தீராத காதல் தொல்லையோ?!... 25.1

  


அடுத்த நாள் காலை க்ருதி மிருதுளா கீழே இறங்கி வர, அங்கே வாகீஸ்வரியும் சைலேந்தரும் தயாராகி பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தனர்.

“குட் மார்னிங் மாமா, அத்தை…” என்ற மருமகளின் புன்னகையை கண்டவர்களுக்கு மனம் அத்தனை நிறைவாக இருந்தது.

“குட் மார்னிங் மித்து, வேத் என்ன பண்றான்?”

“தூங்கிட்டு இருக்காரு த்தை... நேத்து உட்காரக்கூட நேரமில்லைன்னு சொன்னாங்க. அதுதான் டிஸ்டர்ப் பண்ணாம வந்துட்டேன்.”

“சரிமா, நீ ஏன் இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு வந்த? நேத்து எவ்வளவு அழுகை, இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே?!” என்று இன்னமும் சிவப்பு குறையாமல் இருக்கும் அவள் விழிகளை கண்டு கேட்டார்.

“ஸாரி த்தை... நேத்து நான் ரொம்ப பயமுறுத்திட்டேன் தானே?” என்றாள் மெல்லிய குரலில்.

“கொஞ்சம் இல்ல, ரொம்பவே பயந்துட்டோம். ஆனா இப்போ உன்னை இப்படி பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு...” என்றார் சைலேந்தர்.

“இப்படி ஒரு சூழ்நிலையை நான் எதிர்பார்க்கவே இல்ல அத்தை. எல்லாமே எனக்குப் புதுசு. அதுக்கு நான் மனசளவுல தயாரா இல்லாததால தான் அந்த நேரம் என்னால என்னையே சமாளிக்க முடியலை...” என்று தவிப்போடு அவர்களை பார்த்தாள்.

“எங்களுக்கு புரியுது மித்து நீ கஷ்டபட்டுக்க வேண்டாம்... அதோடு உங்க கல்யானத்துக்கு பிறகு இதெல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு. யார் தடுக்க முடியும்? வேத் வீடு வந்து சேரும் வரைக்கும் எங்களுக்குமே நிம்மதி இல்லை…”

“உன்னோட அழுகையும், அண்ணன் அண்ணியோட பதட்டமும் பார்த்து, எதுவும் செய்ய முடியாம நாங்களும் திண்டாடிப் போயிட்டோம் அதுதான் இனி இப்படி ஒரு சூழல் வரக்கூடாதுன்னு குலதெய்வத்துக்கு பொங்கல் வச்சுட்டு வர நானும் மாமாவும் கிளம்புறோம்.”

“குலதெய்வ கோவிலுக்கா? அப்போ நாங்க அத்தை...”

“உங்களுக்கு எதுக்கு அலைச்சல்? இன்னொரு நாள் போகலாம், நல்லா ரெஸ்ட் எடுங்க. நாங்க எதுவும் சமைக்கலை, உன்னால டிஃபன் செய்ய முடியுமா இல்லை உத்ராவை கொண்டு வர சொல்லட்டுமா?” 

“இல்ல, இல்ல அத்தை... நானே சமைக்கிறேன்..” என்றாள் உற்சாகமாக.

“அப்புறம் சாயந்திரம் வெளியில போயிட்டு வாங்க மனசு கொஞ்சம் லேசாகும்..”

“சரி அத்தை..” என்றவள் அவர் கையில் பையை எடுத்து கொண்டு அவர்களோடு வெளியில் வந்தாள்.

கார் கதவை திறந்தவர், “இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் மித்து..” என்றவர், 

“நாங்க கோயிலுக்கு போறதால அசைவம் சாப்பிடலாமா கூடாதான்னு யோசிக்க வேண்டாம். நம்ம குல தெய்வத்துக்கு அசைவம் சேர்க்கிறது வழக்கம் தான்..”

“சரி த்தை..” என்ற மருமகளின் கன்னம் வருடியவர்,

“இன்னைக்கு நானே உங்களுக்கு அசைவம் சமைச்சு கொடுத்திருக்க வேண்டியது ஆனா உன்னை சமைக்க வச்சுட்டேன்...” என்றார் மெல்லிய குரலில்.

“அதுக்கு என்ன அத்தை? எனக்கு சமைக்க பிடிக்கும் நான் பார்த்துக்கிறேன்..” என்றதில் இருவரும் கிளம்பினர்.

அவர்களை வழியனுப்பி வைத்த மிருதுளா நேராக சமையலறைக்குள் சென்றாள்.

வருடா வருடம் வரலட்சுமி பூஜைக்கு இந்த வீட்டிற்கு வந்து சென்றிருந்ததால், ‘எங்கு, என்ன பொருள் இருக்கிறது என்பது ஓரளவுக்கு அவளுக்கு அத்துப்படி…’ தெரியாத சிலவற்றை உத்ராவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

“நான் வேணும்னா ஹெல்ப் பண்ண வரட்டுமா மித்து?”

“வேண்டாம் அண்ணி, நீங்க தானே என்னோட குக்கிங் குரு! உங்க பேருக்கு எந்த டேமேஜும் வர விட மாட்டேன்..”

“ஹே, முதல்முறையா உன் புருஷனுக்கு சமைச்சு கொடுக்க போற.. ஏதாவது சொதப்பல் ஆச்சு அவன் என்னை தான் கேட்பான் பார்த்துக்கோ..” என்றார் சிரிப்போடு.

“பயப்படாதீங்க அண்ணி, உங்களோட பெயரை காப்பாற்ற வேண்டியது இந்த சிஷ்யையோட கடமை..” 

“ஓஹோ !!” என்றாள் உத்ரா சிரிப்போடு..

“ஆமா நான் செய்ய போற சாப்பாட்டை உங்க தம்பி வாழ்க்கை முழுக்க மறக்க கூடாது. அந்தளவு அட்டகாசமா செய்து அவரை அசத்த போறேன்..”

“அது எனக்கு நல்லாவே தெரியும் மித்து. நீ எதைச் செய்தாலும் ஆத்மார்த்தமா செய்வ. ஆரிக்கு மறக்க முடியாத ஒரு அழகான மெமரியா இந்த நாளை மாத்திடு. பெஸ்ட் ஆஃப் லக்! ..” 

“தேங்க்ஸ் அண்ணி…” என்றவள் ‘என்ன செய்வது?’ என்று யோசிக்க முதலில் தோன்றியது ‘இறால் தொக்கு’ தான்.

‘இறால் தொக்கு’ மிருதுளாவுக்கு மிகவும் பிடித்த உணவு மட்டுமல்ல, அவள் கைப்பக்குவத்தில் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் அவளது சிக்னேச்சர் டிஷ் கூட. 

அதனால் இதையே கணவனுக்கு செய்து கொடுக்க முடிவு செய்து தேவையான இறாலும் சிக்கனும் வரவழைத்து உற்சாகமாக சமையலில் இறங்கினாள். 

உறங்கி கொண்டிருந்த வேதாந்தை சமையலறையில் இருந்த வாசம் எழுப்பி விட்டது. கைப்பேசியை எடுத்து பார்க்க வாகீஸ்வரி உட்பட மேலும் சில அழைப்புகள். 

முதலில் வாகீஸ்வரிக்கு பேசினான்.

“நாங்க கோவிலுக்குப் போயிட்டு இருக்கோம் வேத்... மித்து உனக்காக ஆசையா சமையல் பண்ணிட்டு இருக்கா. எழுந்து போய்ப் பாரு...” என்ற தாயின் குரலில் அத்தனை பூரிப்பு.

“சரிம்மா...” என்றவன், உற்சாகமாக எழுந்து வேகமாக குளித்து விட்டு கீழே இறங்கினான்.

இட்லி, சிக்கன் கிரேவி, இறால் தொக்கு அனைத்தையும் அழகாக டைனிங் டேபிளில் அடுக்கி கொண்டிருந்தவளை வேதாந்த் பின்னிருந்து அணைத்து கொண்டான். 

“எந்திரிச்சுட்டீங்களா?” என்று புன்னகையோடு அவன் புறம் திரும்பினாள்.

“ஹ்ம்ம்!! க்ருதி என்னோடு சேர்ந்து தூங்காம எதுக்கு கஷ்டபடுத்திக்கிற?”

“உங்களுக்காக எவ்ளோ ஆசையா சமைச்சுருக்கேன், இது கஷ்டமா?” என்று கண்கள் சுருங்க கேட்டாள்.

“ஓகே, ஓகே சரண்டர்!! க்ருதியோட சமையலை சாப்பிட நானுமே ஆசையா வந்திருக்கேன்” என்ற கணவனை அமர்த்தி பரிமாறியவள், 

“எனக்கு இறால் ரொம்ப பிடிக்கும் உங்களுக்காக ஆசையா செஞ்சேன்... எப்படி இருக்குன்னு சொல்லுங்க...” என்று குழந்தைத்தனமான எதிர்பார்ப்போடு அவன் முகத்தைப் பார்த்தாள்.

மனைவியின் ஆசையை கண்ட வேதாந்தின் விழிகள் ஒரு நொடி இறால் தொக்கின் மீது நிலைத்தன. 

தனக்கு இறால் அலர்ஜி என்பதால் எப்போதுமே சாப்பிட மாட்டான். ஆனா திருமணத்திற்கு பின்பான மனைவியின் முதல் சமையலை மறுக்க அவனுக்கு மனமில்லை. 

“கொஞ்சமா எடுத்துக்கிட்டா ஒண்ணும் ஆகாது…” என்று மனதிற்குள் நினைத்தபடி எதையும் வெளிக்காட்டாமல் புன்னகையுடன் சாப்பிட தொடங்கியவன் இட்லி சிக்கனை ருசித்து விட்டு, “வாவ்! எக்ஸலண்ட் க்ருதி..” என்றான்.

“இறால் எப்படி இருக்குன்னு சொல்லுங்க..” என்று தானே அவனுக்கு ஊட்டி விட்டு ஆர்வமாகக் கேட்டாள்.

ஆழ்ந்த மூச்சை எடுத்தபடி இறாலை சாப்பிட்டு, “செம்ம டேஸ்ட்…” என்று கட்டை விரலை உயர்த்தி காண்பிக்க இன்னும் இறால் எடுத்து தானே அவனுக்கு ஊட்டினாள்.

“போதும்! க்ருதியும் இன்னும் சாப்பிடலை தானே?!” என்று கேட்டபடி மனைவியை தன் மடியில் அமர்த்தி கொண்டு அவளுக்கு இறாலை ஊட்டி விட தொடங்கினான். 

ஒருவரை ஒருவர் ரசித்தபடி இருவரும் உணவை உண்டு முடித்த அடுத்த சில நிமிடங்களில் வேதாந்த் உடலில் அரிப்பு ஏற்பட தொடங்கியது. 

உதடுகள் லேசாக வீங்கத் தொடங்கின. தொண்டைக்குள் ஏதோ அடைத்துக் கொண்ட உணர்வு ஏற்பட, மூச்சை இழுத்து விடவே அவனுக்கு சிரமமாக இருந்தது. 

அதை தொடர்ந்து அவன் கைகளிலும் கழுத்திலும் சிவப்பு நிற தடிப்புகள் மெல்ல பரவுவதை கண்டு க்ருதி பதறி போனாள். 

“என்னங்க இது?! ஏன் இப்படி ஆகுது..” என்றிட அவன் உடல் சூடானது மட்டுமின்றி அவன் மூச்சும் சற்று கனத்தது.

கணவன் படும் அவஸ்த்தையை கண்டு “என்னாச்சுங்க?” என்றவள் குரலில் அத்தனை நடுக்கம்.

“பிரான்…” என்று மெல்லிய குரலில் சொன்னவன் எழுந்து நிற்க முயன்றான். ஆனால் தலை சுற்றியதில் மீண்டும் சோபாவிலேயே சாய்ந்து விட்டான்.

பதறிப்போனவள் அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க மீண்டும் ‘பிரான்’ என்றான் வேதாந்த். 

“பிரானா...?” என்று ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

அதே நேரம் அங்கே வந்த நிலவனும், அர்ஜூனும் வேதாந்தின் முகத்தைப் பார்த்த நொடி அதிர்ந்து போயினர். 

“மச்சான் என்னடா ஆச்சு..” என்று அர்ஜூன் கேட்க அவன் பதில் சொல்லும் நிலையில் வேதாந்த் இல்லை. 

“மித்து, என்னடா ஆச்சு?” என்றார் நிலவன்.

“ண்ணா அவருக்காக ஆசையா ப்ரான், சிக்கன் சமைச்சு கொடுத்தேன் சாப்பிட்ட பிறகு..” என்றவள் கண்ணீரோடு கணவனின் கையை பிடித்தாள். 

“ப்ச் அவனுக்கு இறால் அலெர்ஜி, எப்போவுமே சாப்பிட மாட்டான் மித்து, உனக்கு தெரியாதா?!” என்றிட மிருதுளாவிற்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

“ண்ணா ஒரு கை பிடிங்க முதல்ல ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம்..”

“என்னண்ணா சொல்றீங்க?” என்று அவர்கள் பின்னே ஓடி வந்தபடி கேட்டாள்.

வேதாந்த்தை காரில் ஏற்றியவன், “ஆமா, அவனுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு செய்ய மாட்டியா?” என்று நண்பன் படும் அவஸ்த்தையை கண்டு தங்கையை கடிந்தான்.

“டேய்... ஹாஸ்பிட்டலுக்கு போகலாம். டைம் வேஸ்ட் பண்ணாத…” வேகமாக காரை கிளப்பிக்கொண்டு சென்றான். 

சில நிமிடங்களில் நடந்த நிகழ்வுகள் க்ருதியை வெகுவாக பாதிக்க என்ன செய்வது என்று புரியாமல் கண்ணீரோடு வாசலிலேயே நின்றிருந்தாள். 

அதேநேரம வேகமாக அங்கே வந்த உத்ரா, “என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாமே மித்து..” என்றபடி அவளை உள்ளே அழைத்து சென்றார். 

“அண்ணி... நான்.. நான் தான் காரணம்.. நிஜமா இப்படி நடக்கும்னு எனக்கு தெரியாது அண்ணி ஐ'ம் ஸாரி…” என்று உடைந்து அழுதாள்.

“அச்சோ ஆரிக்கு ஒன்னும் ஆகாது மித்து... முதல்ல நீ தைரியமா இரு. இதுக்கு முன்னாடியும் இரண்டொரு முறை அவனுக்குஅலர்ஜி ஆகிருக்கு. சரியான ட்ரீட்மெண்ட் எடுத்தா சீக்கிரம் குணமாகிடும்…”

“அண்ணி அண்ணி..” என்று கண்ணீரோடு பார்த்தவளுக்கு வார்த்தை தொண்டை குழியில் சிக்கி கொண்டது. 

உத்ரா எத்தனை சமாதானம் சொல்லியும் அவள் மனம் கேட்பதாக இல்லை. 

“நாமளும் போகலாம் அண்ணி..” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் இடை விடாமல் வழிந்தது.

“நான் இன்னொரு முறை இப்படி செய்ய மாட்டேன்.. அவ்.. அவருக்கு எதுவும் ஆகாது தானே அண்ணி?” என்று கண்ணீரை துடைத்தபடி குழந்தையின் ஏக்கத்தோடு உத்ராவின் முகம் பார்க்க அவளுக்கு உருகி போனது.

ஆதூரமாக மிருதுளாவை அணைத்து கொண்டவள், “எதுவும் ஆகாது... நீ நம்பிக்கையோட வா…” என்று மருத்துவமனைக்கு சென்றனர்.


Comments