவன் கண்ணில்  இக்காட்சி விழ அவர் உடல் ஒரு நொடி அதிர்ந்து அடங்கியது.


போலீசாரின் வரவை எதிர்பாராதவர்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லாததால் அங்கிருந்து தப்பிக்கவே முயன்றனர். 


அப்போது அனைத்து புறம் இருந்தும் போலீசார் சுற்றி வளைப்பதை கண்டு தப்பிக்க வழியில்லாமல் ரியாவை கீழே இறக்கி விட்டு ஓட முயன்றான்.


அந்த நொடியைப் பயன்படுத்திக் கொண்ட வேதாந்த் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று ரியாவை தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.


“ரியா…” என்றிட பயத்தில் உறைந்து போயிருந்த குழந்தை கண்களைத் திறந்து அவனைப் பார்த்ததும், ‘சித்தப்பா..’ என்று கதறியபடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.


“ரியா... பயப்படாதடா... சித்தப்பா வந்துட்டேன். இனிமே ஒன்னும் ஆகாது..” என்று அவள் முதுகை மெதுவாக வருடினான். 


“ஸார்... எல்லாரையும் கைது பண்ணியாச்சு..”


“குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டாச்சு. ஏரியாவை முழுசாக சர்ச் பண்ணுங்க. இன்னும் குழந்தைகள் இருக்காங்களான்னு ஒவ்வொருத்தனையும் தனித்தனியா விசாரிங்க.. உடனே எனக்கு அப்டேட் பண்ணுங்க..” என்று உத்தரவிட சல்யூட் அடித்து உடனே கிளம்பினர்.


“சித்தப்பா, அவங்க திரும்ப என்னை அடிப்பாங்களா? நான் பேச கூடாதா?” என்ற ரியாவை சமாதானப்படுத்தியபடி காரை நோக்கி வந்தான் வேதாந்த் ஆர்யன்.

அங்கே பதற்றத்தோடு காத்திருந்த வாசுதேவன், குழந்தையைப் பார்த்த மறுநொடியே, “ரியாமா…” என்று கதறியபடி ஓடி வந்து அவளைத் தன் மார்போடு வாரி அணைத்துக் கொண்டார்.

குழந்தையின் கன்னங்களை இரு கைகளாலும் தாங்கியவர், அவளைத் தலை முதல் கால் வரை பதறிப்போய் ஆராய்ந்தார்.

“ரியாமா... உனக்கு எதுவும் ஆகல இல்லடா...” என்று தழுதழுத்த குரலில் சொல்லியபடியே அவளை மீண்டும் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.

குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு, “ரொம்ப நன்றி மாப்பிள்ளை... என் உயிரையே என்கிட்டே திருப்பிக் கொடுத்துட்டீங்க…” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.


“மாமா... நன்றி எல்லாம் எதுக்கு? ரியா நம்ம குழந்தை. அவளை பாதுகாப்பா வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது என்னோட கடமை. பயப்பட எதுவுமில்லை,  வாங்க போகலாம்..” என்று அவரை அழைத்து கொண்டு கிளம்பினான்.

வேதாந்திடம் இருந்து பேத்தியை வாங்கிய வாசுதேவன், அவளை ஒரு நொடி கூட கீழே இறக்கவில்லை. இன்னும் பயம் முழுவதுமாக விலகாததில் அவளைத் தன் மார்போடு இறுக அணைத்த படியே அமர்ந்திருந்தார்.

அவரின் நடுங்கிய கரங்களையும், இன்னும் தெளியாத முகத்தையும் பார்த்த வேதாந்த், அமைதியாக காரை ஊட்டினான்.

பிறகு வழியில் இருந்த ஒரு சிறிய டீக்கடை முன் காரை நிறுத்தவும், “இங்கே ஏன் மாப்பிள்ளை?” என்று குழப்பமாக கேட்டார் வாசுதேவன்.

“டீ குடிச்சுட்டு போகலாம் மாமா. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்... அதிர்ச்சியில இருந்து வெளியே வரணும் இல்ல...” என்றவன், 

“ரியாம்மா... பூஸ்ட் குடிப்பியா?” என்று கேட்டதும், அவள் மெதுவாகத் தலையசைத்தாள்.

உடனே கடைக்குச் சென்று அவளுக்கு சூடான பூஸ்ட்டும், வாசுதேவனுக்கும் தனக்கும் டீ வாங்கி வந்தான்.

“மாமா... முதல்ல டீ குடிங்க...” என்று கோப்பையை நீட்டியவன், ரியாவை தான் வாங்கிக்கொண்டு அவளை பூஸ்ட் குடிக்க வைத்தான்.

சில மிடறுகள் டீ குடித்த பிறகு தான் வாசுதேவனின் நடுங்கிய விரல்கள் சற்று இயல்புக்குத் திரும்பின. 

ஒவ்வொரு சூழலையும் நிதானமாக பொறுமையாக கையாளும் மருமகனை பார்த்த வாசு வார்த்தைகள் இன்றி நன்றியோடு அவன் கையைப் பற்றிக் கொண்டார்.

“நீங்க இவ்ளோ டென்ஷன் எடுத்துக்காதீங்க மாமா, அது உடம்புக்கு நல்லதில்லை.. வீடல் எல்லாரும் பதறி போய் இருப்பாங்க, முதல்ல தகவல் கொடுங்க. ரியாவை வீடியோ காலில் பேச வைங்க.. சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்..” என்றபடி காரை எடுத்தான்.

***********

“குழந்தை மறுபிறவி எடுத்துட்டு வந்திருக்கா…” என்று கண்கலங்கியபடி, ரியாவை வாசலிலேயே நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார் அவளது பாட்டி.


வீட்டிலிருந்த அனைவரையும் கண்டவுடன், ரியாவின் முகத்தில் பல மணி நேரங்களுக்குப் பிறகு மெல்லிய புன்னகை மலர்ந்தது.


“அண்ணி... ரியா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து முழுசா வெளியே வரல. ஆனா பயப்படுற அளவுக்கு எதுவும் இல்லை. உடம்புல எந்தக் காயமும் இல்லை. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிட்டு தான் வரேன்...”


“இது முதல் கட்ட அதிர்ச்சிதான். கொஞ்ச நாள் போனா தானாகவே சரியாகிடும். ஒரு ரெண்டு, மூணு நாள் ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம்..”


“எதுக்கும் ஒரு கவுன்சிலிங் செஷனுக்கு ஏற்பாடு பண்றேன். குழந்தை மனசுல பதிஞ்சிருக்குற பயம் கொஞ்சம் கொஞ்சமா குறைய அது உதவும்..”


“நீங்க எல்லாரும் அவகிட்ட பழைய மாதிரி இயல்பா பேசுங்க. தனியா விடாம, அவளுக்கு பாதுகாப்பா இருக்குற உணர்வை கொடுங்க. சீக்கிரமே இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்துடுவா…” என்றான் மஹிமாவின் கண்ணீரை கண்டு.

“ரொம்ப தேங்க்ஸ், ஆர்யன். இப்பல்லாம் குழந்தைகளுக்கு என்னென்னமோ நடக்குது. ஆனா என் பொண்ணு பத்திரமா வீட்டுக்குத் திரும்பி வந்துட்டா... அதுவே எங்களுக்கு பெரிய நிம்மதி...” என்று நெகிழ்ச்சியோடு கூறினார் அரவிந்த். 

“நல்லவேளை, மாமா உடனே தகவல் கொடுத்ததால தான் இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடிஞ்சது. ஒருவேளை அவர் என்கிட்ட சொல்லாம, குழந்தையை அவரே தேடிக்கிட்டு இருந்திருந்தா, ரியாவை இவ்வளவு சீக்கிரம் மீட்கிறது ரொம்ப கஷ்டமாகி போயிருக்கும்…”


“பொதுவாவே குழந்தை காணாமல் போன முதல் இரண்டு மணி நேரத்தை ‘கோல்டன் ஹவர்’ ன்னு சொல்லுவோம்…”


“அந்த நேரத்துக்குள்ள சரியான தடயத்தைப் பிடிச்சிட்டோம்னா, குழந்தைகளை எந்த ஆபத்தும் இல்லாம பாதுகாப்பாக மீட்டெடுக்க வாய்ப்பு ரொம்ப அதிகம். அந்த நேரம் கடந்துட்டா, ஒவ்வொரு நிமிஷமும் விசாரணை இன்னும் சிக்கலாகிடும்...” என்று விளக்கினான்.

வாசுதேவன் எதுவும் பேசாமல் வேதாந்த்தின் அருகே இருந்த  இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். 

அவருக்கு ‘எப்படி மகளையும் மருமகனையும் எதிர்கொள்வது?’ என்ற தயக்கம் ஒரு பக்கம்… தன் கண்முன்னே பேத்தி காணாமல் போன குற்றவுணர்வு இன்னொரு பக்கம்… என்று மனம் நிலை கொள்ளாமல் தத்தளித்து கொண்டிருந்தது. 

மஹிமா ஆறுதலாக அவரோடு பேசிய போதும் அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை. 

அதையும் தாண்டி, மறைந்த மனைவியின் நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக மனதை ஆக்கிரமித்தன.

அவர் நினைவுகளின் பாரம் நெஞ்சை அழுத்த, குற்றவுணர்வும் வேதனையும் கலந்து அவர் உள்ளம் கனத்துப் போனது. 

இன்றைய அதிர்ச்சியிலும் பதற்றத்திலும், வாசுதேவன் தன்னை ‘மாப்பிள்ளை’ என்று பலமுறை அழைத்ததை அவர் உணர்ந்தாரோ இல்லையோ, வேதாந்த் கவனித்திருந்தான். 

அந்த ஒற்றை அழைப்பே, வாசுதேவனின் மனம் மெல்ல மாறிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாக அவனுக்குத் தோன்றியது. 

சீக்கிரமே அவர் தன்னை மனதார ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை வேதாந்திற்கு பிறந்தது. அந்த மகிழ்ச்சியை உடனே மனைவியிடமும் பகிர்ந்து கொண்டான். 

“நிஜமாவா சொல்றீங்க? அப்பா உங்களை ‘மாப்பிள்ளை’ ன்னு கூப்பிட்டாரா? உங்களோடு பேசினாரா? டீ குடிச்சாரா?” என்று ஆச்சரியமும் ஆனந்தமுமாக கேட்டாள். 

“ஏன் க்ருதிக்கு என் வார்த்தையை நம்ப முடியலையா?” என்று சிரித்தபடி கேட்டான்.

“ச்சேச்சே... அப்படியெல்லாம் இல்லைங்க! ஆனா... அந்த நிமிஷத்தை நான் மிஸ் பண்ணிட்டேனேன்னு வருத்தமா இருக்கு. என் கண்ணால பார்க்கனும்னு ஆசையா இருக்கு...” என்றாள் ஏக்கத்தோடு. 

“அந்த ஆசையும் சீக்கிரமே நிறைவேறும், கூடிய சீக்கிரம் நீ பார்க்க கூப்பிடுவார்..” என்றான் புன்னகையோடு. 

அவன் சொன்னதை நிரூபிப்பது போல.. அதற்கு அடுத்த இரண்டாம் நாளே வாசுதேவன், வேதாந்தைத் தேடி அவன் அலுவலகத்திற்கே வந்திருந்தார்.


Comments