- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருமணமான இரண்டு மாதங்களில் புகுந்த வீட்டில் தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டதோடு அனைவரின் மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தாள் க்ருதி மிருதுளா.
அன்பான மாமனார், தன் வேலை மற்றும் படிப்பை அனுசரித்து அரவணைக்கும் மாமியார் அவளை மற்றொரு மகளாகப் பார்த்துக் கொள்வதில் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் அவளுக்கு பெரிதாக அவளுக்கு வித்யாசம் இல்லாமல் போனது.
உத்ராவும், தன்ஷியும் நாத்தனார்கள் என்பதை விட அவளுக்கு உடன்பிறந்த சகோதரிகள் என்று தான் சொல்ல வேண்டும்.
உத்ராவை பற்றி சொல்லவே வேண்டாம். ஏற்கனவே மிருதுளாவை எங்கும் விட்டு கொடுக்காமல் எப்போதும் அவள் நலனில் அக்கறையோடு இருப்பவள், இப்போது தன் தம்பி மனைவி எனும் போது இரண்டு மடங்கு அன்பும் அரவணைப்பும் கொடுத்தாள்.
தன்ஷியும் அவளுக்கு குறையாத அன்பை அண்ணன் மனைவி மீது செலுத்தினாள்.
அதுவும் அவள் வசதிகளை முன்னிறுத்தி, தோழிக்கு தோழியாகவும், சகோதரிக்கு சகோதரியாகவும் அவர்களின் அன்பில் நித்தமும் திளைத்து கொண்டிருக்கிறாள்.
அனைத்திற்கும் மேலாக, அவளை கண்ணின் இமைப்போல் காக்கும் கணவன் அருகாமை, அவள் இதழ்களில் புன்னகையை நிரந்தரமாக்கி இருந்தது.
திருமணமான அடுத்த இரண்டு நாட்கள், சூழ்நிலையால் அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் இனி எக்காரணம் கொண்டும் வரக்கூடாது என்ற கண்டிப்போடு சொல்லி விட்டான்.
சொன்னதோடு நிற்காமல் அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் வராதபடி, அவளின் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் தனது வாழ்வின் முதன்மை பொறுப்பாக மாற்றிக் கொண்டிருந்தான்.
கடந்த வாரம் வேதாந்திற்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கவும், இருவரும் தேனிலவுப் பயணம் சென்று வந்திருந்தனர்.
மூன்று நாட்களே என்றாலும், அதில் கிடைத்த ஒவ்வொரு நொடியும் வேதாந்தின் காதலை இன்னும் ஆழமாக உணர்ந்திருந்தாள்.
கணவனின் கைகோர்ப்பிலும், பார்வையிலும், அருகாமையிலும் கிடைத்த இதம், அவனோடு ஆயுள் முழுவதும் தொடர வேண்டும் என்ற ஏக்கத்தை மிருதுளாவின் மனதில் விதைத்திருந்தது.
மிருதுளாவின் மனதில் இருந்த அச்சத்தை முழுமையாகப் போக்க முடியாவிட்டாலும், தனது வேலையின் தன்மையையும் அதில் இருக்கும் பொறுப்புகளையும் பொறுமையாக அவளுக்குப் புரிய வைத்திருந்தான் வேதாந்த்.
அதனால், கணவனின் வேலைப்பளு, அதில் அவன் எதிர்கொள்ளும் சவால்கள், திடீர் அழைப்புகள், பதற்ற சூழ்நிலைகள் என அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மெல்ல மெல்ல தன்னைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறாள் க்ருதி மிருதுளா.
அன்று பாடல் பதிவு ஒன்றிற்காக வரிகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தவள் கைபேசி தொடர்ந்து மிளிர்ந்தது.
திரையில் ‘அப்பா’ என்ற பெயர் மின்னிக் கொண்டிருந்தது.
ஆனால் கைபேசியை சைலன்ட் மோடில் வைத்திருந்ததால், அவர் அழைப்பை க்ருதி கவனிக்கவில்லை.
அடுத்து அர்ஜுனுக்கு அழைத்த வாசுதேவனின் குரலில் அத்தனை பதட்டம்.
“என்ன ஆச்சு வாசுப்பா? ஏன் டென்ஷனா இருக்கீங்க?”
“அர்ஜுன்... ரியா... ரியா…” என்றவரின் குரல் முழுதாக உடைய, கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது.
“ரியாவுக்கு என்ன வாசுப்பா?”
“சாயந்திரம் மஹி வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ ரியா பார்க் கூட்டிட்டு போக சொல்லி ஒரே அடம்! அதனால இரண்டு பேரையும் கூட்டிட்டு வந்தேன்..”
“அப்போ பக்கத்துல இருந்த முருகன் கோவிலுக்குப் போகணும்னு குட்டி பையன் கேட்டான்.. ‘நேரம் ஆச்சு, இன்னொரு நாள் வரலாம்னு’ சொல்லியும் கேட்கலை…”
“ரியாவும் போகலாம்னு சொன்னதுல கூட்டிட்டு போனேன். அப்போ பிரசாதம் வேணும்னு கேட்டா. இரண்டு பேரையும் தனியா விடாம கை பிடிச்சுட்டு அங்கே கூட்டிட்டு போனேன்…” என்றவருக்கு தொண்டை அடைத்து கொள்ள மேலும் பேச முடியாமல் திணறி போனார்.
“வாசுப்பா…”
“சரியான கூட்டம் அர்ஜூன். பத்திரமா நிற்க சொல்லி பிரசாதம் வாங்கிட்டு பார்த்தா, ரியாவைக் காணோம்…” என்றதில் அதிர்ந்து போனான் அர்ஜுன்.
“கோவில்ல தேடிப் பார்த்தீங்களா?”
“எல்லா இடத்திலும் தேடினேன். குட்டி பையன் அவன் ஃப்ரெண்ட் கூட பேசிட்டு இருந்ததால ரியாவை பார்க்கலைன்னு சொன்னான்..”
“பக்கத்துல இருந்த வேற யாரையாவது விசாரிச்சீங்களா?”
“விசாரிச்சுட்டேன்.. அங்க இருக்குற மைக்கிலயும் அனௌன்ஸ் பண்ணினேன். ஆனா குழந்தை கிடைக்கல அர்ஜுன்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல...” என்றவர் அழுகையை அடக்க முடியாமல் திணறினார்.
“உன் ஃப்ரெண்ட்.. ஏசி.. ஏசிபி நம்பர் என்கிட்டே இல்லை கொஞ்சம் தகவல் சொல்றியா பா...” என்றார்.
“பயப்படாதீங்க வாசுப்பா. ரியா சீக்கிரம் கிடைச்சுடுவா.. நான் ஆரிக்கு பேசறேன், நாங்க உடனே அங்கே வரோம்..” என்றவன் வேதாந்திற்கு அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
“எவ்வளவு நேரம்டா ஆச்சு?”
“ஒரு அரை மணி நேரம் இருக்கும்னு சொன்னாருடா…”
“சரி.. நான் கிளம்பிட்டேன்” என்றவன், அவர்களின் அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் கோவில் என்பதால், அடுத்த பத்து நிமிடத்தில் அர்ஜுனுக்கு முன்பாகவே அங்கு வந்து விட்டான்.
அங்கே கூட்டத்தினர் மத்தியில் கண்ணீரோடு செய்வதறியாது நின்று கொண்டிருந்த வாசுதேவனைக் கண்டவனுக்கு மனம் கனிந்து போனது.
“மாமா…” என்று அவர் அருகே சென்ற வேதாந்த் அழைக்க, பிரம்மை பிடித்தது போல நின்றிருந்த வாசுதேவன், ரியாவின் தம்பி கையை இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தார்.
“மாமா, பயப்படாதீங்க. ரியாவை சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம்…” என்றவன் அங்கே வந்த அர்ஜுன் நிலவனிடம் வீட்டில் பக்குவமாக விஷயத்தை சொல்லி அவர்களோடு இருக்க சொன்னான்.
“குழந்தையை அஜ்ஜூகிட்ட கொடுங்க மாமா..” என்றதில் “பத்திரம்டா..” என்றபடி அர்ஜுனிடம் கொடுத்தார்.
அடுத்து வேதாந்த் நேராக கோவிலின் கண்காணிப்பு அறைக்குள் சென்று சிசிடிவி காட்சிகளை ஒவ்வொரு ஃப்ரேமாக ஆய்வு செய்து தொடங்கினான்.
கூர்ந்து கவனித்து கொண்டிருந்த வேதாந்தின் பார்வை திடீரென ஒரு இடத்தில் நிற்க, “ஸ்டாப்... அந்த ஃப்ரேமை ஜூம் பண்ணுங்க…” என்றான்.
அடுத்த நொடியே, சுமார் முப்பத்தேழு வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அழுது கொண்டிருந்த ரியாவைத் தூக்கி கொண்டு அவசரமாக ஒரு ஆட்டோவில் ஏறுவது தெளிவாகப் பதிவாகியிருந்தது.
அதேநேரம் தர்ஷன் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர்.
“இந்தப் பெண்ணோட ஃபோட்டோ எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க. கோவிலைச் சுற்றி அரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ள இருக்குற எல்லா சிசிடிவி கேமராவையும் உடனே செக் பண்ணுங்க…” என்று மின்னல் வேகத்தில் உத்தரவுகளை பிறப்பித்தவன்,
“தர்ஷன்... இந்தப் பெண்ணைப் பற்றி ஏதாவது ரெக்கார்டு இருக்கான்னு உடனே செக் பண்ணு…” என்றவன் உத்தரவுகள் அடுத்த நொடியே செயல்படத் தொடங்கின.
வாசுதேவனோ, நெஞ்சம் விம்ம அமைதியாக மருமகனின் செயல்பாடுகளைப் பார்த்தபடி நின்றார்.
வெளியில் அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் அப்படி ஒரு நடுக்கம் பரவி அவரை பதற்றத்தில் வைத்திருந்தது.
மனம் முழுக்க, ‘ரியா பாதுகாப்பாக கிடைக்க வேண்டும்’ என்ற ஒற்றை பிரார்த்தனை மட்டுமே!!
இதற்கிடையில் கோவிலைச் சுற்றி சந்தேகம் படும் படியாக சுற்றித் திரிந்த அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மறுபுறம், சிசிடிவி காட்சிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில், அந்தப் பெண் சென்ற ஆட்டோ மார்க்கெட் பகுதியை நோக்கிச் சென்றது உறுதியானது.
அந்தத் தகவல் கிடைத்த நொடியே, அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆட்டோவைப் பின்தொடர உத்தரவிடப்பட்டது.
ஆனால் மார்க்கெட் பகுதிக்கு வந்ததும், ஆட்டோவில் இருந்து இறங்கிய அந்தப் பெண், ரியாவை அணைத்தபடி மக்கள் கூட்டத்திற்குள் வேகமாகக் கலந்துவிட்டாள்.
‘ஒருவேளை குழந்தையை வேறொரு வாகனத்திற்கு மாற்றியிருப்பாளோ...?’ என்ற எண்ணம் அவர்கள் மனதிலும் பதற்றத்தை விதைத்தது.
இருந்தாலும் போலீசார் அவளை விடாமல் பின் தொடர்ந்தனர். மக்கள் கூட்டத்தைச் சமாளித்தபடியே நீண்ட துரத்தலுக்குப் பிறகு, இறுதியில் அவளை மடக்கிப் பிடித்தனர்.
ஆரம்பத்தில் வாயைத் திறக்க மறுத்தவள், விசாரணை தீவிரமடைந்ததும் அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்க தொடங்கினாள்.
குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவள் அவள் என்பதையும் அவர்களின் கூட்டாளிகள் குறித்த விபரங்களையும் ரியாவை யாரோடு அனுப்பி இருக்கிறாள் என்பதை மறைக்காமல் சொல்லி விட்டாள்.
பெண் போலீசாரை கொண்டு அவளை மேலும் விசாரித்து, அந்த நபரின் கைபேசி எண்ணையும் அவனைச் சந்திக்க வேண்டிய இடம் குறித்த தகவலையும் போலீசார் அவளிடமிருந்து பெற்றனர்.
“ஓகே மதன்... இந்த நம்பரை உடனே டிராக் பண்ணுங்க… லைவ் லொகேஷன் வேணும்..” என்று உத்தரவிட்டுவிட்டு “வாங்க மாமா கிளம்பலாம்..” என்று வேதாந்த் அழைக்க அது அவர் மூளையை சென்று சேரவில்லை.
“மாமா…” என்று அழுத்தி அழைக்கவும் தான் அவனை பார்த்தவர், “குழந்தைக்கு எதுவும் ஆகாதே?! ரியாவை கண்டுபிடிச்சிடுவோம்ல...?” என்று குரல் தழுதழுக்கக் கேட்டார்.
“கவலை வேண்டாம் மாமா. ரியா எங்க இருக்கான்னு தெரிஞ்சுடுச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல ரியா உங்க கையில இருப்பா..” அதுக்கு நான் பொறுப்பு..” என்று அவருக்கு தைரியம் கொடுத்து வாசுதேவனோடு புறப்பட்டான்.
டிராக்கிங் பிரிவிலிருந்து வந்த தகவலைப் பார்த்த வேதாந்த் ஆர்யனின் விழிகள் கூர்மையடைந்தன.
“ஸார்... அந்த லேடி கொடுத்த தகவல் கரெக்ட். டிராக்கிங் சிக்னல் ஹார்பர் ஏரியால தான் இருக்கு. …” என்ற தகவல் ஒலித்த மறுநொடியே அனைவரிடமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
“ஸார்... இன்னும் கொஞ்ச நேரத்துல சரக்கு கப்பல் கிளம்பிடும். அதுக்குள்ள ஆக்ஷன் எடுக்கலைன்னா குழந்தையை மீட்கிறது ரொம்ப கஷ்டம்…” என்றான் தர்ஷன் பதற்றமாக.
“தெரியும் தர்ஷன்..” என்ற வேதாந்தின் பார்வை அருகில் நின்ற மாமனார் மீது திரும்பியது.
‘குழந்தையின் நிலை என்னவாக இருக்கும்’ என்ற பயத்தில் அவர் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து போயிருந்தது.
தண்ணீரை எடுத்து அவரிடம் கொடுத்து குடிக்க சொல்லவும் மறுக்க முடியாமல் வாங்கி குடித்தார்.
“ஹார்பர் போலீஸ் கண்ட்ரோல் ரூம்க்கு உடனே தகவல் கொடு. எல்லா எக்சிட் பாயிண்ட்ஸும் சீல் பண்ண சொல்லு…” என்று உத்தரவிட்டான்.
அடுத்ததாக வயர்லெஸை கையில் எடுத்தவன், “டீம் ஒன்... ஈஸ்ட் கேட் கவர் பண்ணுங்க. டீம் டூ... பின்பக்க ஜெட்டி முழுசும் உங்கள் கண்ட்ரோல்ல இருக்கணும்…”
“ஓகே ஸார்..”
“என்னோட சிக்னல் வர்ற வரைக்கும் யாரும் மூவ் பண்ணக்கூடாது. நம்மோட முதல் டார்கெட்... குழந்தையை எந்த ஆபத்தும் இல்லாம பத்திரமா மீட்பது, புரிஞ்சுதா?”
“யெஸ் ஸார்!” என்று வயர்லெஸில் ஒரே நேரத்தில் பல குரல்கள் ஒலித்தன.
சில நிமிடங்களிலேயே சைரன் ஒலிக்காமல் வந்த போலீஸ் வாகனங்கள் ஹார்பரைச் சுற்றியுள்ள இருண்ட பகுதிகளில் மறைமுகமாக நிலை கொண்டன.
Comments
Post a Comment