“என்னங்க நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் பத்து நாள் கூட இல்ல… சொந்த பந்தத்தில் பாதிக்கும் மேற்பட்டவங்களை அழைக்க வேண்டி இருக்கு. எப்போ தான் ஆரம்பிக்கிறதா இருக்கீங்க?” என்று கூந்தலை பின்னலிட்ட படி ஆஃபிஸுக்கு கிளம்பி கொண்டிருந்த கணவரிடம் வந்தார்.
“அதெல்லாம் இன்னும் ரெண்டு நாள்ல முடிச்சுடுவோம்.. நீ எதுக்கு தேவை இல்லாம டென்ஷன் ஆகிற?” என்றார் மெய்யன்பன்.
“டென்ஷன் இல்லைங்க.. ஒண்ணுக்கு ரெண்டு நிச்சயதார்த்தம் வச்சுருக்கோம்.. காலைல ஒன்னு முடிச்சுட்டு சாயங்காலம் இன்னொன்னு வரப்போற சொந்தத்துக்கு சத்திரத்திலேயே காலையில சாப்பாடு ஏற்பாடு பண்ணனும்…”
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சென்னையில் இருந்து வர போறாங்க அவங்களுக்கும் தங்கறதுக்கான ஏற்பாடு பண்ணனும்.. யாருக்கும் சின்ன குறை வந்துட கூடாது என்கிற எண்ணம் தான்..”
“புரியுது தாமரை, ஆனா நம்ம காலம் மாதிரியா இப்ப?!” அதுதான் அன்பு ஈவன்ட் மேனேஜ்மென்ட் கிட்ட பொறுப்பு கொடுத்து இருக்கானே.. வரவேற்புல இருந்து அலங்காரம், சமையல், தங்க வைக்கறதுக்கான பொறுப்பு எல்லாமே அவங்க பார்த்துப்பாங்க..”
“என்ன தான் ஆளுங்களை போட்டு செய்தாலும் நாம எடுத்து செய்ற மாதிரி வருமா?! அந்த காலத்துல அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா அண்ணன் தம்பின்னு சொந்தங்களால வீடே நிறைஞ்சிருக்கும்..”
“ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டு அவங்க சொந்த பிள்ளையோட விசேஷம்னு அக்கறையா செய்வாங்க… இப்ப என்னடா யார்கிட்டயோ பொறுப்பு கொடுத்துட்டு நாம கையை கட்டி பார்க்க வேண்டியதா இருக்கு..”
“காலத்துக்கு ஏற்ற மாதிரி நாமளும் மாறிக்கனும், மாற்றத்தை ஏத்துக்கனும் தாமரை.. அப்போ தான் எதையும் ரசிக்க முடியும்..”
“என்ன ரசனையோ?! அதுதான் எங்க அக்கா பொண்ணு கல்யாணத்துல அக்கா மாமாவே விருந்தாளி மாதிரி இருந்ததை பார்த்தேனே.. என்னமோ போங்க எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கலை..”
“தாமரை எனக்கு புரியுது.. அன்புவுக்கு தங்கச்சிங்க நிச்சயத்தை எடுத்து செய்யணும்னு ஆசை தான்.. ஆனா அவன் என்ன உன்னை மாதிரி காலையில பத்து மணிக்கு கோர்ட்டுக்கு போயிட்டு அஞ்சு மணிக்கு வீடு திரும்புறவனா இல்லை என்னை மாதிரியா?! அவனோட வேலை எப்படின்னு நமக்கு தான் தெரியுமே..” என்ற மெய்யன்பன் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர்.
அங்கிருக்கும் புகழ்பெற்ற நிறுவனத்தில் கடந்த 35 வருடங்களாக பணியாற்றி வருபவர் அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
இன்னும் சில வருடங்களில்ஓய்வு பெற இருப்பவர். அவர் மனைவி தாமரை வல்லக்கோட்டை தாலுக்கா நீதிமன்றத்தில் பணிபுரிபவர். திருமணமாகி முப்பது வருடங்களாகிறது.
நிறைவான திருமண வாழ்வின் பலனாக முத்து முத்தாய் மூன்று பிள்ளைகள்
மூத்தவன் அன்புச்செழியன், 29 வயது வாலிபன்.
பி டெக் முடித்து விட்டு எம்எஸ்சி தடவியியலில் (Digital Forensics) தேர்ச்சி பெற்று கடந்த ஆறு வருடங்களாக சென்னையில் புகழ்பெற்ற Astra Digital Forensics Pvt. Ltd இல் பணிபுரிந்து வருகிறான்.
அவனுக்கு அடுத்து ஆறு வருடங்கள் கழித்து பிறந்தவள் தமிழினி. மெய்யன்பன் வேலை செய்யும் நிறுவனத்திலேயே கடந்த இரு வருடங்களாக இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு பின் மகிழினி, முதுகலை பட்டப்படிப்பு முதல் வருடம் சேர்ந்திருப்பவள்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே தமிழனிக்கு வரன் பார்க்க தொடங்கி விட்டாலும் பெரிதாக எதுவுமே ஒத்து வரவில்லை. அப்போது தான் ஜோசியர் ஆறு மாதத்திற்கு அவளுக்கு நேரம் சரியில்லை என்று சொன்னதால் அதை தள்ளி போட்டு இருந்தனர்.
அவர் சொன்னது போலவே சென்ற மாத தொடக்கத்தில் மீண்டும் வரன் பார்க்கத் தொடங்கி விட்டனர்.
முதலில் வந்த அகிலன் ஜாதகம் அவளுக்கு அட்டகாசமாக பொருந்தி இருந்தது. தமிழினியை மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடித்து விட்டது.
பெண் பார்ப்பதில் தொடங்கி அடுத்தடுத்த நிகழ்வுகள் வேகமாக நிறைவேறியது. இதில் அவர்களே எதிர்பாராத நிகழ்வு இளைய மகளுக்கும் அதே குடும்பத்தில் சம்பந்தம் அமைந்தது.
ஆம், வீடு பார்க்க வந்த போது அகிலனின் சித்தப்பா மகன் ஹரிஷுக்கு பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்த மகிழினியை மிகவும் பிடித்து விட்டது.
அவனுக்கு மட்டுமல்ல அவன் குடும்பத்திற்க்குமே மகிழினியின் குணமும் பேச்சும் பிடித்து போனது. அதனால் அடுத்த இரண்டாம் நாளே அவளைப் பெண் கேட்டு வந்திருந்தனர்.
மகன் சைபர் செக்யூரிட்டியில் இருப்பதால் அகிலன், அவன் பெற்றோர், அவன் பூர்வீகம் என்று அத்தனையும் சல்லடை போட்டு சலித்து ‘அகிலன் தங்கைக்கு ஏற்ற வரன்’ என்று சான்றிதழ் கொடுத்து இருந்தான்.
அந்த குடும்பத்திலிருந்து இரண்டாவது சம்பந்தம் வரும் போது அவர்களுக்கு பெரிதாக மறுக்க காரணம் இல்லை.
அதோடு மகிழினிக்கும் ஹரிஷை பிடித்து போக அவர்கள் திருமணமும் உறுதியானது.
திருமணத்திற்கு பின்னரும் மகிழினி படிப்பை தொடரலாம் என்று மாப்பிள்ளை விட்டார் சம்மதிக்க அதற்கு மேலும் தாமதிக்காத்து காலை பெரிய மகளின் நிச்சயதார்த்தம் மாலை இளைய மகளின் நிச்சயதார்த்தம் என்று முடிவு செய்து இருந்தனர்.
இவர்களின் திருமணத்தை முடித்த மூன்று மாதத்திற்குள் மகனின் திருமணத்தையும் முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பவர்கள் ஒருபுறம் பெண்களின் ஜாதகங்களையும் பொருத்தம் பார்க்க சொல்லி ஜோசியரிடம் கொடுத்து இருக்கின்றனர்.
“அம்மா சட்னி தாளிச்சுட்டேன், சாதம் வடிச்சாச்சு, குழம்பு நிறுத்திடட்டுமா?” என்றாள் தமிழ்.
“நிறுத்திடு தமிழ், ஆமா பொரியல் என்ன ஆச்சு?”
“மகிழ் பண்ணிட்டு இருக்கா ம்மா..”
“உப்பு அளவா போட சொன்னியா?! நேத்து வாழைக்காய் பொறியல்ல கொட்டி வச்சிருக்கா.. வாயிலேயே வைக்க முடியலியா..” என்றவர் இளைய மகளுக்கும் திருமணம் முடிவாக விட்டதில் சமீபமாக சமையல் பழக்க தொடங்கியிருந்தார்.
மூன்று பெண்கள் இருப்பதால் அனைவரும் வேலை, கல்லூரி என்று பிஸியாக இருந்தாலும் பரபரப்பு இல்லாமல் காலை மற்றும் மதிய உணவை விரைவாக முடித்து விடுவார்கள்.
“சொல்லிட்டேன் ம்மா… பக்கத்துல இருந்து எவ்ளோ போடணும்னு நானே சொல்லிக் கொடுத்தேன்.. தோசை வார்க்க ஆரம்பிக்கட்டுமா?”
“சரி..”என்றவர் அவர்களுக்கான மதிய உணவை கட்ட தொடங்கினார்.
“ம்மா நேத்து காலையில ஆஃபீஸுக்கு போன அண்ணா இன்னும் வரலையே..”
“வேலை இருக்குன்னு சொல்லிட்டு தானே கிளம்பினான். இப்போ எதுக்கு நீ அவனை தேடுற?”
“எங்க காலேஜ்ல சைபர் செக்யூரிட்டி பற்றி செமினார் கொடுக்க சொல்லி அண்ணா கிட்ட கேட்க சொல்லி இருக்காங்க.. இப்போ கால் பண்ணினாலும் நாட் ரீச்சபிள் அதுதான் கேட்டேன்..”
“செமினார் எப்போ?”
“இன்னும் இரண்டு வாரத்துல.. இன்னொரு ரிசோர்ஸ் பெர்சன் கூப்பிடறதா இருந்தாங்க.. அப்புறம் அண்ணா நியாபகம் வரவும் முதல்ல அவரை ட்ரை பண்ண சொன்னாங்க..”
“சரி சரி, வந்துடுவான் மகிழ்… நீ எதையும் யோசிக்காம கிளம்பு..” என்ற அதேநேரம் பதினைந்து மாடிகள் கொண்ட கண்ணாடி கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்த Astra Digital Forensics limited இல் மட்டும் வழக்கத்திற்கு மாறான பரபரப்பு காணப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள், வங்கி நிர்வாகிகள், ஐ.டி. பொறியாளர்கள் என பலர் அங்கும் இங்கும் அவசரமாக நடந்து கொண்டிருந்தனர்.
ஒரு பெரிய LED திரையில் நூற்றுக்கணக்கான டிஜிட்டல் கோப்புகள் திறந்து கிடந்தன.
“ஸார் இந்த CCTV வீடியோவை நீதிமன்றத்தில் நாளைக்கே சமர்ப்பிக்கணும்னு க்ளைண்ட் சொல்றாங்க..” என்று ஒருவர் சொல்ல,
“வீடியோ ஒரிஜினலா... இல்ல எடிட் பண்ணதான்னு இன்னும் தெரியல..” என்றார் மற்றொருவர்.
“மொபைலிலிருந்தும் சில போட்டோக்கள் ரிக்கவர் பண்ணிருக்கோம் ஸார்.. பட் அது எந்தளவு இந்த கேஸ்ஸோடு ஒத்து போகும்னு தெரியலை..” என்று ஊழியர்கள் பதற்றமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்களின் பதற்றமோ, அவசரமோ இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் நம் நாயகன் அன்புச்செழியன், Senior Digital Forensics Analyst.
வெள்ளை நிற முழுக்கை சட்டை, கண்ணில் மெல்லிய ஃபிரேம் கண்ணாடி என்று இருந்தவனின் தீர்க்கமான பார்வை கணினித் திரையை விட்டு ஒரு நொடியும் மாறவில்லை.
அவனுடைய விரல்கள் விசைப்பலகையில் இசை வாசிப்பது போல வேகமாக நகர்ந்தன… சில நொடிகளில் திரையில் இருந்த படத்தை பல மடங்கு பெரிதாக்கினான்.
அருகில் நின்றிருந்த இளம் பெண் ஆய்வாளர் “ஸார்... இந்த வீடியோ ஒரிஜினல்தானே?!” என்றாள்.
“இல்லை..” என்றான் நிதானமாக.
“எப்படி ஸார் இவ்வளவு உறுதியா சொல்றீங்க?” என்றதுமே திரையைச சுட்டி காண்பித்தவன், “இந்த ஃபிரேமை பாருங்க..” என்றான்.
அனைவரும் அருகே வந்து பார்க்க, “வீடியோ முழுக்க 30 Frames Per Second-ல ஓடுது..” என்றவன் அடுத்த ஃபிரேமை திறந்தான்.
“ஆனா... இந்த இரண்டு விநாடி மட்டும் Frame Rate மாறியிருக்கு…” என்றபடி மற்றொரு கோப்பை திறந்து, “இந்த நிழலை கவனிங்க…” என்றான்.
அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை. நிழலுக்கும் வழக்குக்கும் என்ன சம்பந்தம் என்று குழப்பத்துடனே அவனை பார்க்க, “மாலை ஆறு மணிக்கு இந்த அளவுக்கு சூரிய ஒளி இருக்க முடியாது..” என்றதில் அத்தனை அமைதி அறையினுள்.
இன்னொரு விண்டோவைத் திறக்க, அதில் “Metadata…” என்றிருந்தது.
ஒரு வீடியோவை மாற்றும் போது எடிட்டிங் செய்த தடயங்கள் பல நேரங்களில் மெட்டாடேட்டாவில் மறைந்து கிடக்கும்.
அதை தொடர்ந்து சில நொடிகளில் திரையில் ஒரு தேதி தோன்றியது.
Edited : 12.43 AM என்பதை சுட்டி காண்பித்த அன்புச்செழியன், “ஒரிஜினல் எவிடென்ஸ் இல்ல… யாரோ இந்த வீடியோவை எடிட் பண்ணி, உண்மையை மாற்ற முயற்சி பண்ணிருக்காங்க…” என்றபடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.
“மிஸ்டர் அன்புச்செழியன்... உங்களுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடிஞ்சது?” என்றார் ஒரு போலீஸ் அதிகாரி வியப்புடன்.
“டிஜிட்டல் ஆதாரம் என்னைக்கும் பொய் சொல்லாது ஸார்.. அதைப் பார்க்கிற மனிதர்கள் தான் சில நேரங்களில் பொய் சொல்வார்கள்…”
“ஆனால் அந்த பொய்யை உருவாக்கியவன் யார் என்பதை கண்டுபிடிப்பது தான் என் வேலை” என்றான் மெல்லிய புன்னகையுடன்.
Comments
Post a Comment