- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
வேதாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் விஷயம் அறிந்ததுமே சேதுபதி, கிரிஜா, வாசுதேவன் அனைவரும் அங்கே வந்துவிட்டனர்.
“எனக்கு தெரியாது பெரிம்மா, தெரிந்து இருந்தால் கண்டிப்பா கொடுத்திருக்க மாட்டேன்…” என்று அவரிடமும் சிறு குழந்தையாகச் சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள்.
கிரிஜா அவளை தேற்ற முற்பட மருமகனின் நிலையை விசாரித்த வாசுதேவன், “குழந்தைக்கு என்ன தெரியும்? ஒத்துக்காததுன்னு தெரிஞ்சும் ஏன் சாப்பிடணும்? வேண்டாம்னு சொல்லி சிக்கன் மட்டும் சாப்பிட்டு இருக்கலாமே…” என்றார் ஆதங்கத்தோடு.
பின்னே... திருமணமாகி இரண்டு நாட்கள்கூட ஆகவில்லை. மருந்திற்கும் புன்னகைக்காமல், ஓய்ந்து தோய்ந்து போயிருந்த மகளின் தோற்றம் அவரை வெகுவாக கலங்க வைத்தது
“சரியா சொன்னீங்க வாசுப்பா, மித்துவுக்கு தெரியாது… ஆனால், அவனுக்கு தெரியுமே! ஏன் சாப்பிடணும்? இப்போ அவஸ்த்தை படனும்..” என்று முதலில் தங்கை மீது இருந்த ஆதங்கம் இப்போது விஷயத்தை அறிந்த பின்னர் நண்பன் மீது கோபமாக உருமாறி இருந்தது அர்ஜுனுக்கு.
“மித்து முதல் முறையா ஆசைப்பட்டு சமைச்சதை எப்படி மறுக்கிறதுன்னு சாப்பிட்டு இருக்கான் அர்ஜூன். ஆனா மாமா சொன்னது சரிதான்… அவன் தனக்கு ஒத்துக்காதது வேண்டாம்னு சொல்லி இருக்கணும்…”
“நான் ஒருத்தி இவ சமைக்கிறேன்னு சொல்லும் போதே, அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது, அலர்ஜி பற்றி சொல்லாம விட்டுட்டேன். சொல்லியிருந்தாலாவது இது நடந்திருக்காது…” என்றாள் உத்ரா கலங்கிய குரலில்.
“இல்ல அண்ணி... எந்தெந்த பொடி எங்க இருக்குன்னு கேட்டேனே தவிர்த்து அவருக்கு என்ன பிடிக்கும்னு நானுமே கேட்காம விட்டுட்டேன்... என் மேல்தான் தப்பு..”
“சரி... சரி... போதும். இப்போ ஆளாளுக்கு பழியை உங்க மேல போட்டுக்கிறதுனால இதுவும் மாறப்போறதில்லை.. குழந்தையை கூட்டிட்டு போய் சூடா ஏதாவது வாங்கி கொடுங்க..” என்ற சேதுபதி மருத்துவரைத் தேடிச் சென்றார்.
காலை முதல் அவசர சிகிச்சை தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால், வேதாந்தை யாரையும் பார்க்க மருத்தவர்கள் அனுமதிக்கவில்லை.
ஒவ்வொரு நிமிடமும் வெளியே காத்திருந்தவர்களின் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது. அதிலும் மிருதுளாவின் நிலையை சொல்லவே வேண்டாம் அந்தளவு நிலை குலைந்து போயிருந்தாள்.
மதியத்திற்கு மேல் தான் வேதாந்தைப் பார்க்க அனுமதிக்கவும் முதல் ஆளாய் சென்ற மிருதுளாவிற்கு அவன் நிலையை கண்டு கண்ணீர் இன்னுமே பெருக்கெடுத்தது.
அவர்களுக்கு தனிமை கொடுத்து அடுத்த சில நிமிடங்களில் மற்றவர்கள் வெளியில் சென்றனர். இதுவரை அவள் பார்த்திராத கணவனின் ஓய்ந்த கோலம் அவளை சிதறடித்து விட்டது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன், அவள் அழுகையில் தான் மெல்லக் கண்விழித்தான்.
உடனே அவன் கைகளை பிடித்து கொண்டவள், “ஐ’ம் ஸாரி! தெரியாம பண்ணிட்டேன்..” என்றவளால் அதற்கு மேல் பேச முடியாமல் போனது.
“எதுக்கு இந்த அழுகை? க்ருதி எந்த தப்பும் செய்யாத போது எதுக்கு ஸாரி?..” என்றிட அவள் கண்ணீரை அடக்க வெகுவாக போராடினாள்.
“க்ருதிக்கிட்ட சொல்லாம விட்டது என்னோட தப்புதான்! அதுவும் எனக்காக ஆசையா சமைச்சுருக்கும் போது, 'வேண்டாம்'ன்னு சொல்ல மனசே வரல. ஒரு வாய் சாப்பிட்டுட்டு நிறுத்தியிருக்கலாம்..”
“ஆனா க்ருதியோட கைப்பக்குவம் அதுக்கும் இடம் கொடுக்கல…என்னையே மறந்து சாப்பிட தொடங்கிட்டேன்..” என்று புன்னகைத்தவன் அவள் வலக்கரத்தில் தன் அதரங்களை அழுத்தமாக பதித்தான்.
“அப்புறம் தான் சுதாரிச்சு, ‘போதும்’ன்னு நிறுத்திட்டு க்ருதிக்கு ஊட்டி விட்டேன். இன்ஃபாக்ட் அன்னைக்கு க்ருதி பண்ணின தோசை, சட்னி கூட எவ்வளவு டேஸ்டா இருந்தது தெரியுமா? சாப்பிடத் தொடங்கினா நிறுத்த மனசே வராது..” என்று சொல்ல, அவன் முகத்தில் புன்னகை உதயமானது.
“அப்பாவும் அப்படித்தான் சொல்லுவார். எனக்கு தயிர் வடைக்கு அடுத்து பிரான் பிடிக்கும் என்பதால அம்மாவும் அண்ணியும் அடிக்கடி வீட்ல செய்வாங்க..”
“அப்பாவுக்கும் பிடிக்கும். நான் வீட்டில் இருக்கும் போது அதிகமா அதைத்தான் செய்வேன். இனி கண்டிப்பா செய்ய மாட்டேன். செய்யறது மட்டுமில்லை நிச்சயம் இனி சாப்பிட மாட்டேன்..” என்றாள்.
வேதாந்த் மேலும் பேசும் முன் மருத்துவர் அவனை பரிசோதிக்க வந்ததில் அவர்களின் பேச்சு தடைபட்டு போனது.
மாலை நேரத்திற்குள் உடலில் ஏற்பட்டிருந்த சிவப்பு தடிப்புகள் பெருமளவு குறைந்திருந்தன. அதை கவனித்த வேதாந்த், அருகில் நின்றிருந்த செவிலியரிடம்,
“சிஸ்டர்... இப்போ வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்டான்.
“ஸார், இன்னும் ஒரு நாள் ஆப்சர்வேஷன்ல இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க...”
“இல்ல... இப்போ ரொம்ப பெட்டரா ஃபீல் பண்றேன். டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க...” என்று வற்புறுத்தினான்.
அப்போது மருந்துகளை வாங்கிக்கொண்டு உள்ளே வந்த அர்ஜுன்,
“இப்போ எதுக்குடா அவசரப்படுற? டாக்டர் சொல்ற மாதிரி இன்னும் ஒரு நாள் இருந்துட்டுப் போலாம். அதுதான் மித்துவோட மனசுக்கும் கொஞ்சம் நிம்மதி...” என்றான்.
“அவளுக்காகத்தான் சொல்றேன், மச்சான்... இங்க இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அவ இன்னும் பயந்துட்டே தான் இருப்பா. வீட்டுக்குப் போனா கொஞ்சமாவது நார்மலாகிடுவா...” என்றான்.
அதை கேட்ட மிருதுளா, “ண்ணா... அவரை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம், நான் பார்த்துக்கறேன். எனக்கு... இங்க இருக்கவே ரொம்ப பயமா இருக்கு...” என்று கண்ணீரை கட்டுபடுத்தியபடி சொன்னாள்.
அவள் முகத்தை ஒரு கணம் பார்த்த அர்ஜுன், எதுவும் பேசாமல் மருத்துவரிடம் சென்று பேசினான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் வேதாந்தைப் பரிசோதித்த மருத்துவர், தேவையான மாத்திரை, மருந்துகளை எழுதி கொடுத்துவிட்டு,
“இன்னும் இரண்டு நாட்கள் முழு ஓய்வு. எந்த அலட்சியமும் கூடாது...” என்று கண்டிப்பாக அறிவுறுத்தி டிஸ்சார்ஜ் செய்தார்.
இரவு நேரத்தில் வேதாந்தை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
அன்று முதல் முறையாக, எப்போதும் கம்பீரமாக இருக்கும் தன் கணவனை இவ்வளவு சோர்வாகப் பார்த்த மிருதுளாவின் மனம் மீண்டும் கலங்கியது.
வீட்டிற்கு வந்தது முதலே, ஒரு நொடி கூட அவனை விட்டு விலகாமல் அருகிலேயே இருந்தாள்.
“ஏதாவது சாப்பிடுறீங்களா?... தண்ணி வேணுமா?... ஏசி குறைக்கட்டுமா?... தலைகாணி உயரமா வைக்கட்டுமா?...” என்று ஒவ்வொரு நொடியும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
அவள் தவிப்பைக் கண்ட உத்ரா, “அவ்வளவு சொல்லியும் இப்படி இருந்தா என்ன அர்த்தம் மித்து? நான் அம்மா, அப்பா கிட்ட பேசிட்டேன். அவங்களே ‘ஆரிதான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும்’ன்னு சொல்றாங்க.”
“உன்மேல எந்தத் தப்பும் இல்லை. சும்மா எல்லாத்துக்கும் நீதான் காரணம்னு நினைச்சு உன்னையும் கஷ்டப்படுத்தி, எங்களையும் கஷ்டப்படுத்தாத.”
“நிஜமாவே உன்னை இப்படி பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னொரு தடவை உன் கண்ணுல கண்ணீர் பார்த்தேன்... அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்…” என்றவளை யாருமே தடுக்கவில்லை.
மிருதுளாவிற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தேவை என்பதால் அமைதியாக பார்த்திருந்தனர்.
“வீட்டுக்கு வந்த மகாலட்சுமி, வந்த முதல் நாளிலிருந்து இப்போ வரைக்கும் ஓயாம அழுதுட்டு இருந்தா எப்படி? என்னமோ நாங்க எல்லாம் சேர்ந்து உன்னை கொடுமைப்படுத்துற மாதிரி தானே மத்தவங்க நினைப்பாங்க?!”
“புதுசா கல்யாணம் ஆனவர்களை பார்க்க அக்கம் பக்கம், ஃபிரெண்ட்ஸ் எல்லாம் வருவாங்க. இதோ இப்போ கூட நம்ம ஹாஸ்பிடல்ல இருந்த நேரம் இரண்டு பேர் வந்திருக்காங்க…”
“உன்னை இப்படி அழுத முகத்தோட பார்த்தா, அவங்க மனசுல என்ன தோணும்னு கூட யோசிக்க மாட்டியா?” என்று உரத்த குரலில் கேட்கவும் தான் அவள் அழுகை நின்றது.
“ஸாரி அண்ணி... என்னன்னு தெரியல, அடுத்தடுத்து இப்படி நடக்கிறது எனக்கு…” என்றவளுக்கு தன் உணர்வை எப்படி வார்த்தையால் கடத்துவது என்று புரியவில்லை.
“நாமளும் அவசரப்பட்டு இருக்கக் கூடாதோ?! கொஞ்சம் நிதானமா கல்யாணத்தை பண்ணி இருக்கலாமோ?!” என்று யோசனையுடன் கேட்டார் சேதுபதி.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க... கண் திருஷ்டி தான். ரெண்டு பேரோட ஜோடியைப் பார்த்து எவ்வளவு பேர் ரசிச்சாங்க தெரியுமா?!...”
“நீங்க எப்போ கல்யாணம் பண்ணி இருந்தாலும், ஆயிரம் கண்ணுல ஒரு கண்ணு தப்பா இருந்தா கூட இப்படித்தான் நடந்திருக்கும்…”
“கல்லடி பட்டாலும் படலாம்... கண்ணடி படக்கூடாதுன்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வச்சிருக்காங்க?” என்றவர் மிளகாய், உப்பு இன்னும் சில பொருட்களைக் கொண்டு வந்து இருவரையும் அமர்த்தி திருஷ்டி கழித்தார் கிரிஜா.
“உத்ரா... ஈஸ்வரி கிட்ட இன்னும் ஒரு மாசத்துக்கு தினமும் இவங்களுக்கு சுத்தி போட சொல்லு. ஆரி தம்பிக்கு சரியானதும் முதல்ல குலதெய்வத்துக்கு கூட்டிட்டு போய், மித்து கையால பொங்கல் வைக்கணும்…” என்றார் கிரிஜா.
“சரி த்தை, நான் அம்மாகிட்ட சொல்றேன்..” என்றவள் குழந்தைகள் நிலவனோடு அங்கேயே இருப்பதாக சொல்ல மற்றவர்கள் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
தன்ஷிகாவிற்கு அங்கிருந்து கிளம்ப மனமே இல்லை. ஆனால் ‘மாமியார் என்ன சொல்வாரோ?!’ என்ற தயக்கத்தோடு நின்றிருக்க, மனைவியைப் புரிந்தவனாக,
“அண்ணி, குழந்தைகளையும் மித்துவையும் சமாளிச்சு, சமையலையும் எப்படி பார்ப்பாங்க? நீ இங்கேயே இரு தன்ஷி நாளைக்கு நான் வந்து அழைச்சுட்டு போறேன்…” என்று அர்ஜுன் சொல்ல, தன்ஷிகா முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“ஆமா தன்ஷி... மித்துவை கொஞ்சம் நீ பார்த்துக்கோ. நேத்து எதுவுமே சாப்பிடலை. இன்னைக்கும் ஹாஸ்பிடல் வேண்டாம்னு இருந்துட்டா. இப்படியே இருந்தா அவ உடம்பு என்ன ஆகும்? நீ கவனிச்சுக்கோ…” என்ற கிரிஜா, மகன் கணவனோடு கிளம்பினார்.
மேலும் அரை மணி நேரம் கடந்த நிலையில், “அண்ணி... வெந்நீர் வைக்கணும். அவருக்கு இப்போ ஒரு மருந்து கலந்து கொடுக்கணும்…” என்று உத்ராவிடம் அனுமதி கேட்டு நின்றாள்.
“சரி, நீ போ. நான் எடுத்துட்டு வரேன்…”
“இல்ல, பரவால்ல. நானே…”
“உதை விழும் பார்த்துக்கோ... ஒரு மாத்திரை கவரைக் கூட உன்னால ஒழுங்கா பிடிக்க முடியல இதுல வெந்நீர் வைக்க போறாளாம்?!” என்று கடுகடுத்தவர்,
“உங்க இரண்டு பேருல யாரு பேஷண்ட்னு தெரியாத அளவுக்கு இருக்குது உன் நிலைமை... போய் அமைதியா ஆரி கூட இரு. எது வேணும்னாலும் ஃபோன் பண்ணு. நான் தன்ஷி கிட்ட கொடுத்து அனுப்புறேன்...” என்று கூற எதுவும் பேசாமல் மாடிக்கு சென்றாள்.
Comments
Post a Comment